

ஊற்றாக முகிழ்த்து, குளமாகப் பெருகி, நதியாக நடந்து, பேரிரைச்சலோடு அருவியாக மலை இறங்கி, பாறைகளை உருட்டி விளையாடி, இயந்திரங்களை இயக்கி, மின்சாரமாகப் பொலிந்து, புகை எழுப்பும் புனலாக மாயம் புரிந்து, சுற்றியிருப்பவற்றில் ஈரம் சேர்த்து, ஆசை கொண்டு அணுகியவர்களின் அழுக்குப் போக்கி, தனக்குத்தானே சிரிப்பது போல் சுழித்துக் கொண்டு, அணையில் தங்கி ஆசுவாசம் கொண்டு, சடாரென்று அகண்டு பின் ஆழ்ந்து கிறங்கிப் பெருங்கடல் நோக்கி விரைந்து பிணைகிறாள் காவிரி.
நதியின் கதை மட்டுமல்ல, என் நண்பன் பாலகுமாரனின் வாழ்க்கையும் இதுதான். கட்டற்ற போக்கில் திக்கெட்டும் பரவித் திளைத்து, திளைத்தலில் அறிந்து, அறிந்ததைப் பகிர்ந்து, எல்லாவற்றிலும் இணைந்து, எல்லாவற்றையும் துறந்து ஒரு பெருங்கடலாய் முடிந்த பேராறு அவர். பிறவிப் பெருங்கடலை நீத்து அவர் இறை என்னும் பெருங்கடலில் போய் இணைந்து கொண்டார் நேற்று. என்னை எண்ண அலைகள் தின்று கொண்டிருக்கின்றன.
அப்போதெல்லாம் இலக்கியச் சிந்தனைக் கூட்டங்கள், மாதத்தின் கடைசி சனிக்கிழமைகளில் ஒரு கடிகார ஒழுங்கோடு நடந்து கொண்டிருந்தன. கூட்டத்தை விட கூட்டம் முடிந்த பின் அரங்கிற்கு வெளியே அவிழும் அரட்டைக் கச்சேரிகள் வெகு சுவாரஸ்யமானவை. அங்கு கடிகார ஒழுங்கு கிடையாது. ஆழ்ந்த ஆராய்ச்சிப் பார்வை இராது. நாவடக்கிப் பேச வேண்டிய சபை நாகரிகத்திற்கு அவசியமில்லை. அதனால் சுவாரஸ்யத்திற்குக் குறைவில்லை.
பாலகுமாரனை அங்குதான் முதலில் சந்தித்தேன். அருகில் சுப்ரமண்ய ராஜு. நான் சந்தித்தது 1972 ஏப்ரல் என்று ஞாபகம், அந்த மாதக் "கணையாழி'யில் என் கவிதை பிரசுரமாகியிருந்தது. அதற்கு அடுத்த பக்கத்தில் சுப்ரமண்ய ராஜுவின் கவிதை. இதுவே எங்களுக்குள் தோழமை ஏற்படப் போதுமானதாக இருந்தது.
அந்த முதல் சந்திப்பில் என்ன பேசினோம் என்று இன்று நினைவில்லை. ஆனால் எங்களுக்குள் ஓர் இயல்பான ஈர்ப்பு இருந்ததை உணரமுடிந்தது. அதன் பின் எத்தனையோ சந்திப்புகள், உரையாடல்கள், விவாதங்கள், சர்ச்சைகள். ஆனால் எல்லாம் சந்தோஷங்கள். நேரம் கெட்ட நேரத்தில், "கூறுகெட்டதனமாக' விநோதமான இடங்களில் உட்கார்ந்து விவாதித்திருக்கிறோம். உஸ்மான் ரோடு ரவுண்டானாவில், தி.நகர் பேருந்து நிலையக் குட்டிச் சுவரில், ஜாம்பஜார் கடைகளின் விசுப்பலகையில், ஆழ்வார்பேட்டை டீ கடையில் என எங்கள் இலக்கியச் சர்ச்சைகள் நடந்திருக்கின்றன.
அப்போது நான் "வாசகன்' என்றொரு இலக்கியச் சிற்றிதழை நடத்தி வந்தேன். சென்னை வெறுத்துப் போன ஒரு தருணத்தில், தஞ்சாவூரில் வேலை தேடிக் கொண்டு இடம் பெயர்ந்தேன். பின் வந்தன எமர்ஜென்சி நாள்கள். பாரதியார் கூடப் பயங்கரவாதியாகப் பார்க்கப்பட்ட காலம். காந்தியார் கலகக்காரராகக் கருதப்பட்ட நேரம்.
