
டிடிவி தினகரன் தரப்பு ஆதரவு எம்எல்ஏ.-க்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்ததே சட்ட விரோதம் என பேரவைத் தலைவர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், பேரவைத் தலைவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்யமா சுந்தரம் வாதங்களை முன்வைத்தார்.
சட்டவிரோதம்: தமிழக சட்டப்பேரவைத் தலைவர் 18 எம்.எல்.ஏ.-க்களை தகுதி நீக்கம் செய்த நடவடிக்கையில் இயற்கை நீதி மீறப்படவில்லை. எவ்வித பாரபட்சமும் இல்லாமல், 18 எம்.எல்.ஏ.-க்களுக்கும் போதுமான கால அவகாசத்தை அவர் வழங்கினார். உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2016 -ஆம் ஆண்டு நடந்த வழக்கு ஒன்றின் தீர்ப்பில், மாநில முதல்வரை மாற்றுவதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இல்லை' என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் இந்த எம்.எல்.ஏ.-க்கள் 18 பேரும் கடிதம் கொடுத்ததே சட்டவிரோதம்.
உத்தரவு சரி: எம்.எல்.ஏ.-க்கள் சட்டம் தெரியாதவர்கள் இல்லை. முதல்வரை மாற்றக் கோரி 18 எம்.எல்.ஏ.-க்கள் கடிதம் கொடுத்தது தவறு' என நீதிபதி எம்.சுந்தர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஆட்சியைக் கலைக்கும் நோக்கில் செயல்பட்ட இவர்களது செயலை சாதரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர்களை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு சரியானது. தகுதி நீக்கம் செய்து உத்தரவிட அவருக்கு முழு அதிகாரம் உள்ளது என ஆர்யமா சுந்தரம் வாதிட்டார்.
பேரவைத் தலைவர் தரப்பு வாதம் நிறைவடைந்ததையடுத்து, தமிழக முதல்வர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தனது வாதத்தைத் தொடங்கினார். இந்த வாதம் செவ்வாய்க்கிழமையும் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





