கொடுமணலில் அகழாய்வுப் பணி: பழைமையான பொருள்கள் கண்டுபிடிப்பு

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், கொடுமணல், தொல்லிடத்தில் நடக்கும் அகழாய்வுப் பணியில் பல பழைமையான அரிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
அகழாய்வு நடைபெற்ற இடம்.
அகழாய்வு நடைபெற்ற இடம்.
Updated on
2 min read

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், கொடுமணல், தொல்லிடத்தில் நடக்கும் அகழாய்வுப் பணியில் பல பழைமையான அரிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
இந்திய தொல்லியல் துறையில் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட அகழாய்வுப் பிரிவு -6 சார்பில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சென்னிமலை ஒன்றியம், கொடுமணலில் அமைந்துள்ள பழங்காலக் குடியிருப்புமேட்டில், கடந்த ஜனவரி 8-ஆம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. 
கொடுமணலில் 1981 முதல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழகத் தொல்லியல் துறை, புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தின் மூலமாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த அகழ்வாராய்ச்சிகளின் மூலம் கொடுமணல் தமிழகத் தொல்லியல் வரைபடத்தில் மிகச் சிறப்பான ஓர் இடத்தைப் பெற்றிருக்கிறது. பேராசிரியர்கள் சுப்பராயுலு, கா.ராஜன் ஆகியோரின் சீரிய ஆராய்ச்சியால் இவ்விடத்தின் தொல்லியல், தொன்மைச் சிறப்புகள் உலக அளவில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
ஆய்வு குறித்து, பெங்களூரு, இந்திய தொல்லியல் துறை அகழ்வாய்வுப் பிரிவு 6-இன் தொல்லியல் கண்காணிப்பாளர் பு.சு.ஸ்ரீராமன் கூறியதாவது: 
கொடுமணல் ஒரு சிறந்த தொழில் வினைஞர்களின் கூடமாக இருந்திருக்கிறது. இங்கு தயாரிக்கப்பட்ட பொருள்கள் அக்காலத்திலிருந்த வணிகவலைத் தொடர்புகளின் மூலம், இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகையால், இந்தியாவின் ஏனைய பகுதிகளில் தயாரிக்கப்பட்ட பொருள்களும் கொடுமணலுக்கு வந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
கடந்த அகழ்வாராய்ச்சிகளில் கொடுமணலில் பண்டைய காலத்தில் இரும்பு, எஃகு, செம்பு பொருள்கள், மணிகள் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இதைத் தவிர, வேறு தொழிற்கூடங்கள் இருந்தனவா என்ற கேள்வியும் எழுகின்றது.
பேராசிரியர் கா.ராஜன் கருத்தின்படி, குறிப்பாக கொடுமணலிலும் பொதுவாக தென்னிந்தியாவிலும் பிராமி எழுத்துகளின் துவக்கம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் துவங்கியது. இக்கால நிர்ணயம் கொடுமணல், பொருந்தலில் கிடைத்த சி-14 கால நிர்ணயங்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆயினும், இக்கருத்தைச் சில தொல்லியல் அறிஞர்கள் சி-14 கால நிர்ணயங்கள் இல்லாததால் ஒப்புக் கொள்ளத் தயங்குகின்றனர். 
ஆகவே, அதிக அளவில் கரித்துகள், களிமண் மாதிரிகளை அகழ்வாராய்ச்சியின் மூலம் எடுத்து சி-14 கால நிர்ணயம் செய்ய வேண்டும். 
இதைக் கருத்தில்கொண்டு, அவற்றுக்கான விடைகளைஅறிய இந்தியத் தொல்லியல் துறையின், பெங்களூரைத் தலமையிடமாகக் கொண்ட பிரிவு-6 கொடுமணலில் 2018 ஜனவரி முதல் அகழ்வாராய்ச்சியை பரந்த பரப்பளவில் மேற்கொண்டது. இந்த அகழ்வாராய்ச்சி இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்டன. 
