தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் குறித்து நடவடிக்கை:   அமைச்சர் ஜெயக்குமார் உறுதி 

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் குறித்து நடவடிக்கை:   அமைச்சர் ஜெயக்குமார் உறுதி 

எல்லை தாண்டி மீன் பிடித்து கைதான தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அநியாய அபராதத்தினை ரத்துசெய்வது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார
Published on

சென்னை: எல்லை தாண்டி மீன் பிடித்து கைதான தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அநியாய அபராதத்தினை ரத்துசெய்வது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

அதிமுகவின் 47ஆவது ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் புதனன்று நடைபெற்றது. 

அப்போது தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து கட்சிக் கொடியை ஏற்றி வைத்தனர். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

அத்துடன் விழாவில் ரத்த தானம் செய்ய விரும்பவர்களுக்கு வசதியாக “ரத்தத்தின் ரத்தமே” என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டது. 

விழாவின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து கூறியதாவது:

இன்று 47-ஆவது துவக்க விழாவைக் கொண்டாடும் இந்த இயக்கமானது பவழ விழா கண்டு 100-ஆவது ஆண்டையும் எட்டிப் பிடிக்கும். அதிமுகவை அழிக்க நினைத்தவர்களுக்கு வாயில் மண்தான்.       

அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி வரும் திமுகதான் ஊழலின் மொத்த உருவம். 

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களில் 6 மீனவர்களுக்கு ரூ. 60 லட்சம் அபராதமும், கட்டத் தவறினால் மூன்று மாதம் சிறைவாசம் அளிக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது அபாண்டமான ஒன்று. ஏற்றுக் கொள்ள முடியாததாகும். 

இது தொடர்பாக இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம், மத்திய அரசிடமும் பேசுவோம். தமிழக அரசால் இயலும் எல்லா நடவடிக்கைகளும் இந்த விஷயத்தில் எடுக்கப்படும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்பொதுமக்களுககு பிரச்னை இல்லாத வகையில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்புக்கு மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com