குமரி மாவட்டத்தில் விடிய விடிய கன மழை: வீடுகள் இடிந்தன; மின்சாரம் துண்டிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு விடிய, விடிய இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில், 2 வீடுகள் இடிந்தன; பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கனமழை காரணமாக இரணியல் வள்ளியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்
கனமழை காரணமாக இரணியல் வள்ளியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்
Updated on
2 min read


கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு விடிய, விடிய இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில், 2 வீடுகள் இடிந்தன; பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மே இறுதியில் தொடங்கியது. குமரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமாக பெய்ததால் அணைகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பின. இந்நிலையில், கடந்த 2 வாரமாக ஓய்ந்திருந்த மழை, திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை கொட்டித்தீர்த்தது. 
இருளில் தவித்த மக்கள்: 
குழித்துறை, மார்த்தாண்டம், குளச்சல், கோழிப்போர்விளை, முள்ளங்கினாவிளை, ஆனைக்கிடங்கு, நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, கொட்டாரம், திற்பரப்பு, குலசேகரம், மலையோர பகுதிகள் மற்றும் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் இடி- மின்னல், சூறைக்காற்றுடன் சுமார் 8 மணி நேரம் மழை பொழிந்தது.
இதனால், பல இடங்களில் மழைநீர் தேங்கியதுடன், அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்தது. அதிகபட்சமாக தக்கலையில் 153 மில்லி மீட்டர் மழை பதிவானது. சூறைக்காற்று வீசியதில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் மீதும் மரங்கள்முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பல பகுதிகளில் மக்கள் இருளில் தவித்தனர். மேலும், அருமனை, மிடாலத்தில் தொடர் மழையால் ஈரப்பதம் தாங்காமல் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. எனினும், உயிர்ச்சேதம் ஏதும் நிகழவில்லை.
குளச்சல் காவல் நிலையம் அருகே மின்னல் தாக்கியதில் அப்பகுதியிலிருந்த அண்ணா சிலையின் தலைப்பகுதி பெயர்ந்து விழுந்தது. தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து பார்வையிட்டு, சிலையை துணியால் மூட நடவடிக்கை எடுத்தனர்.
படகு சேவை ரத்து: பலத்த மழையால், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. தாழ்வான நீர்மட்டம் காரணமாக, படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது என, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்தது.
குளிக்க தடை: திற்பரப்பு அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஒரே நாள் இரவில் மாவட்டம் முழுவதும் 904.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. பலத்த மழை மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, செவ்வாய்க்கிழமை காலை உரிய நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் அவதியடைந்தனர். ரப்பர் பால் வடிப்பு, செங்கல் சூளை பணிகள் முற்றிலும் முடங்கின.
நீர்மட்ட நிலவரம்(அடைப்புக்குறியில் உச்சபட்ச நீர்மட்டம்): பேச்சிப்பாறை - 17.80 அடி ( 48 அடி ) , வினாடிக்கு நீர்வரத்து - 496 கன அடி; வெளியேற்றம்- 656 கன அடி, பெருஞ்சாணி - 73.55 அடி ( 77 அடி ), நீர்வரத்து - 314 கன அடி; வெளியேற்றம்- 250 கன அடி, மாம்பழத்துறையாறு - 54.12 அடி ( 54.12 ), நீர்வரத்து -73 கன அடி; உபரிநீர் திறப்பு - 73 கன அடி , பொய்கை அணை- 16.50 அடி , (42.65 அடி ) சிற்றாறு 1 - 15.28 அடி, ( 18 அடி ), நீர்வரத்து 76 கன அடி, சிற்றாறு 2 - 15.38 அடி ( 18 அடி ), நீர்வரத்து - 116 கன அடி.
அதிகபட்ச மழை அளவு (மில்லி மீட்டரில்): தக்கலை- 153, கோழிப்போர்விளை- 150, முள்ளங்கினாவிளை- 138, ஆனைக்கிடங்கு- 122, மாம்பழத்துறையாறு அணை- 115, குழித்துறை- 96, குருந்தன்கோடு- 90.4.
இன்றும் கனமழைக்கு வாய்ப்பு: இதனிடையே, சிற்றாறு அணை நீர்மட்டம் மாலையில் 16 அடியை தாண்டியதால், அணைக்கு வரும் உபரிநீர் 250 கனஅடி திறந்துவிடப்பட்டது. 
இதுகுறித்து பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் வேத அருள்சேகர் கூறுகையில், குமரி மாவட்டத்தில் புதன்கிழமையும் (ஆக.1) கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அனைத்து அணை பகுதிகளிலும் பொதுப்பணித் துறையினர் முகாமிட்டு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர் என்றார் அவர்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு: மலையோரப் பகுதிகளில் இடைவிடாது பெய்த மழையால் செவ்வாய்க்கிழமை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ரப்பர் பால்வடிப்பு, செங்கல் தயாரிப்பு, கட்டுமானத் தொழில், சலவைத் தொழில், நடைபாதை வணிகம் உள்ளிட்ட பெரும்பாலான தொழில்கள் முடங்கின. 
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மாணவர்கள் சிரமத்துக்குள்ளாகினர். சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதாலும், தரைப்பாலங்கள் மூழ்கியதாலும் மக்கள் கடும் அவதிப்பட்டனர். காடுகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டினுள் முடங்கினர்.
மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
ஏற்கெனவே, கன மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. மேலும், இதே நிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், ஆரோக்கியபுரத்தில் இருந்து நீரோடி வரையிலான கடலோர கிராமங்களில் கண்காணிப்புப் பணியை கடலோரக் காவல் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆழ் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்ப வேண்டாம் என்றும், கரையிலிருந்து யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் தடை விதித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com