பூமிதான வாரியத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை வருவாய்த் துறை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு பூமிதான வாரியம், நில சீர்திருத்த ஆணையாளர் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. பூமிதான இயக்கம் 1951-இல் ஆச்சார்ய வினோபா பாவேவால் துவக்கப்பட்டது. அவர் தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது நிலச்சுவான்தார்கள் தங்கள் நிலங்களை தானமாக அளித்தனர். அவ்வாறு அளிக்கப்பட்ட நிலங்கள் இன்று பூமிதான நிலங்களாக உள்ளன.
இவற்றை முறைப்படுத்தவும், அதனை நிலமில்லாத ஏழைகளுக்கு விநியோகம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு பூமிதான வாரியச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சட்டப்படி, பூமிதான வாரியம் உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தின்படி, தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.
தலைவர்-உறுப்பினர்கள்: கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பருக்குப் பிறகு பூமிதான வாரியத்துக்கு தலைவர், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில், வாரியத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, வருவாய்த் துறை வெளியிட்ட உத்தரவு:-
கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் தலைமையில் நான்கு அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் பூமிதான இயக்கம் குறித்து நன்கு அறிந்த சர்வோதய தலைவர்கள் மற்றும் சமூக சேவகர்கள், அதிகளவில் பூமிதானம் அளித்த தானதாரர்கள் அல்லது அவர்களின் வாரிசுகளில் தேர்வு செய்யப்பட்ட ஒன்பது பேரை அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்க நிலச்சீர்திருத்தத் துறை இயக்குநர் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார்.
நிலச்சீர்திருத்த இயக்குநரின் பரிந்துரைகளை ஆய்வு செய்து, 14 பேர் வாரியத்துக்கு நியமிக்கப்படுகின்றனர். அதன்படி, கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் பாஸ்கரன் அதற்குத் தலைவராக இருப்பார்.
நிலச்சீர்திருத்த இயக்குநர் உறுப்பினர் செயலாளராகவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர், நிலச்சீர்திருத்த ஆணையாளர், வேளாண்மைத் துறை இயக்குநர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் ஆகியோர் அரசு சார்பிலான உறுப்பினர்களாக இருப்பர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த கே.எஸ்.நீலா, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி என்.சுந்தரராஜன், ராமநாதபுரம் அபிராமத்தைச் சேர்ந்த கே.ஆர்.கண்ணன், சென்னை பெசன்ட்நகர் எஸ்.எஸ்.நாராயணன், ராயப்பேட்டை எஸ்.லோகநாதன், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி க.கலியமூர்த்தி, கோவை தொண்டாமுத்தூர் டி.லட்சுமிகாந்தன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.