
தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் பின்னடைவைச் சந்தித்துள்ளதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தொழில் தொடங்குவதற்காக முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழகம் வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளதாக மத்திய அரசின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இது, அதிமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுவதாக உள்ளது.
2016-ஆம் ஆண்டு கிடைத்த முதலீட்டில் மூன்றில் ஒரு பங்கு முதலீட்டைக்கூட 2017-ஆம் ஆண்டில் பெறமுடியாமல், தொழில் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இளைஞர்களின் வேலைவாய்ப்பும் மாநிலத்தின் முன்னேற்றமும் பெருமளவில் கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழகத்தில் பொறுப்புள்ள அரசு இல்லை என்ற செய்தி உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களைச் சென்றடைந்து விட்டது.
அதனால், முதலீட்டாளர்களை ஈர்க்க துபாயில் சாலைக் கண்காட்சி நடத்துவதாலோ இரண்டாம் உலக முதலீட்டாளர் மாநாட்டைக் கூட்டுவதாலோ தமிழகத்தின் தொழில்துறைக்கு எவ்வித விமோசனமும் பிறக்கப் போவதில்லை.
எஞ்சியிருக்கும் நாள்களிலாவது முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கவும் புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் பொறுப்புள்ள நிர்வாகத்தையும் அதிமுக அரசு அளிக்க வேண்டும்.
தமிழ்நாடு தொழில்துறையில் பின்தங்கிவிட்டதை மாற்றியமைக்க முதல்வர் முயற்சிக்க வேண்டும். அப்படிச் செய்ய முடியாவிட்டால் தானாகவே முன்வந்து பதவி விலக வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.