வறட்சியில் கடலூர் மாவட்டம்: வறண்டது வீராணம் ஏரி

கடந்த 3 ஆண்டுகளாகக் கடும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வறட்சியில் கடலூர் மாவட்டம்: வறண்டது வீராணம் ஏரி

கடந்த 3 ஆண்டுகளாகக் கடும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் ஏக்கர் அளவிலும், காவிரி டெல்டா அல்லாத பகுதிகளில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் அளவிலும் சாகுபடி நடைபெறும். ஆண்டுதோறும் தமிழக அரசு குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு சிறப்புத் தொகுப்புத் திட்டங்களை அறிவித்து மாவட்டத்தில் 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு இலக்கு நிர்ணயித்து செயல்படுத்தப்படும்.
நிகழாண்டில் கடலூர் மாவட்டத்தில் டெல்டா, டெல்டா அல்லாத பகுதிகளில் தற்போது வரை 11,500 ஏக்கர் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மேட்டூர் அணை திறக்கப்பட்டு கிடைக்கும் காவிரி நீர், ஆழ்குழாய் கிணறுகள் மூலமாக ஆரம்ப கால சாகுபடி பணிகளைத் தொடங்கி, தொடர்ந்து வட கிழக்குப் பருவ மழை நீரைக் கொண்டு சாகுபடி முழுமையாக நடைபெறும்.
அண்மைக்காலமாக காவிரி நீர், தென் மேற்கு பருவ மழை இல்லாமல் உரிய பருவ காலத்தில் சாகுபடி பணியைத் தொடங்க முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். வட கிழக்குப் பருவமழையும் தாமதமாகத் தொடங்கி பெய்வதால், முழுமையான பயன்பாடு இல்லாமல் நீர் வீணாகக் கடலில் கலக்கிறது.
வெள்ளம், வறட்சி ஆகிய இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய வட்டங்கள் காவிரி பாயும் டெல்டா வட்டங்களாகவும், கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், திருமுட்டம் ஆகிய வட்டங்கள் முழுமையாக நிலத்தடி நீரைக் கொண்டு விவசாயம் செய்யும் வட்டங்களாகவும், புவனகிரி, குறிஞ்சிப்பாடி ஆகிய வட்டத்தில் சில பகுதிகள் நிலத்தடி நீரையும், சில பகுதிகள் நெய்வேலி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரைக் கொண்டும் சாகுபடி செய்யும் வட்டங்களாகவும், திட்டக்குடி, வேப்பூர் ஆகிய வட்டங்கள் நீர்நிலை ஆதாரங்கள் மூலம் சாகுபடி செய்யும் வட்டங்களாக உள்ளன.
மாவட்டத்தில் டெல்டா பாசனப் பகுதிகளில் குறுவை, சம்பா, நவரை ஆகிய மூன்று போகச் சாகுபடியும், டெல்டா அல்லாத பகுதிகளில் சொர்ணவாரி, சம்பா, நவரை என மூன்று போகப் பருவங்களில் சாகுபடியும் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், காவிரி நீர் பிரச்னையால் ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறப்பு இல்லை என்பதால், கடலுர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற்று வந்த குறுவை சாகுபடி நிறுத்தப்பட்டது.
வறண்டது வீராணம் ஏரி: கடலூர் மாவட்டத்தின் முதன்மை நீராதாரமான வீராணம் ஏரியின் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய வட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு நேரடியாகவும், 40 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களுக்கு மறைமுகமாகவும் பாசன வசதி கிடைக்கும். நாள்தோறும் விநாடிக்கு 77 கன அடி வீதம் சென்னை மாநகரத்தின் குடிநீர் தேவையையும் நிறைவு செய்யப்படும். இந்த நிலையில், கல்லணையிலிருந்து ஆண்டுதோறும் குறைந்த அளவே தண்ணீர் வருவதால் வீராணம் ஏரி முழுக் கொள்ளளவை எட்ட முடிவதில்லை. கடந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழையின் போது, மேட்டூர் அணை 96 அடி நிரம்பிய நிலையில், சம்பா சாகுபடிக்காக அக்டோபர் மாதம் 2 -ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு, அதன் மூலம் கல்லணையும் திறக்கப்பட்டது.
அதேபோல, மேட்டூர் அணையிலிருந்து மற்ற காவிரி டெல்டா பாசன மாவட்டங்களுக்கு ஜனவரி 28 -ஆம் தேதி வரை 115 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கடலூர் மாவட்ட பாசனத்துக்காக டிசம்பர் 4 -ஆம் தேதி வரை 61 நாள்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால், வீராணம் ஏரி முழுமையாக நிரம்பாமல் சாகுபடிக்கும் போதிய தண்ணீர் இல்லாமல் பற்றாக்குறை எற்பட்டது. தற்போது வீராணம் ஏரி வறண்டு காட்சியளிக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநிலச் செயலர் பெ.ரவீந்திரன் கூறியதாவது:
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2017 -ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நீர்நிலை ஆதாரங்களில் 12 லட்சம் கன மீட்டர் அளவுக்கான வண்டல் மண் எடுக்கப்பட்டு ஆழப்படுத்திய பிறகும் நீர்நிலை ஆதாரங்கள் வறண்டு காணப்படுகின்றன.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணையில் எவ்வளவு வந்தடைகிறதோ அதில், பத்து சதவீதம் நீர் கொள்ளிடம் வழியாக கீழணைக்குத் திறப்பது வழக்கம். ஆனால், திருச்சி மண்டல பொதுப் பணித் துறை அதிகாரிகள் நீரை முழுமையாக கீழணைக்கு வழங்காமல் குறைந்த அளவே வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 
கடந்த 83 ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் இந்த நடைமுறையால் கடலூர் மாவட்ட டெல்டா விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்ட காவிரி பாசன பிரதான வாய்க்கால்களைத் தூர்வார வேண்டும். மழை நீரை முழுமையாகச் சேமித்து பாதுகாக்க தவறியதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலை ஆதாரங்களும் வறண்டுவிட்டன. 
இதனால், கடல் நீர் எளிதாக உள்புகுந்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாற்றி வருகிறது. இதனால், விவசாயமும் பாதிக்கப்பட்டு, குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
எனவே, கடலூர் மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சி வருங்காலங்களில் ஏற்படாத வகையில் திட்டங்களை உருவாக்கி நிறைவேற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
மேலும், கடலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com