கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

திருவொற்றியூர் அரசு நூலகத்தில் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் திறப்பு: முதல் நாளில் 300 பேர் விண்ணப்பம்

திருவொற்றியூர் கிளை நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தை அம்பத்தூர் கோட்டாட்சியர் ஆர்.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

News image
Updated On :6 மே 2018, 8:34 pm

தினமணி

திருவொற்றியூர் கிளை நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தை அம்பத்தூர் கோட்டாட்சியர் ஆர்.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
 திருவொற்றியூரில் அரசு கிளை நூலகத்துக்கு ரூ. 1 கோடியில் புதிய கட்டடம் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. 3 தளங்கள் கொண்ட இக்கட்டத்தில் முதல் தளத்தில் படிப்பகமும், 2-ஆவது தளத்தில் பல்துறை புத்தகங்கள் அடங்கிய நூலகம், டிஜிட்டல் நூலகம் உள்ளிட்டவை செயல்படுகின்றன.
 இந்நிலையில் 3-ஆவது தளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள போட்டித் தேர்வுகளுக்கான அரசு பயிற்சி மைய திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு திருவொற்றியூர் கிளை நூலக வாசகர் வட்ட கெüரவத் தலைவர் ஜி.வரதராஜன் தலைமை வகித்தார். பயிற்சி மையத்தை அம்பத்தூர் கோட்டாட்சியர் ஆர்.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
 பயிற்சி மைய செயல்பாடுகள் குறித்து கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் நா.துரைராஜ், துணைத் தலைவர் குரு.சுப்பிரமணி ஆகியோர் கூறியது:
 திருவொற்றியூர் நூலகத்துக்குப் புதிய கட்டடம் கட்டப்பட்டதை அடுத்து மாவட்ட நூலகங்களுக்கு இணையாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். பல்வேறு புரவலர்களின் உதவியோடு கணினி வசதியுடன் கூடிய டிஜிட்டல் நூலகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
 மேலும் தமிழகத்தில் உள்ள கிளை நூலகங்களில் திருவொற்றியூர் கிளை நூலகம் மாநில அளவில் அதிக எண்ணிக்கையிலான வாசகர்களைக் கொண்டுள்ளது. இதைப் பாராட்டி தமிழக அரசு கடந்த ஆண்டு விருது வழங்கியுள்ளது.
 இந்த நிலையில், நூலகத்தைப் பார்வையிட வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் மாவட்ட நூலகங்களில் மட்டுமே அமைக்கப்பட்டு வந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தை கிளை நூலகமான திருவொற்றியூரிலும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அதை ஏற்று இப்புதிய பயிற்சி மையத்தை ஏற்படுத்த அமைச்சர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.
 இப்பயிற்சி மையத்தில் குடிமைப் பணி தேர்வுகள், தமிழ்நாடு அரசு நடத்தும் குரூப் 1 முதல் குரூப் 4 வரையிலான தேர்வுகள், வங்கிப் பணியாளர் தேர்வுகள், ரயில்வே பணியாளர் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
 அரசு சார்பில் குறைந்த அளவு பயிற்சியாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டாலும் புரவலர்கள், தன்னார்வலர்கள் மூலம் போதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
 இம்மையம் தொடங்கப்படுவதற்கு முன்பே திருவொற்றியூர் மட்டுமின்றி வடசென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர். தொடர்ச்சியாக நடைபெறும் பல்வேறு தேர்வுகளுக்கு ஏற்ப பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றனர்.
 நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.குப்பன், திருவொற்றியூர் வட்டாட்சியர் எஸ்.ராஜ்குமார், நூலகர் பாணிக் பாண்டியன், வாசகர் வட்ட நிர்வாகிகள் மதியழகன், பாஸ்கர், உதயசூரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.