
தமிழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட வருவாய் வட்டங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்தை சீரமைத்து ஆனைமலையை தலைமையிடமாகக் கொண்டு மார்ச்ச நாயக்கன்பாளையம், கோட்டூர் ஆகிய மூன்று வட்டங்கள் மற்றும் 31 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி புதிதாக ஆனைமலை வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வருவாய் வட்டத்தைச் சீரமைத்து அஞ்செட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வருவாய் வட்டங்களை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
புதிய கட்டடங்கள்: புதிய வருவாய் அலுவலகக் கட்டடங்களையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம், வட்டாட்சியர் குடியிருப்புக் கட்டடம், கடலூர் மாவட்டம் புவனகிரி, வேலூர் மாவட்டம் நெமிலி, பேர்ணாம்பட்டு ஆகிய இடங்களில் அலுவலகம் மற்றும் குடியிருப்புக் கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.
மின்னணு நூலகம்: வருவாய்த் துறையைப் போன்று, விளையாட்டுத் துறையிலும் புதிய திட்டங்களை முதல்வர்
பழனிசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தார். அதன்படி, பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர்., விளையாட்டு அரங்க வளாகத்தில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக நூலக வளாகத்தில் இணையதள வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள மின்னணு நூலகத்தையும் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பா.பாலகிருஷ்ணா ரெட்டி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.