
முறையாக பராமரிப்படாத வாகனங்கள், பணி நிரந்தரம் செய்யப்படாத ஓட்டுநர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு நிர்வாக சிக்கல்களால், ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வரும் இலவச அமரர் ஊர்தி திட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையைப்போல், ஏழை மக்களின் வசதிக்காக "இலவச அமரர் ஊர்தி சேவை' கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக சுகாதாரத் திட்டத்தின்கீழ் செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாகனப் பராமரிப்பு, டீசல் விநியோகம், ஓட்டுநர் ஊதியம் உள்ளிட்ட அனைத்தும் செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தால், அவர் பிற மாவட்டமாக இருந்தாலும், அண்டை மாநிலமாக இருந்தாலும், இத்திட்டத்தில் அமரர் ஊர்தி மூலமாக சடலத்தை இலவசமாக அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடியும். இதற்காக மாநிலம் முழுவதும் 161 இலவச அமரர் ஊர்திகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஏழை மக்கள் பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது டீசல் விநியோகத்தில் சிக்கல், ஓட்டுநர்கள் பிரச்னை, வாகனப் பராமரிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகள் காரணமாக இலவச அமரர் ஊர்தி சேவையில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சிஐடியூ மாவட்டப் பொதுச் செயலர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
ஒரு வாகனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சடலம்: கோவை அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு சராசரியாக 20 -க்கும் மேற்பட்ட சடலங்கள் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. கோவை அரசு மருத்துவமனையில் ஒன்பதும், பொள்ளாச்சி மாவட்ட மருத்துவமனையில் ஒன்றும் என மொத்தம் 10 அமரர் ஊர்திகள் உள்ளன. ஆனால், தற்போது கோவை அரசு மருத்துவமனையில் 7 வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுவதால், ஒரு வாகனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சடலங்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. மேலும், டீசல் சேமிப்பைக் கருத்தில் கொண்டு வெவ்வேறு வழித்தடத்தில் உள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய சடலங்கள் ஒரே வாகனத்தில் ஏற்றி அனுப்பப்படுகின்றன. அவை காலதாமதத்துடன் செல்வதால் இறுதிச் சடங்கு செய்வதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்களுக்கும், உறவினர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.
பணிப் பாதுகாப்பற்ற நிலையில் ஓட்டுநர்கள்: இலவச அமரர் ஊர்தி ஓட்டுநர்களுக்கு தினக்கூலியாக ரூ. 525 வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இவர்களுக்கு தினக்கூலியாக ரூ. 280 மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், ஆண்டுக்கு 236 நாள்கள் பணியாற்றி இருந்தால் பணி நிரந்தரம் செய்யவேண்டும். ஆனால், செஞ்சிலுவைச் சங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் இந்த ஓட்டுநர்களில் பலர், பணி நிரந்தரம் செய்யப்படாமலேயே உள்ளனர். மேலும், வாகனங்களின் எண்ணிக்கைக்கேற்ப ஓட்டுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே ஓட்டுநர்கள் உள்ளதால் 12 மணி நேரத்துக்கு மேல் பணியாற்ற வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.
மருத்துவப் பாதுகாப்பு இல்லாத நிலை: அமரர் ஊர்தியில் சடலங்களை ஏற்றிச் செல்வதால் வாகன ஓட்டுநர்களுக்கு அதிக அளவில் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. நோய்த் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள அவர்களுக்கு "ஆன்டிபயாடிக்' மருந்துகள் அளிக்கப்பட வேண்டும்; ஆறு மாதத்துக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும். ஆனால், ஓட்டுநர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் எவ்வித மருத்துவ வசதியும் ஏற்படுத்தித் தருவதில்லை என குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
பராமரிக்கப்படாத ஊர்திகள்: அமரர் ஊர்திகளில் குளிர்சாதனப் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பராமரிப்பு இல்லாத காரணத்தால் அவை செயல்படாமல் உள்ளன. இதனால் சடலத்துடன் பயணிக்கும் உறவினர்கள், ஓட்டுநர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், பல மாதங்களாக முறையாக பராமரிக்கப்படாததால், கோவை மாவட்டத்தில் மட்டும் மூன்று ஊர்திகள் முற்றிலும் பழுதடைந்த நிலையில் முடங்கியுள்ளன. அண்மையில், நிர்வாகக் குளறுபடியால் வாகனங்களுக்கு டீசலுக்கான நிதி ஒதுக்கப்படாததால், சில நாள்களுக்கு முன்னர் அமரர் ஊர்திகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டன என்றார் அவர்.இதுகுறித்து, தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, "செஞ்சிலுவைச் சங்கத்தில் நிர்வாகிகளுக்கு இடையே சில பிரச்னைகள் இருந்து வந்ததால், நிர்வாகரீதியாகப் பல்வேறு பிரச்னைகள் இருந்து வந்தன. தற்போது பிரச்னைகள் களையப்பட்டுள்ளதால், மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் அமரர் ஊர்தி சேவை செயல்படுத்தப்படும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.