

சேலம் - சென்னை இடையே எட்டு வழி பசுமை சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்களைப் போராடத் தூண்டியதாக விவசாயிகள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் - சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் எட்டு வழி பசுமை சாலைத் திட்டம் அமைக்கப்படுகிறது. சேலத்தில் தொடங்கி தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வழியாக சுமார் 274 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்னைக்கு 8- வழிச் சாலை அமைக்கப்படுகிறது.
இதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. மேலும், பசுமை வழிச் சாலை திட்டம் செல்லும் சாலைகளில் உள்ள விளைநிலங்கள், கட்டுமானங்கள் உள்ளிட்டவற்றை கையகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சாலை அமைக்கப்பட உள்ள இடங்களைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் மட்டும் 37 கிலோமீட்டர் தொலைவு இந்தச் சாலை அமைய உள்ளது. இந்த சாலை அமையவுள்ள பூலாவரி, நிலவாரப்பட்டி, நாழிக்கல்பட்டி, குப்பனூர், ஆச்சாங்குட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் சாலை அமைப்பதற்கான நிலத்தை அளவீடு செய்ய வந்த வருவாய்த் துறை மற்றும் நில அளவைத் துறை அலுவலர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள் அவர்களிடம் வாக்குவாதம் நடத்தி, அங்கிருந்து திருப்பி அனுப்பினர்.
இதையடுத்து, இப் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று போராட்டம் நடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, குப்பனூர் காட்டுவளவு பகுதிக்குச் சென்ற வீராணம் மற்றும் அம்மாப்பேட்டை போலீஸார், நாராயணன் (40) மற்றும் முத்துக்குமார் (35) ஆகியோரை விசாரணைக்காக அழைத்தனர்.
அவர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வர மறுத்தனர். இதையடுத்து, அவர்களை வலுக்கட்டாயமாக போலீஸார் வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
அதேபோல, ராஜகவுண்டர் (35), கந்தசாமி (45), ரவிச்சந்திரன் (39), பழனியப்பன் (39) ஆகியோரையும் போலீஸார் விசாரணைக்காக அம்மாப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதில் ராஜகவுண்டர், கந்தசாமி, ரவிச்சந்திரன், பழனியப்பன், நாராயணன் ஆகிய நான்கு பேரை போலீஸார் விடுவித்தனர்.
இதையடுத்து பொதுமக்களை திரட்டி போராட்டத்தைத் தூண்டியதாக திமுகவைச் சேர்ந்த முத்துக்குமார் மீது வீராணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
அதேபோல, சீலநாயக்கன்பட்டி சூரியகவுண்டர்காடு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவை (30) அன்னதானப்பட்டி போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான இவர் பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு எதிராக பொதுமக்களை திரட்டி போராட்டத்துக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, சித்தனேரியைச் சேர்ந்த ரவி என்பவரை கொண்டலாம்பட்டி போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியவர்களை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தகவலை அறிந்த அப் பகுதி மக்கள், குடும்பத்தினர், உறவினர்கள் அம்மாப்பேட்டை காவல் நிலையம் முன் திரண்டனர். மேலும், விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்று போலீஸாரிடம் முறையிட்டனர்.
இதுதொடர்பாக விசாரணைக்கு அழைத்து வரப்பட்டு விடுவிக்கப்பட்ட விவசாயி நாராயணன் கூறுகையில், சேலம் வீராணம் மற்றும் அம்மாப்பேட்டை போலீஸார் சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு வீட்டுக்கு வந்து விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். விசாரணைக்காக வீராணம் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டேன். எத்தனை ஏக்கர் நிலம் உள்ளது, எதற்காக மக்களை திரட்டி போராட்டம் நடத்துகிறீர்கள் என போலீஸார் விசாரணை செய்தனர்.
நான் எம்.காம். பட்டதாரியாக இருப்பதால், பாதிப்புக்குள்ளான விவசாயிகள் தன்னிடம் வந்து முறையிட்டனர். பசுமை வழிச் சாலை திட்டத்துக்காக நிலங்களை அழிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
இதையடுத்து, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்ட முத்துக்குமார், மாரிமுத்து ஆகியோரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட மற்றவர்களை போலீஸார் விடுவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.