

தமிழகத்தில் சூரிய ஒளி மின்சார உற்பத்தி மையங்களை அமைக்கப்பதற்கு விவசாயிகளிடமிருந்து குத்தகைக்கு நிலம் பெறுவதென தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அதிகாரிகள் கூறியது: சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசுகளை மத்திய அரசு மிகவும் ஊக்கப்படுத்தி வருகிறது. இதனால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து அவற்றில் சூரிய ஒளி மின்உற்பத்தி மையங்களை (சோலார் பிளாண்ட்) அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க பல ஏக்கர் பரப்பளவில் நிலம் தேவைப்படுகிறது. இத்திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக பயிர் செய்யாமல் உள்ள தரிசு நிலங்களை விவசாயிகளிடம் இருந்து குத்தகைக்கு வாங்க தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை முடிவு செய்துள்ளது. அப்படி நிலத்தை வழங்கும் விவசாயிக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கவும் திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில் சூரிய ஒளி மூலம் தற்போது 1,747 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஆலைகள் தமிழகத்தில் உள்ளன.
இந்த ஆண்டுக்குள் 700 மெகாவாட் சூரியஒளி மின்சாரம் தயாரிப்பதற்கான ஆலைகள் நிறுவப்பட உள்ளன. மேலும் 1,500 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக தனியார் நிறுவனங்களுடன் ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், வரும் 2021-ஆம் ஆண்டுக்குள் 5 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க குறைந்தபட்சம் 5 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. ஓர் ஏக்கர் நிலத்துக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் குத்தகைக் கட்டணமாக வழங்கப்படவுள்ளது. ஓர் ஏக்கர் நிலத்தை மட்டும் ஒரு விவசாயி வைத்திருந்தால் அவர் அருகில் உள்ள மற்ற விவசாயிகளையும் குழுவாக சேர்த்து எங்களுக்கு நிலம் வழங்கலாம்.
நிலத்தில் சோலார் பிளாண்ட் அமைத்து அதில் மின்உற்பத்தி செய்து அரசுக்கு விற்பனை செய்வது வரையிலான அனைத்துக்கும் தேவைப்படும் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை எரிசக்தி மேம்பாட்டு முகமை வழங்கும்.
குத்தகை காலம் 15 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 25 ஆண்டுகள் வரை இருக்கும். அதன் பிறகு, அந்த நிலம் அதன் உரிமையாளரான விவசாயிக்கே திரும்ப வழங்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.