பிளஸ் 2: 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 91.1 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றதை அடுத்து மகிழ்ச்சியில் திளைத்த சென்னை பள்ளி மாணவ, மாணவியர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றதை அடுத்து மகிழ்ச்சியில் திளைத்த சென்னை பள்ளி மாணவ, மாணவியர்.
Updated on
2 min read

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 91.1 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக 6.4 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தேர்ச்சி 1 சதவீதம் குறைவு: தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வை பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்களாகவும் மொத்தம் 9 லட்சத்து 7,620 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் ஒட்டுமொத்தமாக தற்போது 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு (2017) தேர்ச்சியுடன் (92.1 சதவீதம்) ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 1 சதவீத தேர்ச்சி குறைந்துள்ளது. 
தேர்வெழுதியவர்களில் 94.1 சதவீத மாணவிகளும், 87.7 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் கூடுதலாக 6.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். எனினும் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் (94.5 சதவீதம்) இந்த ஆண்டு 0.4 சதவீத அளவுக்கு (94.1 சதவீதம்) குறைந்துள்ளது. 
1,907 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி: இந்த ஆண்டு 6,754 மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். அதில் 1,907 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளன. 2,574 அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 238 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.
விருதுநகர் மீண்டும் முதலிடம்: பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் 97.05 சதவீத தேர்ச்சி பெற்று மாவட்டங்களில் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு பொதுத்தேர்விலும் விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு 83.35 சதவீத தேர்ச்சியுடன் விழுப்புரம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 86.84 சதவீத தேர்ச்சியுடன் கடலூர் மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்திருந்தது. 
ஆரவாரம் இல்லாத தனியார் பள்ளிகள்: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மாணவர்களின் பெற்றோருக்கு மதிப்பெண்களுடன் செல்லிடப்பேசி மூலம் அனுப்பிவைக்கப்பட்டன. 
இதன் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வதற்காக பள்ளிகளுக்கும் பிரௌசிங் மையங்களுக்கும் செல்வது வெகுவாகக் குறைந்தது. மேலும் ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கான பரிசு வழங்குதல், விளம்பரப் பலகைகளில் மாணவர்களின் புகைப்படங்கள் என எந்தவிதமான ஆரவாரமும் இல்லாமல் அமைதி நிலவியது. 
இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்: விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வரும் வியாழக்கிழமை (மே 17) முதல் சனிக்கிழமை (மே 19) வரை விண்ணப்பிக்கலாம்.
கட்டணம் எவ்வளவு?: விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணமாக பகுதி 1 மொழிப் பாடத்திற்கு ரூ.550, பகுதி 2 மொழி (ஆங்கிலம்) - ரூ.550, ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்) -தலா ரூ.275 செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைச் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே ரொக்கமாகச் செலுத்த வேண்டும்.
மே 21-இல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: பிளஸ் 2 தேர்வர்கள் தாங்கள் பயின்ற, தேர்வெழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 21-ஆம் தேதி பிற்பகல் முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

1,180 மதிப்பெண்களுக்கு மேல் 231 பேர்

சென்னை, மே 16: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1,180 மதிப்பெண்களுக்கு மேல் 231மாணவர்கள் மட்டுமே பெற்றுள்ளனர்.
இவர்களில் மாணவிகளின் எண்ணிக்கை 181, மாணவர்களின் எண்ணிக்கை 50 ஆகும். கடந்த ஆண்டு 1,171 மாணவர்கள் 1,181 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 
நிலை வாரியாக மதிப்பெண்கள் மாணவர்களின் எண்ணிக்கை

1,180 மதிப்பெண்களுக்கு மேல் 231
1,151 முதல் 1,180 வரை 4,847
1,126 முதல் 1,150 வரை 8,510
1,101 முதல் 1,125 வரை 11, 739
1,001 முதல் 1,100 வரை 71,368
901 முதல் 1,000 வரை 1,07,266 
801 முதல் 900 வரை 1,43,110 
701 முதல் 800 வரை 1, 65,425
700 மதிப்பெண், அதற்கு கீழ் 3, 47,938

விருதுநகர் முதலிடம்; விழுப்புரத்துக்கு கடைசி இடம்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 97.05 சதவீத தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் 83.35 சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடத்தில் உள்ளது. 

மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம்:

மாவட்டம் தேர்ச்சி சதவீதம்

1. விருதுநகர் 97.05
2. ஈரோடு 96.35
3. திருப்பூர் 96.18
4. ராமநாதபுரம் 95.88
5. நாமக்கல் 95.72
6. சிவகங்கை 95.60
7. தூத்துக்குடி 95.52
8. கோயம்புத்தூர் 95.48
9. தேனி 95.41
10. திருநெல்வேலி 95.15
11. கன்னியாகுமரி 95.08
12. பெரம்பலூர் 94.10
13. கரூர் 93.85
14. சென்னை 93.09
15. திருச்சி 92.90
16. தருமபுரி 92.79 
17. மதுரை 92.46
18. சேலம் 91.52 
19. உதகமண்டலம் 90.66
20. தஞ்சாவூர் 90.25
21. திண்டுக்கல் 89.78
22. புதுக்கோட்டை 88.53
23. திருவண்ணாமலை 87.97
24. காஞ்சிபுரம் 87.21
25. திருவள்ளூர் 87.17
26. கிருஷ்ணகிரி 87.13
27. வேலூர் 87.06
28. கடலூர் 86.69
29. நாகப்பட்டினம் 85.97
30. திருவாரூர் 85.49
31. அரியலூர் 85.38
32. விழுப்புரம் 83.35

முக்கிய பாடங்களில் தேர்ச்சி சதவீதம்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட முக்கிய பாடங்களில் 95 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
அனைத்துப் பாடங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்தபட்சமாக வரலாறு பிரிவில் 89.19 சதவீத மாணவர்களும், வணிகவியலில் 90.31 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

பாடங்கள் தேர்ச்சி சதவீதம்

தமிழ் 96.85
ஆங்கிலம் 96.97
இயற்பியல் 96.44
வேதியியல் 95.02
உயிரியல் 96.34
நுண்ணுயிரியல் 98.96
தாவரவியல் 93.96
புள்ளியியல் 98.31
கணினி அறிவியல் 96.14
புவியியல் 99.21
கணிதம் 96.19
வரலாறு 89.19
பொருளியல் 90.94
வணிகவியல் 90.31
வணிக கணிதம் 95.99

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com