இனி சென்னை ஏர்போர்ட்டுக்கு செல்லும் போதெல்லாம் நீங்கள் இந்த ரோபோக்களை சந்தித்துப் பேசலாம்!

சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளுக்கு சேவை செய்வதற்காகவும்
இனி சென்னை ஏர்போர்ட்டுக்கு செல்லும் போதெல்லாம் நீங்கள் இந்த ரோபோக்களை சந்தித்துப் பேசலாம்!
Published on
Updated on
2 min read

சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளுக்கு சேவை செய்வதற்காகவும் இரண்டு ரோபோக்களை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விமான சேவைகளைத் பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்தப் புதிய வசதியை செய்துள்ளது சென்னை விமான நிலையம்.

நேற்று (15 ஆகஸ்ட், 2018) சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இந்த இரண்டு ரோபோக்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சந்திரமெளலி தலைமையிலான அதிகாரிகள் இந்த சேவையைத் தொடங்கி வைத்தனர். நேற்று விமான நிலையத்துக்கு வருகை வந்த பயணிகளுக்கு சுதந்திர தினவிழா வாழ்த்துகளைத் தெரிவித்து, இனிப்புகள் வழங்கின ரோபோக்கள். 

இந்த இரண்டு ரோபோக்களும் தற்போது சோதனை முறையில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை பெங்களூருவில் இருந்து வாடகைக்கு சென்னைக்கு வரவழைப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு பாதுகாப்புச் சோதனை, விமான டிக்கெட் பரிசோதனை, உடைமைகள் சோதனை செய்யும் இடங்கள், விமான நிலையம் உள்ளே சென்றதும் விமானங்கள் குறித்த தகவல்கள் போன்றவற்றையும் அது குறித்த சந்தேகங்களைத் தீர்ப்பதற்கு இந்த ரோபோக்கள் உதவி புரியும். முன்னதாக இதற்கென தனியாக சேவை மையம் இருந்தது. ரோபோ சுலபமாக பயணிகளை கவரும் என்றபடியால் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  மக்களின் மொழி வழக்கிற்கு ஏற்ப இந்த ரோபோக்களும் பதில் தரும் என்பது இதன் சிறப்பு ஆகும். அதோடு ஓரிடத்தில் நில்லாமல், தன்னிச்சையாக நகர்ந்து செல்லும் திறன் கொண்டவை இந்த ரோபோக்கள். மேலும் இந்த ரோபோக்களுக்கு பயணிகள் மத்தியில் உள்ள வரவேற்பு மற்றும் அதன் செயல்பாடுகளை பொறுத்து சென்னை உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகளுக்கு சேவை செய்ய இவை நிரந்தரமாக பயன்படுத்தப்படும் என்றார் விமான ஆணையக இயக்குனர் சந்திரமெளலி.

இந்த புதிய ரோபோக்களின் சேவையைக் காண நேற்று மாணவ-மாணவிகள், குழந்தைகள் ஆகியோர் அதிகளவில் விமான நிலையம் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்தன ரோபோக்கள். இதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த பயணிகள் மற்றும் குழந்தைகள் பதிலுக்கு தங்கள் வாழ்த்துக்களை ரோபோக்களுக்குத் தெரிவித்தனர்.

உலக நாடுகளுள் பல விமான நிலையங்களில் இந்த ரோபோ சேவை உள்ளது. துபய்யில் ரோபோ காப் என்று அழைக்கப்படும் ரோபோ உள்ளன. இவை பயணிகளின் பாதுகாப்புக்காக அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com