கடல் சீற்றத்தால் சென்னை பட்டினப்பாக்கத்தில் 50 வீடுகள் சேதம்

சென்னை பட்டினப்பாக்கத்தில் கடல் சீற்றம் காரணமாக கடற்கரையோர பகுதிகளில் இருந்த 50-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன
சென்னை பட்டினப்பாக்கம் ஸ்ரீநிவாசபுரத்தில் ஏற்பட்ட கடலரிப்பால் உருக்குலைந்த குடியிருப்புப் பகுதிகள்.
சென்னை பட்டினப்பாக்கம் ஸ்ரீநிவாசபுரத்தில் ஏற்பட்ட கடலரிப்பால் உருக்குலைந்த குடியிருப்புப் பகுதிகள்.
Updated on
1 min read

சென்னை பட்டினப்பாக்கத்தில் கடல் சீற்றம் காரணமாக கடற்கரையோர பகுதிகளில் இருந்த 50-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.
பட்டினப்பாக்கத்தில் உள்ள சீனிவாசபுரம் கடற்கரையோரமாக 500-க்கும் மேற்பட்ட மீனவக் குடியிருப்புகள் உள்ளன. கடல் சீற்றம் காரணமாக ஏற்படும் கடல் அலைகளால் இங்குள்ள வீடுகள் சேதமடைவது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பகுதிகளில் கடல் சீற்றத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக 50-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை. இருப்பினும் வீடுகளில் இருந்த பொருள்கள் நாசமடைந்தன.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறியது: சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு வாரத்துக்கும் மேலாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கடல்நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகள் இடிந்து விழுகின்றன. காலை மற்றும் இரவு நேரங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் இப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் தூக்கத்தை இழந்துள்ளோம்.
ஆண்டுதோறும் கடல் சீற்றம் காரணமாக எங்கள் வீடுகள் பாதிக்கப்படுவதும், பொருளாதார இழப்பு ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. பாதிக்கப்படும் மீனவர்களுக்கு உடனடியாக அரசு இலவச வீடுகள் வழங்க முன்வர வேண்டும் என்றனர்.
கமல்ஹாசன் சந்திப்பு: இதனிடையே கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியது: சென்னை பட்டினப்பாக்கத்தில் கடல் அரிப்பு காரணமாக கடற்கரையோரம் இருந்த ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. மீனவர்களின் வீடுகள் கடல் அரிப்பால் பாதிக்கப்படாத வகையில் அமைவதற்கும், கடல் அரிப்பைத் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் கமல்ஹாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com