முதல் அகழ்வாய்விடத்தில் 25 குழிகள் (5-க்கு 5 மீ.) தோண்டப்பட்டன. இக்குழிகளில் எதிர்பார்த்த அளவில் தொல் பொருள்கள் கிடைக்கவில்லை. ஆயினும், கீழ்மட்டத்தில் ஒரு பந்தல்கால் நடுகுழிகளோடு கூடிய ஒரு சதுர வடிவிலான வீடு/ தொழிற்கூடம் கண்டறியப்பட்டது. அதிக அளவில் இப்பகுதியில் வெண்கற்களும், மணிகளைப் பட்டை தீட்டுவதற்குரிய கல்லும் கிடைத்ததால் இத்தரைத் தளம் மணிகள் தயாரிக்கும் தொழிற்கூடமாக இருந்திருக்கும். 
இரண்டாம் அகழ்வாய்விடத்தில் 13 குழிகள் (5-க்கு 5 மீ.) தோண்டப்பட்டன. இப்பகுதியில் அதிக அளவில் சிறப்பு வாய்ந்த தொல்பொருள்கள் கிடைத்தன. அவற்றுள் சிறந்த தொல் பொருள்களின் விவரங்கள் வருமாறு:
அரிச்சுவடி பானை ஓடு: ஒரு சிறிய சென்னிற பானை ஓட்டின் மீது அ, ஆ, இ, ஈ என்ற தமிழ் மொழியின் முதல் நான்கு உயிரெழுத்துகள் பிராமி வரி வடிவத்தில் எழுதப்பட்டுள்ளன. இதில் ஆ, இ என்ற எழுத்துகளின் பிராமி வரி வடிவங்கள் முதல் முறையாகத் தமிழகத்தில் கிடைத்துள்ளன. 
சுடுமண் முத்திரை: சுமார் 2 செ.மீ அளவு கொண்ட இம்முத்திரையின் அடிப்பகுதியில் 'லவஸ' என்ற பிராமி எழுத்துகள் காணப்படுகின்றன. தமிழக தொல்லியல் அகழாய்வுகளில் இதுபோன்ற முத்திரை முதன்முறையாக கொடுமணலில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
தச்சரின் துளை ஊசி: சுமார் 10 செ.மீ. நீளமுள்ள இரும்பாலான முறுக்கப்பட்ட, மரத்தில் துளையிட தச்சர்களால் பயன்படுத்தப்பட்ட துளை ஊசி ஒன்று முதன்முறையாக கொடுமணலில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
இப்பருவ அகழ்வாய்வில் 1,000-க்கும் மேற்பட்டதொல்பொருள்கள் கிடைத்தன. 
இவற்றுள் 203 பொருள்கள் இரும்பாலானவை. 45 செம்பினாலானவை. 6 தங்கத்தினாலானவை. 144 தந்தம்/எலும்பிலானவை. 84 சுடுமண்ணாலானவை. 
இப்பருவ அகழ்வாய்வில் 300-க்கும் மேற்பட்ட தமிழ் பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ள பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் தமிழ், பிராகிருத ஆண் பெயர்கள் காணப்படுகின்றன. 
100-க்கும் மேற்பட்ட கரித்துகள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சில சி-14 கால நிர்ணயம் செய்ய பரிசோதனைக் கூடத்துக்குப் பின்னர் அனுப்பப்படும். இவை தவிர 4 ஈமக் குழிகள் உள்ளன. இக்குழிகளில் அகழாய்வுப் பணிகள் இன்னும் முற்றுப் பெறவில்லை. ஒரு குழியைத் தவிர, 3 குழிகளில் இரு அறைகள் கொண்ட கல்லறை காணப்பட்டது. 3 கல்லறைகளில் முழு பானைகளும், மனித எலும்புக் கூட்டின் முக்கிய எலும்புகளும் கிடைத்தன. 
கோடை வெயிலின் காரணமாகவும், மழையின் காரணமாகவும் சிறிது இடைவெளிக்குப் பின் ஜூன் மாதத்தில் பணிகள் தொடரும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com