புதிய பாட நூல்களை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
புதிய பாட நூல்களை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

1, 6, 9, 11 வகுப்புகளுக்கு புதிய பாட நூல்கள்: முதல்வர் வெளியிட்டார்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டுக்கு 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாட நூல்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார். 
Published on

தமிழகத்தில் வரும் கல்வியாண்டுக்கு 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாட நூல்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார். 

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாநிலப் பாடத் திட்டம் கடந்த 12 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. இதனால் தமிழக மாணவர்கள், பிற மாநில மாணவர்களுடன் போட்டியிட்டு, தேசியத் தேர்வுகளில் பங்கேற்க முடியவில்லை. எதிர்காலத்தில் தேசிய, சர்வதேச அளவில், மற்ற மாணவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், தமிழக பாடத் திட்டத்தை மாற்ற வேண்டும். மாறி வரும் சூழல், வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் அதில் புதிய விஷயங்கள் இடம் பெற வேண்டும் என கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதை ஏற்று வரும் கல்வியாண்டில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அறிவிக்கப்படும் என தமிழக அரசு கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தது.

இரு குழுக்கள் அமைப்பு: இதையடுத்து பாடத் திட்டத்தை மாற்றுவதற்காக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் உயர்நிலைக் குழு, முன்னாள் துணை வேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையில் கலைத் திட்டக்குழு என கல்வியாளர்கள், பாடத் திட்ட வல்லுநர்கள், அதிகாரிகள் அடங்கிய இரு குழுக்கள் அமைக்கப்பட்டன. 

கல்வியாளர்களிடம் பெறப்பட்ட கருத்துருக்கள்: புதிய பாடத் திட்டம் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஜூலை 20 முதல் 22 வரை 3 நாள்கள் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பல்கலைக் கழக, கல்லூரிப் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், பாடத் திட்டங்களில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
இந்த ஆலோசனைகள்படி புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணியில் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு தீவிரமாக ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிய வரைவுப் பாடத் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டு அதில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு கருத்துக் கேட்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் (எஸ்சிஇஆர்டி) சார்பில் பாடநூல்கள் எழுதும் பணிகள் தொடங்கின. புதிய பாட நூல்களை தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகம் அச்சிட்டது. 
பாட நூல்கள் வெளியீடு: 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு 147 தலைப்புகளில் அமைந்துள்ள புதிய பாடநூல்களை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை வெளியிட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெற்றுக் கொண்டார். 
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் பா.வளர்மதி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ், செயலர் த.உதயச்சந்திரன், இயக்குநர் இளங்கோவன், எஸ்சிஇஆர்டி இயக்குநர் க.அறிவொளி, முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிளஸ் 1 சிறப்புத் தமிழில் 'தினமணி' முன்னாள் ஆசிரியர்கள்


பிளஸ் 1 சிறப்புத் தமிழ் பாட நூலில் 'ஊடகவியலில் தமிழ் ஆளுமைகள்' என்ற பகுதியில் 'தினமணி' நாளிதழ் முன்னாள் ஆசிரியர்கள் டி.எஸ்.சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன், தினத்தந்தி நாளிதழ் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் உள்ளிட்டோரின் வாழ்க்கைக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரம்:
டி.எஸ்.சொக்கலிங்கம் (1899- 1966)- தலையங்கம்: கடந்த 1934-இல் தினமணி தொடங்கப்பட்டபோது அதன் முதல் ஆசிரியராகப் பொறுப்பேற்ற டி.எஸ்.சொக்கலிங்கம், தலையங்கங்களுக்காகவும், கட்டுரைகள் மற்றும் கருத்துப் படங்களுக்காகவும் அறியப்படுகிறார். இதழாளராகவும், எழுத்தாளராகவும் விளங்க ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமை உடையவராக இருக்க வேண்டும் என்ற கருத்தாக்கத்தை உடைத்தார். மக்கள் செய்ய வேண்டியதைத் தலையங்கம் மூலம் உணர்த்தும் ஆற்றல் இவரது எழுத்தில் இருந்தது. இதழாளர்களுக்குப் பயன்படும் வகையில் ஆங்கில- தமிழ் அகராதியை உருவாக்கினார். விடுதலைப் போராட்டக் காலத்தில் டி.எஸ்.சொக்கலிங்கத்தின் தலையங்கங்களும், கட்டுரைகளும் வீறுமிக்க வகையில் அமைந்து மக்களிடையே விடுதலை வேட்கையைத் தூண்டின. 

ஏ.என்.சிவராமன் (1904-2001)- அறிவியல் கட்டுரைகள்: 
தினமணி நாளிதழ் ஆசிரியரான ஏ.என்.சிவராமன் தமது அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கட்டுரைகளுக்காக அறியப்படுகிறார். டி.எஸ். சொக்கலிங்கத்துக்குப் பிறகு தினமணி ஆசிரியராகப் பொறுப்பேற்ற 
சிவராமன் 1987-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். இவர் பிரெஞ்சு, சம்ஸ்கிருதம், உள்ளிட்ட பதினேழு மொழிகளை அறிந்திருந்தார்.
ஒரு செய்தித்தாளின் பணி என்பது செய்திகளை ஆதாரப்பூர்வமாகவும், துல்லியமாகவும் வழங்குவது மட்டுமல்ல; ஒரு நாட்டின் ஜனநாயகத் தன்மையிலும் வளர்ச்சியிலும் வாசகர்களைப் பங்கேற்கச் செய்வதுமாகும் என ஏ.என்.சிவராமன் கருதினார். விண்வெளி, அறிவியல், அரசியல், தத்துவங்கள், தேர்தல் சீர்திருத்தம், வேளாண்மை, நீர்ப்பாசன தொழில்நுட்பங்கள், கலாசாரப் பதிவுகள் ஆகியவற்றை எளிய தமிழில் மக்களிடையே கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் ஏ.என்.சிவராமன்.

இந்தப் பாடப்பகுதியில் பாரதியார் (கருத்துப்படம்), தந்தை பெரியார் (எழுத்துச் சீர்திருத்தம்), தினத்தந்தி நாளிதழ் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் (மொழிநடை), ஹிந்து ஆங்கில நாளிதழ் முன்னாள் ஆசிரியர் ஜி.கஸ்தூரி (தொழில்நுட்பம், வணிக உத்தி), ஜகன்மோகினி இதழாசிரியர் வை.மு.கோதைநாயகி (மகளிர் இதழ்) ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்புகளும், இதழியல் துறைக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com