
தமிழகத்தில் 25 குழந்தைகளுக்கும் குறைவான குழந்தைகளுடன் செயல்பட்டு வரும் 8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட சமூகநல ஆணையர் அமுதவள்ளி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
அரசு பள்ளிகளில் ஏழை மாணவர்களின் வருகையை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் அன்று முதல்வராக இருந்த காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.
அதன் பிறகு எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக மாற்றியதுடன் 10 ஆம் வகுப்பு வரை நீடித்து வழங்க உத்தரவிட்டார். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டதை தொடர்ந்து மற்ற மாநிலங்களும் சத்துணவு திட்டத்தை நிறைவேற்றி வருகின்றன. மத்திய அரசும் சத்துணவு திட்டத்துக்கு உதவி அளித்து வருகிறது.
தற்போது தமிழ்நாட்டு 43 ஆயிரத்து 200 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 50 லட்சம் ஏழை மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். ஒவ்வொரு சத்துணவு மையத்திலும் அமைப்பாளர், உதவியாளர் என 2 ஊழியர்கள் வீதம் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆயிரம் மாணவர்கள் வரை பயிலும் பள்ளிகளில் உள்ள பல சத்துணவு மையங்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
இதையடுத்து மாணவர்கள் குறைவாக வரும் மையங்கள் குறித்து அரசு கணக்கெடுத்து வருகிறது. இதில் 25-க்கும் குறைவான மாணவர்களுடன் 8 ஆயிரம் சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த மையங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், மூடப்பட உள்ள மையங்கள் மூலம் பயன்பெறும் குழந்தைகளுக்கு வேறு மையங்களில் இருந்து உணவு தயாரித்து தேவைக்கேற்ப அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி கூறுகையில், “சத்துணவு மையங்களில் பணியிடங்களை ஒரே சீராக்கும் வகையில் 1992-ஆம் ஆண்டே அரசு இந்த முடிவு எடுத்தது. அது தான் படிப்படியாக அமல்படுத்தப்படுகிறது. நேரடியாக சத்துணவு மையங்கள் மூடப்படவில்லை என்றார்.
அரசின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு சத்துணவு திட்ட ஊழியர்கள் சங்க செயலாளர் ஆர்.நூர்ஜகான் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், அரசு எடுத்துள்ள முடிவால் சத்துணவு திட்டம் மேலும் பலவீனம் அடையும் என கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.