தமிழகத்தின் புராதன சின்னங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற புகார் உண்மைதான்: மதுரை உயர் நீதிமன்றக் கிளை 

தமிழகத்தின் புராதன சின்னங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற புகார் உண்மைதான் என்று ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பான வழக்கு ஒன்றில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் புராதன சின்னங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற புகார் உண்மைதான்: மதுரை உயர் நீதிமன்றக் கிளை 
Published on
Updated on
1 min read

மதுரை: தமிழகத்தின் புராதன சின்னங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற புகார் உண்மைதான் என்று ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பான வழக்கு ஒன்றில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் முக்கியமான அகழாய்வுப் பகுதிகளில் ஒன்றான ஆதிச்சநல்லூரில் நிறுத்தப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகளை மீண்டும் துவக்க வேண்டும் எனவும், ஏற்கனவே நடைபெற்ற அகழாய்வுகள் தொடர்பான விரிவான அறிக்கையினை வெளியிட வேண்டும் என்றும் கோரி, செய்துங்கநல்லூரைச் சேர்ந்த  எழுத்தாளர் காமராஜ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கானது செவ்வாயன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அவர் தெரிவித்ததாவது:

தமிழகத்தின் புராதன சின்னங்கள் மற்றும் அதுதொடர்பான தொல்லியல் ஆய்வுகளை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற புகார் உண்மைதான். மத்திய அரசு மட்டுமல்ல; மாநில அரசுமே இதில் அக்கறை காட்டுவது இல்லை.  அத்துடன் தமிழகத்திற்கு உரிய கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவது பற்றியும் அரசுகள் கண்டுகொள்வதில்லை.

எனவே தற்பொழுது மத்திய தொல்லியல் துறையின் சார்பில் தமிழகத்தில் எத்தனை இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெறுகிறது என்பது தொடர்பான விபரங்களும், இதுவரை அகழாய்வுப் பணிகள் நடைபெற்ற இடங்கள் பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலை தொடர்பான விரிவான தகவல்களும் நாளை மறுநாள் (வியாழன்) அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.  

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்பொழுது மத்திய தொல்லியல் துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடர்பான அறிக்கை தயார் நிலையிலிருப்பதாகவும், மேலதிகாரிகள் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் 2002-2005 ஆண்டில் நடைபெற்ற அகழாய்வு தொடர்பான  அறிக்கைகளை வெளியிட இவ்வளவு தாமதம் ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com