

கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை தகவல் அறிவிப்பு அமைப்பை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
சென்னை சேப்பாக்கம் மாநில கட்டுப்பாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோதனை அடிப்படையில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பேரிடர் காலங்களில் தகவல் பரிமாற்றம் மிக முக்கியம். பேரிடர் பாதிப்புகளுக்கு உள்ளாகும் மக்களுக்கு உரிய காலத்தில் எச்சரிக்கை தகவல்களைத் தெரிவிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை தகவல் அறிவிப்பு அமைப்புகள் கடலோர பேரிடர் அபாய குறைப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் எல்காட் நிறுவனம் மூலம் ரூ.50 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பேரிடர் காலங்களில், ஆபத்து நெருங்குவதற்கு முன்னதாகவே, பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கைத் தகவல்கள் அனுப்பப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறச் செய்து, உயிரிழப்புகளைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கம்.
இந்தத் தகவல் அறிவிப்பு அமைப்பு, இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்திய கடல்சார் தகவல் மையங்களிலிருந்து பெறப்படும் எச்சரிக்கை தகவல்களை, ஒலி அலைகள் மூலமாகவும், முன்பதிவு ஒலி எச்சரிக்கை செய்திகள் மூலமாகவும், நேரடி ஒலி எச்சரிக்கை செய்திகள் மூலமாகவும் மக்களுக்குச் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சமாக பேரிடரால் பாதிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் பிரத்யேக அவசரத் தகவலை அனுப்ப இயலும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் நிர்வாக ஆணையர் கொ. சத்யகோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.