கஜா புயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

கஜா புயல் பாதிப்புகளை சீரமைக்க நிவாரண நிதியாக ரூ.13 ஆயிரம் கோடி அளிக்கவும், புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய குழுவை
கஜா புயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

கஜா புயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கக்கோரியும், சேத பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த மத்திய பேரிடர் ஆய்வுக்குழுவை விரைந்து தமிழகம் அனுப்பி வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்தார் முதல்வர் பழனிசாமி.

கஜாபுயலால் ஏற்பட்ட சேத விவரங்களை எடுத்துக் கூறி, தேவையான நிதியைப் பெறும் வகையில் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை காலை நேரில் சந்தித்து பேசினார். 

தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கஜா புயல் கரையைக் கடந்தது. அப்போது, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்த காற்று, கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகின. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழக அரசு மீட்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டர் மூலம் நேரில் பார்வையிட்டார். 

இதைத் தொடர்ந்து, புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு நிவாரண நிதி கோருவதற்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக, அவர் விமானம் மூலம் சென்னையில் இருந்து புதன்கிழமை இரவு 8.50 மணியளவில் தில்லி சென்றந்தார். 

இந்நிலையில், தில்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை காலை 9.45 மணியளவில் நேரில் சந்தித்தார். அப்போது, கஜா புயல் பாதிப்பு, சேதம் குறித்து எடுத்துக் கூறி, தமிழகத்திற்கு தேவையான புயல் நிவாரண நிதியை வழங்கக் கோரி வலியுறுத்தினார். 

இது தொடர்பாக தமிழக வருவாய் மற்றும் நிதித் துறை தயாரித்துள்ள அறிக்கையையும் பிரதமரிடம் அளித்த முதல்வர் பழனிசாமி, கஜா புயல் பாதிப்புகளை சீரமைக்க நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி அளிக்கவும், புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்புமாறு கோரினார். 

புயல் பாதிப்பை சரி செய்ய தமிழக அரசுக்கு விரைவாக நிதி ஒதுக்கவும், புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். 

முதல்வரின் கோரிக்கையை அடுத்து கஜாவால் பாதிக்கப்பட்ட தமிழக மாவட்டங்களை விரைவில் வந்து மத்தியக் குழு ஆய்வு நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com