

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி, முனைவர்கள் தமிழ்க்குடிமகன், பொன்.சவுரிராசன் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் பாண்டியராஜன் வெளியிட்ட அறிவிப்புகள்:
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கரிகாற்சோழன் கலையரங்கம் ரூ.4 கோடி செலவில் மின்கட்டமைப்பு வசதியுடன் மேம்படுத்தப்படும். தமிழ்நாட்டில் உள்ள ஊர்ப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் உதாரணமாக திருவல்லிக்கேணி என்பதை ட்ரிப்ளிகேன் எனக் குறிப்பிடாமல் திருவல்லிக்கேணி என்றே அமைவதுபோல எண்ணற்ற ஊர்களின் பெயர்கள் ஆங்கிலத்திலும் அமையும் வகையில் உயர்நிலைக் குழு அமைத்து செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பழமையான கட்டடங்கள் ரூ.3.50 கோடி செலவில் சிறப்பு சீர்காப்பு செய்யப்படும்.
நாட்டுடைமை: முனைவர் மு.தமிழ்க்குடிமகன், எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி, முனைவர் பொன்.சவுரிராசன் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாகப்படும். இதற்காக ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
தொல்காப்பியர் சிலை: தொல்காப்பியரை நினைவுகூரும் வகையில் சென்னை பல்கலைக்கழக இணைவகமான மெரீனா வளாகத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அவர் சிலை நிறுவப்படும்.
மறைமலையடிகள் விருது: தனித் தமிழில் படைப்புகளை உருவாக்கும் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழறிஞர் ஒருவருக்கு மறைமலையடிகளார் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும். விருதுக்கான தொகை ஒரு லட்சமும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் தகுதிச் சான்றும் பொன்னாடையும் வழங்கப்படும். இதற்கு ரூ.1.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
சமத்துவம், பொதுவுடமை, தமிழியல் ஆகியவற்றில் தனக்கென தனிமுத்திரை பதித்த அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் அவர்தம் லட்சிய நோக்குடன் செயலாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படும். விருதுக்கான தொகையாக ரூ.1லட்சமும் ஒரு சவரன் தங்கப் பதக்கமும் தகுதிச் சான்றிதழும் வழங்கப்படும். இதற்காக ரூ.1.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
மறுபதிப்பு: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள நூல்களான களஞ்சியங்கள், சொல்லகராதிகள், கலை, இலக்கியம் சார்ந்த நூல்கள் மறுப்பதிப்பு செய்யப்படும். இதற்காக ரூ.2 கோடி வீதம் நான்கு ஆண்டுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
உதவித் தொகை உயர்வு: தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.3,000-த்திலிருந்து ரூ.3,500-ஆக உயர்த்தி வழங்கப்படும். எல்லைக் காவலர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.4,000-த்திலிருந்து ரூ.4,500-ஆக வழங்கப்படும். தமிழறிஞர்களின் மரபுரிமையருக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.1,500-இலிருந்து ரூ.2,000-மாகவும், எல்லைக் காவலர்களுக்கு மரிபுரிமையருக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.2,000-த்திலிருந்து ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.