வேலூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தல், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை, காட்டன் சூதாட்டம் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன. 'விழுந்தால் வீட்டுக்கு, விழா விட்டால் நாட்டுக்கு' என்ற வாசகத்துடன் அண்ணா தமிழக முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு அரசு பரிசுச் சீட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. தமிழக அரசு பரிசுச் சீட்டுகள் அமோகமாக விற்பனையாகி வந்தன. பரிசு விழுந்தால் பணக்காரராகி விடலாம் என்ற ஆசையில் ஏழை, நடுத்தர மக்களும், கூலித் தொழிலாளர்களும் பரிசுச் சீட்டுகளை வாங்கிக் குவித்தனர். தங்களுடைய வருமானத்தை பரிசுச் சீட்டு வாங்குவதிலேயே செலவழித்தனர்.
லாட்டரி சீட்டுக்கு பெயர் போன மணிப்பூர், நாகாலாந்து, மிúஸாரம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களின் லாட்டரி சீட்டுகளும் தமிழகத்தில் அமோகமாக விற்பனையாகின. தமிழக அரசு பரிசுச் சீட்டு மட்டுமல்லாது, வெளி மாநில லாட்டரி சீட்டுகளும் அதிக அளவில் விற்பனையில் கொடிக்கட்டி பறந்தன.
லாட்டரி சீட்டு வாங்கி பரிசு விழாமல் பணத்தைப் பறிகொடுத்த பல ஏழை, எளிய நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் கடனாளியாகி உயிரிழந்த சம்பவங்களும் நடந்தன. பலதரப்பட்ட மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினரின் கோரிக்கையால் கடந்த 2003-ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்குத் தடை விதித்தார். அதன் மூலம் தமிழ்நாடு மட்டுமல்லாது, வெளிமாநில லாட்டரி சீட்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து இந்தியாவில் பல மாநிலங்களில் லாட்டரி சீட்டுக்கு தடை விதிக்கப்பட்டன. ஆனால் கேரளம், கோவா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், சிக்கிம், நாகாலாந்து மற்றும் மிúஸாரம் ஆகிய மாநிலங்களில் சட்ட ரீதியாக லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் மகாராஷ்டிரம், மிúஸாரம், கேரளம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் லாட்டரி சீட்டுகளுக்கு பெயர் போனவை.
தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டுள்ள போதிலும் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் மறைமுகமாக நடைபெற்று கொண்டு தான் உள்ளது. அரசியல்வாதிகள், காவல் துறையினரின் ஆதரவுடன் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்கிறது. முகவர்கள் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து லாட்டரி சீட்டுகள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பிறகு லாட்டரி சீட்டு பெயர், முகமதிப்பு, சீட்டு எண் ஆகியவை சிறிய துண்டுக் காகிதங்களில் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப லாட்டரி சீட்டுகளின் எண்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட மாநிலங்களில் இருந்து முகவர்களுக்கு மின்னஞ்சல் (இ-மெயில்) மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதை அவர்கள் கணினியில் இருந்து பதிவிறக்கம் செய்து வெள்ளைத் தாளில் அச்சிட்டு எடுத்து வைத்துக் கொள்கிறார்கள்.
லாட்டரி சீட்டு வாங்க வருபவர்களுக்கு வெள்ளைத் தாளில் சீட்டின் எண், முக மதிப்பு, லாட்டரி சீட்டின் பெயரை குறிக்கும் எழுத்து ஆகியவற்றை மட்டும் எழுதி கொடுத்துவிடுகிறார்கள். குறைந்த பட்ச முகமதிப்பாக ரூ. 60 தொடங்கி ரூ. 100, ரூ. 200 என விற்பனை செய்யப்படுகிறது. லாட்டரியில் பரிசு விழுந்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு பரிசுத் தொகையும் முகவர் மூலம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு வேலூர் மாவட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு அளவுக்கு லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. ஏழை, எளிய நடுத்தர மக்களையும், கூலித் தொழிலாளர்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை வேலூர் மாவட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மாவட்டத்தின் பல்வேறு நகரங்களிலும், கிராமங்களிலும் முக்கியப் பகுதிகளிலேயே இத்தகைய சமூக விரோதச் செயல்கள் நடைபெற்று வருகின்றன. காலையில் 7 மணிக்கு லாட்டரி சீட்டு விற்பனை தொடங்குவதால் காலையிலேயே அதனை வாங்க தொழிலாளர்கள் சென்றுவிடுகின்றனர். ரோந்து செல்லும் போலீஸார் அதைக் கண்டுகொள்வதில்லை. இதில், சில போலீஸாரே அந்த லாட்டரி சீட்டுகளை வாங்குவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை குறித்து காவல் துறைக்கு பொதுமக்கள் சார்பில் பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கூலித் தொழிலாளர்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.