செங்கல் உற்பத்தி கடும் பாதிப்பு: விலை உயர வாய்ப்பு?

தொடர் மழை மற்றும் வேலை ஆள்கள் இல்லாததால் தாராபுரம் பகுதியில் உள்ள சேம்பர் மற்றும் சூளைகளில் செங்கல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
உடுமலை சாலையில் உற்பத்தியின்றி காட்சியளிக்கும் செங்கல் சேம்பர். 
உடுமலை சாலையில் உற்பத்தியின்றி காட்சியளிக்கும் செங்கல் சேம்பர். 


தாராபுரம்: தொடர் மழை மற்றும் வேலை ஆள்கள் இல்லாததால் தாராபுரம் பகுதியில் உள்ள சேம்பர் மற்றும் சூளைகளில் செங்கல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் செங்கல் விலை உயர வாய்ப்புள்ளதாக சேம்பர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டாரத்தில், தாராபுரம், கொண்டரசம்பாளையம், திருமலைபாளையம், தளவாய்ப்பட்டினம், அலங்கியம் உள்ளிட்ட பகுதிகளில் 80க்கும் மேற்பட்ட சேம்பர்களும், 130க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளும் இயங்கி வருகின்றன. இதன்மூலம் தினசரி 40 லட்சம் செங்கல்கள் வரை உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த செங்கல்கள் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், திருப்பூர், கோவை, பல்லடம் ஆகிய  பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. 

இந்த சேம்பர் (நவீன கருவிகளுடன் செயல்படுவது) மற்றும் சூளைகளில் (விறகு பயன்படுத்தி உற்பத்தி செய்வது) மதுரை, கடலூர், ராமநாதபுரம் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஒரு லோடு செங்கல் (5,000 எண்ணிக்கை கொண்டது) ரூ.30 ஆயிரம் வரை விற்பனையாகிறது. சில்லறை விலையில் ஒரு செங்கல் ரூ.7 வரை விற்பனையாகிறது. தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் செங்கல் லோடு அனுப்பப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு முன் தாராபுரம் பகுதியில் தொடர் மழை பெய்தது. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்தனர். ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகைக்கு போனஸ் மற்றும் முன்பணம் பெற்று சொந்த ஊருக்குச் செல்லும் தொழிலாளர்கள் இந்த ஆண்டு பணியின்மையால் ஊதியம் கூட பெறமுடியாமல் தவித்தனர். 

தற்போது தீபாவளிப் பண்டிகை முடிந்து வழக்கம்போல் செங்கல் உற்பத்தி துவங்கியிருக்க வேண்டிய நிலையில் புயல் காரணமாக தாராபுரம் பகுதியில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் சேம்பர் மற்றும் சூளைகளில் செங்கல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே உற்பத்தி செய்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் செங்கல்கள் மழையால் சேதமடைந்துவிட்டன. இதனால் தாராபுரம் பகுதியில் கட்டுமானப் பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சேம்பர் உரிமையாளர்  மணி கூறியதாவது: 

தாராபுரம் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல் தொடர் மழை பெய்தபோது செங்கல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது செங்கல் விலை ரூ.8 வரை உயர்ந்தது. தற்போது அதுபோன்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் இருந்து சூளைச் செங்கல் அதிக அளவு இப்பகுதியில் விற்பனை செய்யப்படுவதால் செங்கல் விலை உயர்வில் கால தாமதம் ஏற்படுகிறது. இதே நிலை இன்னும் ஓரிரு வாரத்துக்கு நீடித்தால் செங்கல் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும் என்றார்.   

செங்கற்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால் விலை உயர்ந்திருப்பதாகவும் இதனால் கட்டுமானத் தொழில் பாதிக்கப்படுவதாகவும் கூறுகிறார் கோயம்புத்தூர் கட்டுமானப் பொறியாளர்கள் சங்கத்தின் (கொசினா) தலைவர் டி.ஜே.மோகன்ராஜ். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கட்டுமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்களுக்குத் தேவையான செங்கற்கள் கோவை மாவட்டத்தின் தடாகம், கணுவாய் பகுதிகளில் இருந்தும் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அதன் சுற்றுப் பகுதிகளில் இருந்தும் கிடைத்து வருகிறது. செங்கல் சூளைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் வெளி மாவட்டங்களையும், வெளி மாநிலங்களையும் சேர்ந்தவர்கள். ஆண்டுதோறும் இவர்கள் தீபாவளி நேரத்தில் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டு தீபாவளி முடிந்து பல நாள்கள் கழித்துதான் வேலைக்குத் திரும்புவார்கள்.

இதனால் தீபாவளிக்கு பிறகான காலகட்டத்தில் கட்டுமானத் தொழிலில் சுணக்கம் ஏற்படும். இந்த நிலையில் இந்த ஆண்டு பரவலாக மழை பெய்து வருவதால் சூளைகளில் உற்பத்தி செய்யப்படும் செங்கற்கள் காய்வதில்லை. அதேநேரம், மழையால் விறகுகள் நனைந்திருப்பதால் சூளைகளில் அவற்றை எரிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் செங்கல் உற்பத்தி குறைந்துள்ளது. உற்பத்தி குறைவால் விலை உயர்ந்துள்ளது.

தீபாவளிக்கு முன்னதாக ஒரு லோடு (3 ஆயிரம் செங்கற்கள்) ரூ.21 ஆயிரத்துக்கு விற்ற நிலையில், தற்போது ரூ.4 ஆயிரம் விலை உயர்ந்து, ஒரு லோடு செங்கற்கள் ரூ.25 ஆயிரத்துக்கு விற்கப்படுகின்றன. கோவையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் வெளிப்புறங்களில் நடைபெறும் கட்டுமான வேலைகள் நடப்பதில்லை என்றாலும் உள்வேலைகள் நடந்து வருகின்றன. இருப்பினும் பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் செங்கல் விலை குறையும் என்று எதிர்பார்த்து வேலைகளை சற்று தாமதித்து வருகின்றனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com