பீனிக்ஸ் பறவையாய் மீண்ட அரசுப் பள்ளி 

அரசுப் பள்ளியில் ஒரு மாணவர்கூட இல்லாததால் மூடிவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு, உத்தரவும் பிறப்பிக்கப்பட்ட நிலையிலும்
பீனிக்ஸ் பறவையாய் மீண்ட அரசுப் பள்ளி 
Published on
Updated on
2 min read

வேதாரண்யம்: அரசுப் பள்ளியில் ஒரு மாணவர்கூட இல்லாததால் மூடிவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு, உத்தரவும் பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், பீனிக்ஸ் பறவையாய் மீண்டு வந்த அரைநூற்றாண்டை கடந்த அரசுப் பள்ளி இப்போது 27 மாணவர்களுடன் செயல்பட்டு வருகிறது.

 நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள தகட்டூர் ஊராட்சிக்குள்பட்ட ராமகோவிந்தன்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி 7.6.1962-இல் தொடங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வெளியேறிய இப்பள்ளியில் படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது. 2013-ஆம் ஆண்டில் 5-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 3 மாணவர்கள் வெளியேறும் நிலையில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே 2-ஆம் வகுப்பில் தொடரும் நிலை ஏற்பட்டது. அப்போது, இங்கு 2 ஆசிரியர்களும், சத்துணவு பணியாளர்களும் இருந்து வந்தனர்.

 இதுகுறித்து அப்போது தினமணியில் சிறப்பு செய்தி வெளியானது. இந்நிலையில், 2014 ஜூன் மாதம் பள்ளி திறந்தபோது எஞ்சியிருந்த ஒரு மாணவரும் வேறு பள்ளிக்குச் செல்ல விருப்பம் தெரிவித்ததால் மாற்றுச்சான்று அளிக்கப்பட்டது.

 இதையடுத்து, 2014 ஜூன் 6-இல் ஆய்வு செய்த கல்வித்துறை அலுவலர்கள் புதிய சேர்க்கைக்கு வாய்ப்பில்லாத நிலையில், அப்பள்ளியின் செயல்பாட்டை முடக்கி, அதுகுறித்து அரசு முடிவெடுத்து அறிவிக்கும் வரை அங்கு பணியாற்றிய 2 ஆசிரியர்களையும் வேறு பள்ளி பணிக்கு அனுப்பியது.

சத்துணவு பணியாளரும் மாறுதல் செய்யப்பட்டு திட்டமும் நிறுத்தி வைக்கப்பட்டது. அரை நூற்றாண்டை கடந்த அரசுப் பள்ளி மூடும் நிலைக்கு வந்ததால் நடுநிலையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 இதனிடையே, மறு ஆய்வுக்குள்படுத்திய மாவட்ட நிர்வாகம் பள்ளியைத் தொடர்ந்து செயல்படுத்த முயற்சித்தது. இதையடுத்து, 16.6.2014-இல் தியாகராஜபுரம் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் க. சுப்பிரமணியன் மாற்றுப் பணியாக ராமகோவிந்தன்காடு பள்ளிக்கு அனுப்பப்பட்டார். தேடிப் பிடித்து ஒரு மாணவரை சேர்த்த அந்த ஆசிரியர், பள்ளி மீண்டும் செயல்பட அச்சாரமிட்டார். இதனால், அந்த ஆசிரியர் மனமொத்த மாறுதலின் கீழ் (26.6.14 முதல்) அதேபள்ளியில் பணியைத் தொடர்ந்தார். அருகில் உள்ள மருதூர் தெற்கு கிராமத்தை சொந்த ஊராகக்கொண்ட அந்த ஆசிரியரும், பொதுமக்களின் உதவியோடு மாணவர் சேர்க்கைக்கு முயற்சித்தார்.

 இதன் பயனாக ஆங்கில வழியில் படித்த 7 மாணவர்கள் உள்ளிட்ட 10 பேர் அக்கல்வியாண்டில் சேர்க்கப்பட்டனர்.

