தமிழரின் மரபுக் கலைகளை மீட்டெடுக்க வேண்டும்: நீதிபதி ஜெயபால் வலியுறுத்தல்

உலகுக்கே முன்னோடியாக இருந்த தமிழர்களின் மரபுக்கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என பஞ்சாப் -ஹரியாணா உயர் நீதிமன்ற நீதிபதி மு.ஜெயபால் வலியுறுத்தினார்.
தமிழரின் மரபுக் கலைகளை மீட்டெடுக்க வேண்டும்: நீதிபதி ஜெயபால் வலியுறுத்தல்
Published on
Updated on
1 min read

உலகுக்கே முன்னோடியாக இருந்த தமிழர்களின் மரபுக்கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என பஞ்சாப் -ஹரியாணா உயர் நீதிமன்ற நீதிபதி மு.ஜெயபால் வலியுறுத்தினார்.
 சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தில் சிறுவர்களுக்கான மரபுக் கலைப் பயிற்சி முகாம் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்றது. இந்தப் பயிற்சி முகாமில் தோல்பாவைக் கூத்து, கட்டைக் கூத்து, கரகாட்டம், சிலம்பம், பொய்க்கால் குதிரை, வாள்வீச்சு முதலிய பயிற்சிகள் வழங்கப்பட்டன.
 முகாமின் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நீதிபதி மு.ஜெயபால் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசியது: உலக இனங்களில் தமிழினம் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதையும், இந்த இனத்தின் நீர் மேலாண்மை, அரசியல், மருத்துவம், கலைகள் போன்றவற்றின் தனித்தன்மையும், அறிவு நுட்பங்களும் உலகுக்கே முன்னோடியாக அமைந்தன என்பதை பழந்தமிழர் காட்சிக்கூடம் வெளிப்படுத்துகிறது.
 பாரம்பரிய கலைக்குக் கௌரவம்: பஞ்சாப் மாநிலத்தில் விருந்து நிகழ்ச்சிகளிலும், முக்கிய நிகழ்வுகளிலும் நீதிபதிகள் போன்ற உயர்பதவியில் இருப்பவர்கள்கூட தங்களுடைய பாரம்பரிய நடனத்தை எவ்வித தயக்கமும் இல்லாமல் ஆடி மகிழ்வர். அதை அவர்கள் கௌரவமாகக் கருதுகின்றனர். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது மரபு நடனத்தை அறிந்திருக்க வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 மண்ணையும், மரபையும் காப்பது: ஆனால், தமிழகத்தில் நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. நமது கலைகள் பற்றியும், அவற்றின் சிறப்புகள் குறித்தும் இளைய தலைமுறையினருக்கு நாம் சொல்லிக் கொடுப்பதில்லை. தற்காப்புக் கலைகளின் முக்கியத்துவத்தை உணராததால் நமது பிள்ளைகள் அவற்றை நம்பிக்கையின்மையோடு பார்க்கும் நிலைதான் உள்ளது. இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால் மண்ணையும், மரபையும் காப்பது நமது கடமை என்பதை நாம் உணர வேண்டும். பாரம்பரிய கலைகளை படிப்படியாக மீட்டெடுக்க வேண்டும் என்றார் அவர்.
 பட்டய, சான்றிதழ் படிப்புகள்: தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன் பேசும்போது, "தமிழர்களின் மரபுக் கலைகளை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தின் மூலமாக தொடர்ந்து நடத்தவும், இதில் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
 பழந்தமிழர் காட்சிக் கூடத்தின் பொறுப்பாளர் ஆ.மணவழகன் பேசும்போது, "தமிழர்களின் கலைகளையும், விழுமியங்களையும், அரசியல் மேலாண்மையையும் மீட்டுருவாக்கம் செய்கின்ற அரிய முயற்சியே இந்தப் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம். சென்னையில் உள்ள பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் விடுமுறை நாள்கள் நீங்கலாக அனைத்து நாள்களிலும் இதைப் பார்வையிடலாம்' என்றார்.
 விழாவில் சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை இணைச் செயலாளர் சு.பிரேமசீலா, தமிழ்நாடு மரபுக்கலை வளர்ச்சி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் மணிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com