இத்தனை காலம் நமக்கு உணவளித்தவர்களுக்கு நாம் உதவும் நேரம் இது!

கஜா புயல் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதைப் போலவே தமிழகத்தின் 8 மாவட்டங்களையும் கொஞ்சமும் கருணை காட்டாமல் சூறையாடிச் சென்றுள்ளது.
இத்தனை காலம் நமக்கு உணவளித்தவர்களுக்கு நாம் உதவும் நேரம் இது!
Published on
Updated on
1 min read


கஜா புயல் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதைப் போலவே தமிழகத்தின் 8 மாவட்டங்களையும் கொஞ்சமும் கருணை காட்டாமல் சூறையாடிச் சென்றுள்ளது.

நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பில் உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கஜா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உதவிக் காரம் நீட்டுமாறு மக்களுக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும் தனது பேஸ்புக் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் மையங்கள் தொடர்பான முகவரிகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.

எலி வலையானாலும் தனி வலை என்ற பழமொழிக்கு ஏற்ப, தனது குடிசை வீடானாலும் ராஜா, ராணி போல அதில் வாழ்ந்தவர்கள் இன்று சாலைகளில் செய்வதறியாது கலங்கி நிற்கிறார்கள்.

இத்தனை நாள் தங்களை ராஜாவாக வைத்திருந்த தென்னை, வாழை, நெற் பயிர்கள் இன்று தங்கள் உயிரை இழந்ததோடு, விவசாயிகளையும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்திச் சென்றுள்ளது.

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மற்றும் தேனி, மதுரையின் சில பகுதிகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டன. வீடுகளை தரைமட்டமாக்கி, வாழ்வாதாரங்களை முடக்கிப் போட்டுள்ளது. 

வேறோடு பிடுங்கிப் போட்டுச் சென்ற மரங்களைப் பார்த்து கதறும் விவசாயிகள், அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தோடு தினந்தோறும் கண் விழித்தவர்கள், இன்று எதுவுமே இல்லாத நிலையில் உறக்கத்தையும் தொலைத்துள்ளனர்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து வளர்த்த தென்னை மரங்கள் எங்களுக்கு வாழ்வளிக்கும் நேரத்தில் இப்படி புயலால் சாய்ந்து கிடக்கிறதே என்று கண்ணீர் விடும் விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையே இல்லை.

சொல்லொணாத் துயரில் தவிக்கும் விவசாயிகளுக்கு நம்மால் முயன்ற உதவிகளை செய்யும் நேரம் இது. இத்தனை காலமும் நமக்கு உணவளித்தவர்களுக்கு இயன்றதைச் செய்வோம். உங்கள் பகுதிக்கு அருகே நிவாரணப் பொருட்கள் சேகரிப்பில் ஈடுபடுவோரிடம் உங்களது பங்களிப்பையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

தேவைப்படும் பொருட்கள்: 
1. போர்வைகள்
2. டார்ச் லைட்
3. வேட்டி, சட்டை, புடவை (புதிய ஆடைகள் மட்டும்)
4. லுங்கி, டவல், நைட்டி (புதிய ஆடைகள் மட்டும்)
5. ஓடோமாஸ் பாக்கெட்டுகள்
6. மளிகை சாமான்கள்
7. மெழுகுவர்த்தி, தீப்பெட்டி மற்றும் சில அத்தியாவசியப் பொருட்கள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com