 இதனிடையே, இங்கு ஆங்கில வழி இலவச கல்வித் திட்டமாக மாற்றப்பட்டு, தலைமையாசிரியராக மஞ்சுளாவும் பணியாற்றினார். தலைமையாசிரியருடன் சேர்ந்து மாணவர் சேர்க்கையில் முனைப்பு காட்டிய ஆசிரியர் சுப்பிரமணியன் 2015-16 ஆம் கல்வியாண்டில், தனியார் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி படித்து வந்த தன் மகன் கவிபாரதியை சேர்த்துள்ளார். இவருடன் அந்த ஆண்டில் 7 மாணவரையும், 2017-18-இல் 9 பேரும் சேர்ந்தனர். தற்போது, இப்பள்ளியில் 27 மாணவ, மாணவியர் படித்து வெள்ளிக்கிழமை நிகழ் கல்வியாண்டை நிறைவுசெய்து கோடை விடுப்பில் சென்றனர்.

 அரசு சீருடை என்றாலும், தனியார் பள்ளி மாணவர்களைப் போல, அடையாள அட்டை, ஷூ, புத்தகப் பை, நாள்குறிப்பேடு போன்றவை தன்னார்வலர்கள் உதவியோடு அளிக்கப்படுகிறது. மாணவர்களின் நோட்டுகளில் கண்களில் ஒற்றிக் கொள்ளும் வகையில் அவர்கள் எழுதியத் தமிழ், ஆங்கில எழுத்துக்கள் வியக்கச் செய்கின்றன.

 நெகிழி இல்லாத பள்ளி, தூய்மையான இயற்கை காற்றோட்டம், பள்ளமாக இருந்த நிலம் நிரவப்பட்டு பிரமாண்டமான விளையாட்டு அரங்கம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட பயன்பாட்டுக்கு ஒலிபெருக்கி, கணினி, மாற்றி அமைக்கப்பட்ட கழிப்பறை, புதிய வகுப்பறை கட்டடம், 17 புரவலர்கள் நிதி திட்டம் என பல அம்சங்கள் பொதுமக்களின் உதவியோடு செய்யப்பட்டுள்ளதை அடுக்கிக்கொண்டே போகலாம். இங்குள்ள மாணவர்கள் செயல்வழி கற்றல், அறிவியல் கண்காட்சி, எழுத்துப் பயிற்சி, தனித்திறன்போன்ற போட்டிகளில் மாவட்ட, வட்டார அளவில் சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர். தொடக்கத்தில், மாணவர்கள் வந்து செல்ல அப்போதைய ஊராட்சித் தலைவர் எம்.எஸ். அமிர்தகடேசுவரன் தனது சொந்த பணத்தில் ஆட்டோ வாடகை அளித்து வந்த நிலையில், தற்போது பள்ளியால் ஈர்க்கப்பட்ட பெற்றோர்களே அளித்து வருகின்றனர். 2016-ஆம் ஆண்டில் பள்ளித் தலைமையாசிரியராக பொறுப்பேற்றுள்ள பா. மீனாட்சி, வரும் கல்வி ஆண்டில் 10-க்கும் குறையாத மாணவர்களை சேர்க்க முனைப்பு காட்டி வருகிறார்.

 இதுகுறித்து மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து முனைப்பு காட்டி வரும் ஆசிரியர் க. சுப்பிரமணியன் கூறியது: இந்த ஊர் மட்டுமல்லாது வாய்மேடு, பஞ்சநதிக்குளம், மருதூர் போன்ற ஊர் மாணவர்களும் படிக்கின்றனர். 2020-இல் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதே தனது கனவு என்றார்.

 மூடும் நிலைக்கு தள்ளப்பட்ட பள்ளி மீண்டு வருவதில் பல தரப்பினரின் பங்களிப்பு இருந்து வரும் நிலையில் ஆசிரியர் சுப்பிரமணியனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் அமைந்துள்ளது என்றால், அது மிகையில்லை. மனமொத்த மாறுதலில் பணியாற்ற முன்வந்த கனவு ஆசிரியரின் முயற்சிகள் யாவும் முன்னுதாரணமாக அமைந்து வருகின்றன.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com