தமிழகத்தில் சமூக விரோதிகள்: அரசியல் தீயை பற்ற வைத்த பரட்டை!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறிய பிறகு, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துகள் தமிழக அரசியலில் சூடுபிடிக்க
தமிழகத்தில் சமூக விரோதிகள்: அரசியல் தீயை பற்ற வைத்த பரட்டை!
Updated on
2 min read

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறிய பிறகு, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துகள் தமிழக அரசியலில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. விஷக்கிருமிகள், சமூக விரோதிகளால் தமிழகத்துக்கு ஆபத்து என்பதை அழுத்திக் கூறிய ரஜினிகாந்த்தின் வார்த்தைகளுக்கு நாலாபுறமும் இருந்து எதிர்வினைகள் வந்துக் கொண்டு இருக்கின்றன.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டில் வைத்து செய்தியார்களிடம் பேசியபோது, பாதிக்கப்பட்ட மக்கள் தன்னை நடிகனாக பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள் என்றார். எனவே, அவரது நடவடிக்கையில் அரசியல் இருக்காது என்றே அனைவரும் கருதினர்.
ஆனால், தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கியதும் அவர் காரில் ஏறியபோது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்தைக் கண்டு உற்சாகமடைந்தார் என்றே கூறலாம். ஏறத்தாழ அரை மணி நேரம் அவர் திறந்த காரில் நின்றபடி ரசிகர்களை நோக்கி கைகூப்பிய பிறகே அங்கிருந்து அவரால் புறப்பட முடிந்தது. தொடர்ந்து, அரசு மருத்துவமனை வரை சாலையோரத்தில் ஆங்காங்கே திரண்டு இருந்த ரசிகர்களையும், பொதுமக்களையும் பார்த்து அவர் கையசைத்து சென்றார்.
தமிழக துணை முதல்வர், தமிழக ஆளுநர் ஆகியோர் வந்து சென்றபோது இல்லாத போலீஸாரின் கெடுபிடி நடிகர் ரஜினிகாந்த் வந்தபோது வெளிப்பட்டது. அரசு மருத்துவமனைக்குள் அவர் நுழைந்த சமயத்தில் நோயாளிகள் மற்றும் அவர்களோடு தங்கி இருந்தவர்கள் மட்டுமின்றி மருத்துவர்களில் பலர் கூட ரஜினியை பார்க்கத் திரண்டனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மருத்துவமனையில் உள்ளோரை பார்வையிட்ட பிறகு ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்குப் போராட்டத்தில் ஊடுருவிய விஷக்கிருமிகள் மற்றும் சமூக விரோதிகளே காரணம் என அவர் குற்றம்சாட்டினார். கடந்த சில நாள்களுக்கு முன்பு முதல்வரும் இதே கருத்தையே கூறியிருந்தார். ஆனால், அரசியல் கட்சியினர் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது அதே கருத்தை அழுத்தமாக கூறி தமிழக அரசியல் களத்தில் தீயை பற்றவைத்துள்ளார் ரஜினிகாந்த்.
சட்டப்பேரவையில், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்போது, போராட்டத்தை திசை திருப்பியது திமுகதான் என்றும் இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார். அதே கருத்தை பிரதிபலிóக்கும் வகையில், எதற்கெடுத்தாலும் அரசியல் செய்பவர்ளை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றும், நேரம் வரும்போது மக்கள் தங்கள் நியாயத்தை காட்டுவார்கள் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் நாம் தமிழர், மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பங்கேற்றதாக துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழகம் போராட்ட பூமியாக இருந்தால் தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் கிடைக்காது என்பதை பதிவு செய்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பதவி விலக வேண்டும் என திமுக செயல்தலைவர் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கடந்த சில நாள்களாக கூறி வந்தனர். ஆனால், எதற்கெடுத்தாலும் ராஜினாமா செய்யச் சொல்வது பிரச்னைக்கு தீர்வாக இருக்காது என்ற கருத்தை ரஜினிகாந்த் ஆணித்தரமாக பதிவு செய்துள்ளதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேலும், தமிழகத்தில் சமூக விரோதிகளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரும்புக்கரம் கொண்டு அடக்கி வைத்திருந்தார் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த பாராட்டை ஏற்றுக் கொள்ள அரசியல் கட்சியினர் மத்தியில் மெளனம் நிலவி வருகிறது. 
தூத்துக்குடியில் பேட்டியளித்த சில மணி நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், திரைப்பட இயக்குநர் அமீர் உள்ளிட்டோரும் நடிகர் ரஜினிகாந்த் ஆளும் கட்சியினரின் குரலாக செயல்படுகிறார் என குற்றம்சாட்டினர்.
விரைவில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்த நிலையில், முதல் முதலாக மக்களை சந்திக்கும் ரஜினிகாந்த், ஆளும்கட்சிக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்வார் என ஆவலோடு காத்திருந்த அரசியல் தலைவர்களுக்கு அவர் பற்ற வைத்த தீ பீதியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
தூத்துக்குடியில் கருத்து தெரிவித்த பிறகு பல மணி நேரம் கழித்து சென்னைக்கு சென்ற அவர், விமான நிலையத்தில் வைத்தும் ஆவேசமாக தமிழகத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி உள்ளனர் என்பதை மீண்டும் பதிவு செய்துள்ளார். ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை உருவாக்கப்படும் என அனைத்துத் தலைவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு பலரின் புருவத்தை உயரச் செய்துள்ளது. எந்த பிரச்னைக்கும் போராட்டம் மட்டுமே தீர்வாகாது என கூறிய ரஜினிகாந்தின் கருத்தை ஏற்பதில் பலருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பிறகு அவர் தெரிவித்த இந்த கருத்து மக்களின் மனநிலையின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடியில் இருந்து அரசியல் களத்தில் நடிகர் ரஜினிகாந்த் தீயை பற்றவைத்து விட்டார் என்றே கூறலாம். நடிகர் ரஜினிகாந்த் நடித்த 16 வயதினிலே திரைப்படத்தில், ரஜினிகாந்தை பார்த்து கவுண்டமணி பேசும்போது பத்த வைச்சுட்டியே பரட்டை என்ற வாசகமே தற்போது நினைவுக்கு வருகிறது. ரஜினிகாந்தின் இந்த கருத்துகள் எங்கு கொண்டுபோய் முடியும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com