‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வன விலங்குகள் தத்தெடுப்பு: பொதுமக்களிடம் குறைந்துவரும் ஆர்வம்

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வன விலங்குகளைத் தத்தெடுக்கும் திட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு நாளுக்குநாள் குறைந்து வருகிறது.

News image
Updated On :15 அக்டோபர் 2018, 5:55 am

பா. இளையபதி

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வன விலங்குகளைத் தத்தெடுக்கும் திட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இந்தத் திட்டத்தில் பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், பிரபலங்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பது பூங்கா நிர்வாகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

2,375 வன விலங்குகள்

சென்னையை அடுத்த வண்டலூரில் தமிழக வனத் துறைக்குச் சொந்தமான அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்கி வருகிறது. 602 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் யானைகள், புலிகள், சிங்கங்கள், நீர் யானைகள், ஊர்வன, பறவைகள் என மொத்தம் 2,375 வன விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. இந்தப் பூங்காவுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் என வார நாள்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், விடுமுறை நாள்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் வந்து செல்கின்றனர்.

இங்கு பராமரிக்கப்படும் வன விலங்குகளின் உணவுக்கான தொகை, பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட பெரும்பாலான செலவுகள் பார்வையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில்தான் செய்யப்பட்டு வருகிறது.

தத்தெடுப்புத் திட்டம்

இதைக் கருத்தில் கொண்டு பூங்காவில் உள்ள வன விலங்குகளை பொதுமக்கள் தத்தெடுக்கும் திட்டம் கடந்த 2009-இல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களுக்குப் பிடித்த வன விலங்குகளை ஒரு நாள் முதல் எவ்வளவு நாள்கள் வேண்டுமானாலும் தத்தெடுத்துக் கொள்ளலாம். அந்த விலங்குகளின் உணவுக்கான தொகையை பூங்கா நிர்வாகத்திடம் வழங்க வேண்டும்.

இதனால், பூங்கா நிர்வாகத்தில் நேரடியாகப் பங்குகொள்ள முடிவதுடன், விலங்கு இருப்பிடங்களின் பராமரிப்பு, உணவுகளைத் தயார் செய்தல், உணவுகளை விலங்குகளுக்கு வழங்குதல் போன்ற பணிகளை நேரடியாக செய்வதற்கும், அவை குறித்து அறிந்து கொள்வதற்கும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

குறைந்துவரும் ஆர்வம்

இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 2009-ஆம் ஆண்டு 2010-ஆம் ஆண்டு வரை நடிகர் கார்த்திக், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், பொதுமக்கள் என 35 பேர் 50-க்கும் மேற்பட்ட வன விலங்குகளையும், 2011-12-ஆம் ஆண்டு வரை 32 பேர் 50-க்கும் மேற்பட்ட வன விலங்களையும் தத்தெடுத்துள்ளனர். அதன் பிறகு கடந்த 6 ஆண்டுகளில் வன விலங்குகளைத் தத்தெடுப்பதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. கடந்த 2017-இல் 6 பேர் மட்டுமே வன விலங்குகளைத் தத்தெடுத்தனர். இதுவும் குறைந்து இந்த ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் மட்டும் "அனு' என்ற வெள்ளைப் புலியை 6 மாதத்துக்கு கடந்த வாரம் முதல் தத்தெடுத்துள்ளார். இதன் மூலம் அந்தப் புலியின் நாளொன்றுக்கான உணவுத் தொகை ரூ. 1,196-க்கு அவர் பொறுப்பேற்றுள்ளார்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

இதுகுறித்து இயற்கை ஆர்வலர் ராஜுமோகன் கூறுகையில், "இத்திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையை வனத் துறையினர் முழுமையாக எடுக்கவில்லை. பூங்காவுக்கு வரும் பொதுமக்களிடம் வன விலங்குகளின் சிறப்பு குறித்த துண்டுப் பிரசுரம் வழங்க வேண்டும் அல்லது அவை குறித்து வன விலங்கு ஆராய்ச்சியாளர்கள் மூலம் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். அதன் மூலம் பொதுமக்களுக்கு வன விலங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு அவற்றை தத்தெடுக்க முன்வருவர் என்றார்.

பொதுமக்கள் பங்களிப்பு அவசியம்

இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரிகள் கூறியது: வன விலங்குகளைத் தத்தெடுப்பது குறித்து விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வசதியானவர்கள் மட்டுமின்றி சாதாரண மக்கள் கூட தங்கள் பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட நாள்களில் விரும்பிய வன விலங்குகளை ஒரு நாளைக்கோ, ஒரு வாரத்துக்கோ அல்லது ஒரு மாதம், ஒரு வருடத்துக்கோ தத்தெடுக்கலாம். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குநர் அலுவலகத்தை 044 22751089 என்ற எண்ணில் அல்லது directoraazp1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

ரூ. 1.50 பைசா முதல் ரூ. 1,196 வரை...

வன விலங்குகளைத் தத்தெடுக்கும் திட்டத்தின்படி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பட்கெரிகர் பறவைக்கு செலவிடப்படும் ஒருநாள் உணவுத் தொகையான ரூ.1.50 பைசா முதல் புலி, சிங்கத்துக்கு செலவிடப்படும் ரூ.1,196 வரை பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளுக்கும் பொதுமக்கள் பொறுப்பேற்றுக் கொள்ளலாம். யானைக்கு ரூ.666, சிறுத்தைக்கு ரூ.489, செந்நாய்க்கு ரூ. 365, உவர்நீர் முதலைக்கு ரூ. 531, மலைப்பாம்புக்கு ரூ. 150, கோப்ரா பாம்பு இனங்களுக்கு ரூ.15, நட்சத்திர ஆமைக்கு ரூ.2, கொகாடைல் பறவைக்கு ரூ.4, காஸாவொரி பறவைக்கு ரூ.95, ஒட்டகசிவிங்கிக்கு ரூ.795, நீர் யானைகளுக்கு ரூ.471, சிம்பென்சிக்கு ரூ.275 என அனைத்து விலங்களுக்கும் உணவுத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.