முன்னறிவிப்பில்லாமல் ஒரு பகல் பொழுதில் பாலகுமாரன் தஞ்சாவூரில் என் பணியிடத்திற்கு வந்தார். உடனே புறப்படு என்றார். வாசலில் ஒரு டாக்சி தயாராக இருந்தது. "என்ன விஷயம்?' என்றேன். "க்யூ பிரிவிலிருந்து உன்னை விசாரிக்க வருவார்கள். மாட்டிக் கொள்ளாதே' என்றார். க்யூ பிரிவு என்பது காவல்துறையின் உளவுப் பிரிவு. "என்னை எதற்கு விசாரிக்க வேண்டுமாம்?' என்றேன். வாசகன் என்றார் சுருக்கமாக.
வரட்டும் பார்த்துக் கொள்கிறேன் என்று அந்த நிமிடமே பயத்தை உதறினோம். பக்கத்து ஊர்களைப் பார்த்து வரலாம் என்று கிளம்பினோம். திருவையாறில் நின்றோம். காவிரி சுழி போட்டுக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. பார்க்கும் போதே கிறக்கமாக இருந்தது. இனித் தாளாது தண்ணீரில் குதித்தே ஆக வேண்டும் என்று தவித்தது மனது. எந்த வித முன்னேற்பாடும் செய்து கொள்ளவில்லை. போட்டிருந்த உடையைத் தவிர வேறு ஆடைகளை எடுத்து வரவில்லை. அவ்வளவு ஏன், துவட்டிக் கொள்ளக்கூடத் துண்டு கிடையாது.
தியாகராஜர் சந்நிதியில் பூஜை செய்து கொண்டிருந்த வேதியரிடம் இரண்டு துண்டு இரவலாக வாங்கிக் கொண்டோம். இறங்கி விட்டோம் காவிரியில். குளித்தோம். அது குளியல் அல்ல. ஒரு களியாட்டம். பாலகுமாரனுக்கு நீச்சல் தெரியும். துளைந்து துளைந்து நீரில் அளைந்தார். நான் அந்தப் பக்கம் போகாதே என அலறிக் கொண்டிருக்க, சுழல் பக்கம் போய்ச் சீண்டிப் பார்த்தார்.
கரையேறினோம். பசி. பயங்கரப் பசி. கும்பகோணம் போய் கிடைத்ததைத் தின்றோம். கோயில்களுக்குப் போனோம். சந்நிதியில் படுத்துக் கிடந்தான் சாரங்கன். ஒரு கணம் உற்றுப் பார்த்தார் பாலா. அடுத்த கணம் அவன் கணீர்க் குரல்,
"நடந்த கால்கள் நொந்தவோ, நடுங்கு ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ, விலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் காவிரிக் கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே'
என்று பாசுரத்தை முழங்கியது. ஆரத்தித் தட்டேந்தி வந்த அர்ச்சகர் அப்படியே நின்றார். அவர் ஏந்தி வந்த சுடர் கூட அசையாமல் எங்களைப் பார்த்தது போன்றொரு பிரமை எனக்கு. அந்த நிமிடம் பாலகுமாரனைப் பற்றி நின்றது பக்தியல்ல, அது ஓர் ஆனந்தம். தமிழ் தந்த லாகிரி.
ஆசிரியர் சாவி சொந்தமாக வார இதழ் தொடங்கியபோது பாலா, ராஜூ, நான் மூவரும் ஒரு இழையில் கோர்க்கப்பட்டோம். கவிதையிலிருந்து பாலாவின் கவனம் புதினத்தின் பக்கம் திரும்பியிருந்தது. இதழியலை நோக்கி என் ஆர்வம் கிளைத்திருந்தது. இருந்தாலும் பாலா பேட்டிகள், கட்டுரைகள், எழுதுவார். நான் கதைகளும் எழுதி வந்தேன்.
சாவி ஒரு ஜனநாயகம் அறிந்த ஆசிரியர். என்ன செய்யலாம், புதிதாக என்ன செய்யலாம் என்று யோசனைகளைத் தூண்டிக் கொண்டே இருப்பார். அதன் பொருட்டு அவ்வப்போது ஆசிரியர் குழுக் கூட்டம் நடக்கும். அநேகமாக அவர் வீட்டு மொட்டை மாடியில். இராச் சாப்பாடும் இருக்கும். அந்த மாதிரிக் கூட்டம் ஒன்றில்தான், நாங்கள் மூவரும் ஆளுக்கொரு நாவல் எழுதலாமே என்றார் சாவி. பாலா பரவசமானார். அவர் முகத்தில் பூத்த வெளிச்சத்தைப் பார்த்த நான், பாலா முதலில் ஆரம்பிக்கட்டும் என்றேன். சாவி சாருக்கு அதில் ஆட்சேபம் ஏதுமில்லை. எல்லோருக்கும் சந்தோஷம்.
