கோயில்களில் அறங்காவலர் குழு நியமிக்க மனு: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் அனைத்து கோயில்களிலும் அறங்காவலர் குழுவை அமைக்கக் கோரிய மனுவுக்கு, இந்து சமய அறநிலையத்துறை
Updated on
1 min read


தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் அனைத்து கோயில்களிலும் அறங்காவலர் குழுவை அமைக்கக் கோரிய மனுவுக்கு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த காந்திமதிநாதன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு: 
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள முதன்மை கோயில்களில் பல ஆண்டுகளாக அறங்காவலர் குழு நியமனம் செய்யப்படாமல் தக்கார் பதவி மட்டுமே நியமனம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரு நபரின் அதிகாரத்தின் கீழ் கோயில் நிர்வாகம் கொண்டு வரப்படுகிறது. மேலும் தக்கார் பதவிக்கு கால வரையறை கிடையாது. அறங்காவலர் குழு அமைக்கப்படும் வரை தக்கார் பதவியில் இருப்பார் எனவும், அறங்காவலர் குழுவுக்கான அனைத்து அதிகாரங்களும் தக்காருக்கும் வழங்கப்பட்டுள்ளது எனவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த அதிகாரங்கள் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்காக பல கோயில்களில் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பழமை வாய்ந்த கோயில்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கிரி பிரகார மண்டபம் இடிந்து பெண் ஒருவர் இறந்ததும், மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டதும் அதற்கான சான்றுகள். அறங்காவலர் குழு இருந்தால், இதுபோன்ற பிரச்னைகள் தொடக்கத்திலேயே விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டிருக்கும். அறங்காவலர் குழு இல்லாததால், பல பெரிய கோயில்களில் நல்ல வருமானம் இருந்தும், முறையாக நிர்வகிக்கப்பட வில்லை. 
ஆகவே, தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் வரும் அனைத்து கோயில்களிலும் அறங்காவலர் குழுவை அமைக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு இந்து அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com