
கரூர்: கடவூர் மலையில் அதிக எண்ணிக்கையில் வாழும் தேவாங்கு இனத்தை பாதுகாக்க சரணாலயமாக அறிவிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகில் ஒரு சில இடங்களில் மட்டுமே காணப்படும் சாம்பல் நிற தேவாங்கு அரிய வகை பாலூட்டி இனத்தைச் சார்ந்தது. இந்த இனமானது அழிந்துவரும் வனவிலங்கு பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
மனிதர்களின் முன்னோடி என கருதப்படும் இந்த வனவிலங்கு, தென் தமிழக நிலப்பரப்பில் செந்தேவாங்கு (ப்ர்ழ்ண்ள் ற்ஹழ்க்ண்ஞ்ழ்ஹக்ன்ள்), சாம்பல் நிறத்தேவாங்கு (ப்ர்ழ்ண்ள் ப்ண்க்ங்ந்ந்ங்ழ்ண்ஹன்ள்) என இருவகை உள்ளது. இந்த தேவாங்குகளும், இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் என்றழைக்கப்படும் (ஐ.யூ.சி.என்.) அமைப்பால் அழியும் நிலையில் உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இரை தேடும் குரங்கு இனத்தைச் சேர்ந்த இந்த தேவாங்குகளில் சாம்பல் நிற தேவாங்கு திருச்சி, திண்டுக்கல், கரூர் மாவட்டங்கள் இணையும் பகுதியான அய்யலூரில் காணப்பட்டாலும், கடவூர், அதனைச் சுற்றியுள்ள இலையுதிர் காடுகள், குன்றுகள், விவசாயத் தோட்டங்களில் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றன. இதனால்தான் அண்மையில் சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பானது கரூர், திண்டுக்கல் மாவட்ட எல்லைப் பரப்பை சாம்பல் நிற தேவாங்குகளின் இருப்பிடமாக அறிவித்துள்ளது.
தேவாங்கு பெரும்பாலும் சிறிய மரங்கள், மரப்பொந்துகள், பாறைகளின் இடுக்குகளில் வாழ்கின்றன. மேலும், இலையுதிர் காடுகள், முட்புதர் காடுகளில் காணப்படும் தாவர இனங்களான திருகுக்கள்ளி, வெப்பாலை, உசில், பொரசு, முள் கிழுவை மற்றும் வெல்வேல் போன்ற மரக்கிளைகளில் வாழ்கின்றன. அடர்த்தி குறைந்த சுமார் 300 மீட்டர் முதல் 800 மீ. உயரம் கொண்ட மலைக்காடுகளில் அதிக எண்ணிக்கையிலும், 800மீ. முதல் 1,500 மீ. உயரத்திற்கு மேல் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகின்றன. ஒரு வளர்ந்த சாம்பல் நிற தேவாங்கு சுமார் 35 செ.மீ முதல் 45 செ.மீ. நீளமும், 300 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.
உண்ணும் உணவு: முக்கிய உணவாக தட்டான்பூச்சி, வெட்டுக்கிளி, வண்டுகள் போன்ற பூச்சிகள், இலைகள், செடி, கொடிகளில் கொழுந்து இலைகளை உணவாக உட்கொள்கின்றன. தேவாங்குகள் பகலில் ஓய்வெடுத்து, இரவில் இரையைத் தேடும்.இதன் இனப்பெருக்க காலமான கோடை காலத்தில் இரு குட்டிகளை ஈன்றெடுக்கும். இவ்விலங்கின் கருத்தரிப்பு காலம் 166 முதல் 169 நாள்களாகும்.
இதன் குட்டிகளுக்கு 5 முதல் 6 மாதங்கள் வரை பாலூட்டி தன் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளும். பிறக்கும்போது குட்டிகளின் எடை 30 கிராம் வரையே இருக்கும். தேவாங்குகள் 12-15 ஆண்டுகள் வரை உயிர் வாழும் என்று கூறப்படுகிறது. சாம்பல் நிற தேவாங்குகளை பெரும்பாலும் மலைப்பாம்பு, கழுகுகள் உணவாக உட்கொள்கின்றன. இத்தகையை அரிய வகை வனவிலங்கை அதிகளவில் கொண்டிருக்கும் கடவூர் மலையை வன சரணாலயமாக மாற்றினால் சாம்பல் நிற தேவாங்கை அழிவிலிருந்து காக்க முடியும்.
இதுகுறித்து சமூக நல ஆர்வலர்கள் மேலை.பழநியப்பன், தென்னிலை கோவிந்தன் ஆகியோர் கூறுகையில், ஒரு நாட்டின் இயற்கை வளம் பாதுகாக்கப்பட்டால்தான் அந்நாடு செழுமையாக இருக்கும். கரூர் மாவட்டத்தில் வனங்களின் பரப்பளவு மிகவும் குறைவாக இருப்பதால்தான் இங்கு பருவமழையும் குறைவாக பெய்கிறது. நாடு விடுதலை அடைவதற்கு முன்பு 63,000 ஹெக்டேர் நிலப்பரப்பைக் கொண்ட கடவூர் மலை, 1979-80களில் அரசுடைமையாக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையின் கீழ் வந்த பிறகு திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் வனப்பகுதியில் வசித்து வந்த இந்த தேவாங்குகள் கடவூர் மலைக்கு இடம் பெயர்ந்து, அவை வாழ்வதற்கு உகந்த இடமாக மாறி இப்போது உலகிலேயே அவை அதிக அளவில் வாழும் இடமாக அறிவிக்கப்பட்டிருப்பது பெருமைக்குரியதாகும்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கடவூர் மலையை சரணாலயாமாக அறிவிக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். அதனால் சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு வன விலங்கு ஆராய்ச்சியாளர்கள் அதிக அளவில் வர வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் அ.அன்பு கூறுகையில், 1972ஆம் ஆண்டில் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி தேவாங்கு வனவிலங்கு பட்டியலில் அட்டவணை 1-இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது.
இதன் எண்ணிக்கையை பாதுகாப்பதோடு, பெருக்க அறிவியல் ரீதியாக ஆராய்ச்சி மற்றும் கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடவூர் வனப்பகுதியில் தேவாங்கை பாதுகாக்கும் வகையில் சரணாலயமாக்க அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.