பாலாவின் மனம் கதையை நெய்ய ஆரம்பித்து விட்டது. ஆனால் தலைப்புத்தான் சிக்கவில்லை. ஒருநாள் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தோம். சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் அப்போது சோடியம் விளக்குகள் அறிமுகமாகியிருந்தன. பாலா திடீரென்று, ஆர்கிமிடிஸ் உற்சாகத்தோடு மெர்க்குரிப் பூக்கள் என்றார். முதல் நாவலுக்குத் தலைப்புக் கிடைத்து விட்டது.
அந்த நாவலில் ஓர் அத்தியாயத்தை "வீடென்று எதனைச் சொல்வீர்' என்ற கவிதையைச் சொல்லித் தொடங்கியிருப்பார். அதைப் படித்த ஆசிரியர் சாவி என்னய்யா இது?' எனத் தன் கண்ணாடி வழியே கூர்ந்து பார்த்தார். ஆட்சேபிக்கிறாரோ என பாலா அமைதி காத்தார். "நடக்கட்டும் நடக்கட்டும்' என்று புன்னகைத்தார். "இரும்புக் குதிரைகள்' எழுதிய போது அது அவருக்கு நினைவு வந்ததோ என்னவோ, அதில் குதிரையை மையப்படுத்திக் கவிதைகளாகப் பொழிந்து தள்ளினார். ஓர் அத்தியாயம் முழுக்கக் கவிதையாகவே எழுதினார். ஒரு வெகுஜன ஊடகத்தில், ஒரு தொடர்கதையில் இப்படி முனைய எவரும் தயங்குவார்கள். ஆனால் இலக்கியச் சிற்றேடுகளில் எழுத்துப் பயணத்தை தொடங்கிய எங்களுக்கு இது போன்ற இதமான திமிர் உள்ளூற இழைந்து கொண்டிருந்தது. எழுத்தையே வாழ்வாதாரமாகக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையைத் தந்ததும் இந்தத் திமிர்தான்.
இளமையில் இலக்கியம் அவரை வசீகரித்தது போலவே (அது அவருக்கு அவரது அம்மா கொடுத்த சீர்) பின்னாட்களில் ஆன்மிகமும் சரித்திரமும் அவரை ஆட்கொண்டன. உடையாரை எழுத அவர் மேற்கொண்ட உழைப்பு அசாதாரணமானது. யோகி ராம் சுரத்குமார் மீது அவர் கொண்ட ஈர்ப்பு ஆழமானது.
ஓயாத உழைப்பும் சலியாத சிந்தனையும் அவரது ஆணிவேர்கள். ஓர் இளந்தலைமுறை வாசகர்களைக் கை நீட்டி அழைத்துக் கரையேற்றிய எழுத்து அவருடையது. நான் மட்டும் என் பதின்ம வயதில் பாலகுமாரனைப் படிக்காமல் போயிருந்தால் இப்படி மலர்ந்திருக்க மாட்டேன் என இளம் பெண்களும் நண்பர்களும் சொல்வதைக் கேட்கும் போது ஆகா! இவன் அடுத்த தலைமுறைக்குக் கிடைத்த ஜானகிராமன் என்று என் மனம் ஓசையின்றிக் குதூகலிக்கும்.
பொங்கிப் பொங்கி வருகிறது என்னுள் அவரைப் பற்றிய நினைவுப் புனல். எதை எழுத? எதை மறந்தேன் எழுதாமல் விட?
தி.ஜானகிராமன் "நடந்தாய் வாழி காவிரியை' இப்படி முடிக்கிறார்:
"எதையும் முழுதாகப் பார்க்க முடியாது. உள்ளங்கை ரேகையையே ஒரு வாழ்நாள் முழுதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். காவிரியின் நீர்ச் சுழிப்பையே பார்த்துக் கொண்டிருக்கலாம். ஞானம், கவிதை, கோயில் எல்லாம் அதில் காலம் காலமாக கொப்பளித்து நகர்ந்து கொண்டேதானிருக்கும்.
கடலலை எழுந்து காவிரி நீரைத் தனக்குள் அணைத்துக் கொண்டேயிருந்தது. இது முடிவற்ற காதல். மூப்பும் மறைவும் தெரியாது முக்காலமும் முயங்கும் காதல் குமிழிகள், அலைகள் எல்லாம் கடலில் கலந்து முகிலாக மாறும். மீண்டும் வாழும்' பாலா வாழ்கிறான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.