

மதுரை-நத்தம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் வெட்டப்பட உள்ள சுமார் 900 மரங்களுக்கு பதிலாக புதிய மரக் கன்றுகளை நடவு செய்து பராமரிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நத்தம் வழியாக துவரங்குறிச்சி வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.
இதில், முதல்கட்டமாக மதுரை முதல் நத்தம் வரை 36.43 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மதுரை அவுட்போஸ்ட் முதல் ஊர்மெச்சிக்குளத்தை அடுத்துள்ள செட்டிக்குளம் வரை 7.04 கி.மீ. நீளத்துக்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. மேலும் செட்டிகுளம் முதல் நத்தம் வரையிலான 29.39 கி.மீட்டர் நீளத்துக்கு 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. ரூ.1,028 கோடியிலான இந்த திட்டம் சிலரிடம் வரவேற்பை பெற்றிருந்தாலும், விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள நத்தம், பரளி, வேம்பரளி, சத்திரப்பட்டி உள்ளிட்ட கிராம மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்துக்காக திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டத்தில் விளை நிலங்கள், வீட்டு மனைகள் என சுமார் 296 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 900-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட உள்ளன. ஏற்கெனவே, கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள், மலைகள் சூழ்ந்த நத்தம் சாலையில் விளைநிலங்களை வாங்கி கிளைகளை அமைத்து வருகின்றன. இந்த நிலையில், 4 வழிச்சாலையால் விவசாய நிலங்களுக்கும் மேலும் ஆபத்து ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதனிடையே கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு, அந்தப் பகுதியில், 1.6 கி.மீ. சுற்றளவில் அதிகபட்சமாக நிர்ணயிக்கப்படும் சந்தை விலையிலிருந்து கூடுதலாக 2.25 மடங்கு விலை இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஒரு சிலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், வீட்டுமனைகளை இழப்பவர்கள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
இதுகுறித்து கோவில்பட்டியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது: கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில், மனை வாங்கி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தான் வீடு கட்டினேன். தற்போது 4 வழிச்சாலைக்காக நிலத்தை கையகப்படுத்துகின்றனர். இனி நத்தம் பகுதியில் என்னைப் போன்றவர்களால் மனை வாங்க இயலாது. இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொண்டு வேறு கிராமத்திற்கு செல்வதை தவிர வேறு வழியில்லை என்றார்.
விவசாயம் அழியும்: இயற்கை ஆர்வலர் எம்.பிரபு கூறியதாவது: திண்டுக்கல் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. ஆனால், அதற்கு மாற்றாக இதுவரை புதிய மரங்கள் வளர்க்கப்படவில்லை. இப்போது, மதுரை- நத்தம் 4 வழிச்சாலைக்காக 1000 மரங்கள் வெட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை- நத்தம் வழியாக துவரங்குறிச்சிக்கு 4 வழிச்சாலை என்பது விவசாயத்தை முழுமையாக அழிப்பதற்கான முயற்சியாகவே உள்ளது. திண்டுக்கல்- காரைக்குடி சாலைக்கு வழங்கப்படாத முக்கியத்துவம், 30 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து செல்லும் மதுரை- நத்தம் சாலைக்கு ஏன் வழங்கப்படுகிறது என்பது புதிராக உள்ளது. ஆயிரம் மரங்களை வெட்டும் முன்பு சாலையோரப் பகுதியில் புதிதாக ஆயிரம் மரக்கன்றுகளை வைத்து பராமரிப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.