

உலக அளவில் நோய் பாதிப்பை விட நீர், நிலம், காற்று மாசு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம் என சுற்றுச்சூழல் மதிப்பீடு மற்றும் சீரமைப்பு ஆராய்ச்சி மையத்தினர் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் மதிப்பீடு மற்றும் சீரமைப்பு ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியாவில் உள்ள நியூகேஸில் பல்கலைக்கழகம், குளோபல் கேர் அமைப்பு சார்பில், சுற்றுச்சூழல் பிரச்னைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பான கிளீன்அப் 3 நாள் சர்வதேச மாநாடு கோவையில் திங்கள்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டில் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலியா நியூகேஸில் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரவி நாயுடு, முனைவர் பிரசாந்த் ஸ்ரீவஸ்தவா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக டீன் மகிமைராஜா, முனைவர் ஆவுடைநாயகம் ஆகியோர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக நீர், நிலம், காற்று ஆகியவை மாசடைந்துள்ளன. சர்வதேச அளவில் பாதுகாப்பில்லாத சுற்றுச்சூழல் பிரச்னையால் 12 பேரில் ஒருவர் இறப்பதாகவும், காற்று மாசு காரணமாக சுமார் 70 லட்சம் பேர், ரசாயனப் பாதிப்புகளால் 50 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. புற்றுநோயால் உயிரிழப்பவர்களை விட, ரசாயனம் கலந்த பாதுகாப்பற்ற நீரால் இறப்போரின் எண்ணிக்கை அதிகம்.
சுற்றுச்சூழல் பாதிப்பு இந்தியாவிலும் உள்ளது. வேலூர் மாவட்டம் தோல் கழிவுகளாலும், கொங்கு மண்டலம் சாயக் கழிவுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மண்ணிலும், நீரிலும் உள்ள உப்பின் அளவு பலமடங்கு அதிகரித்துள்ளது. நிலத்தடி நீரில் குரோமியம் உள்ளிட்ட ரசாயனங்கள் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
பல நாடுகளின் அரசும், தொழில் துறையும் இந்தப் பிரச்னையின் தீவிரத்தை தற்போதுதான் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளன. ஐரோப்பாவைச் சேர்ந்த ரசாயன நிறுவனம் 1,44,000 பதிவு செய்யப்பட்ட ரசாயனங்களின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது. இதில் ஒவ்வோர் ஆண்டும் 200 புதிய ரசாயனங்கள் இணைகின்றன. காலநிலை மாற்றத்தைக் காட்டிலும் ரசாயன மாசு காரணமாக ஏற்படும் பாதிப்பு 5 மடங்கு அதிகம்.
எனவே, இது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்படும் பல்வேறு தீர்மானங்கள் அனைத்து நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.