வாகன சோதனையின் போது உயிரிழந்த கர்ப்பிணி உஷாவின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

திருவெறும்பூரில் வாகன சோதனையின் போது போக்குவரத்துக் காவலர் எட்டி உதைத்ததால் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் உஷாவின் உடலை வாங்க அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
வாகன சோதனையின் போது உயிரிழந்த கர்ப்பிணி உஷாவின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
Updated on
2 min read


திருச்சி: திருவெறும்பூரில் வாகன சோதனையின் போது போக்குவரத்துக் காவலர் எட்டி உதைத்ததால் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் உஷாவின் உடலை வாங்க அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துக்குக் காரணமான போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியுள்ள உஷாவின் உறவினர்கள், கொலை வழக்குப் பதிவு செய்யாமல் உடலை வாங்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.

மேலும், திருச்சி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருப்பவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் உஷாவின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், சூலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ராஜா, உஷா இருவரும் திருச்சிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தபோது, வாகனச் சோதனையில் நிற்காமல் சென்றதால் காவல் ஆய்வாளர் காமராஜ், துரத்திச் சென்றார். 

இதில், ஆய்வாளர் எட்டி உதைத்தில் கீழே விழுந்த கர்ப்பிணி உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போக்குவரத்துக் காவலரின் மோசமான நடவடிக்கையால் கர்ப்பிணி உயிரிழந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மறியல் போராட்டத்தை தொடங்கினர். 

இரவு 7.30 மணியளவில் தொடங்கிய போராட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. ஒரு காவலர் செய்த தவறை தட்டிக் கேட்ட பொதுமக்கள் மீது தடியடி நடத்துவதா? என்று போராட்டத்தில் ஈடுபட்டு காயம் அடைந்தவர்கள் ரத்தம் சொட்ட சொட்டக் கதறினர்.

போலீஸ் குவிப்பு: திருச்சி மாநகரக் காவல்துறை ஆணையர் அமல்ராஜ், துணை ஆணையர் சக்தி கணேஷ், டிஎஸ்பி கோடிலிங்கம் மற்றும் 4 பட்டாலியன் போலீஸார் என 300-க்கும் மேற்பட்ட போலீஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். மறியலில் ஈடுபட்டோர் கல்வீச்சில் ஈடுபட்டதால் போலீஸார் அவர்களை தடியடி நடத்தி கலைந்து போகச் செய்தனர். இந்த தடியடி சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர்.

மறியல் போராட்டத்தால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்துகள், காவல்துறை, வருவாய்த்துறை வாகனங்கள் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. போலீஸார் விரட்டிச் சென்றதில் ஆங்காங்கே இருசக்கர வாகனங்களும் கீழே விழுந்து சேதமடைந்தன. கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் 50-க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மறியல் போராட்டம் 4 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. இதனால், திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் நெரிசலில் சிக்கிய பேருந்துகளில் இருந்து மக்கள் கீழே இறங்கி நடந்து சென்று மாற்றுப் பாதையில் செல்லத்தொடங்கினர். நெரிசலில் சிக்கிய வாகனங்களைத்தவிர்த்து இதர வாகனங்கள் அனைத்தும் புதுக்கோட்டை சாலை வழியாக திருப்பி அனுப்பப்பட்டன. ஆம்புலன்ஸ் வாகனஙகள் பலவும் நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு மாற்றுப்பாதையில் செல்ல நேரிட்டது.

போர்க்களமானது: கணேஷா ரவுண்டானா பகுதியின் இருபுறமும் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்களின் கண்ணாடி துகள்களே சாலையில் ஆக்கிரமித்திருந்தன. போலீஸார் நடத்திய தடியடியால் மக்கள் விட்டுச் சென்ற காலணிகள், வீழ்த்தப்ட்ட வாகனங்கள் என சாலை முழுவதும் போர்க்களமாக காட்சியளித்தது.

ஆணையர் பேட்டி: சம்பவம் தொடர்பாக, திருச்சி மாநகரக் காவல்துறை ஆணையர் அ. அமல்ராஜ் கூறியது:  போக்குவரத்து ஆய்வாளர் விரட்டிச் சென்றதில் கீழே விழுந்து பெண் உயிரிழந்துள்ளார். சம்பவத்துக்கு காராணமான காமராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். வாகனங்களை சேதப்படுத்திய நபர்கள் தொடர்பாக சிசிடிவி கேரமா பதிவுகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com