வல்லபாய் படேல் சிலை திறப்பு விழாவில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு

குஜராத்தில் நடைபெற்ற உலகின் மிக உயரமான சர்தார் வல்லபபாய் படேலின் சிலை திறப்பு விழாவில் தமிழக அரசு சார்பில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர்.
வல்லபாய் படேல் சிலை திறப்பு விழாவில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு


சென்னை: குஜராத்தில் நடைபெற்ற உலகின் மிக உயரமான சர்தார் வல்லபபாய் படேலின் சிலை திறப்பு விழாவில் தமிழக அரசு சார்பில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர்.

நாட்டின் முதல் துணைப் பிரதமரும், இந்திய தேசத்தை ஒருங்கிணைத்தவருமான சர்தார் வல்லபபாய் படேலின் 182 மீட்டர் உயர பிரமாண்டமான சிலையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

குஜராத் மாநிலம் கெவாடியா மாவட்டத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையில் உலகின் மிகப் பெரிய சிலையாக சர்தார் வல்லபபாய் படேல் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் உத்தரவுப்படி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையைவிட (93 மீட்டர்) இரு மட ங்கு உயரமாக சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் நர்மதை ஆற்றின் கரையோரத்தில் சர்தார் சரோவர் அணை அருகில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையை நாட்டுக்கு அர்பணிக்கும்போதும், அதன் அருகே, வால் ஆஃப் யூனிட்டி (ஒற்றுமையின் சுவர்)-ரும் திறந்து வைக்கப்பட்டது.

சிலை திறப்பின்போது இந்திய விமானப் படை விமானங்களின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

படேல் சிலைக்கான கட்டுமானப் பணி கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி தொடங்கியது. இந்த சிலையின் கட்டுமானப் பணியை எல் அண்ட் டி நிறுவனம் மேற்கொண்டது. 33 மாதங்களில் அந்த சிலை கட்டுமான பணியை அந்த நிறுவனம் முடித்துள்ளது. இதன் மூலம் உலகில் மிக விரைவில் கட்டி முடிக்கப்பட்ட பிரமாண்ட சிலை என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இந்த சிலை கட்டுமானத்துக்கு, 70,000 டன் சிமென்ட், 18,500 டன் இரும்பு கம்பிகள், 6,500 டன் இரும்பு கட்டுமான பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர்த்து, 1,700 டன் வெண்கலம், 1,850 டன் வெண்கலப் பூச்சு ஆகியவையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிலையின் கட்டுமானப் பணிக்கு மொத்தம் ரூ.2,989 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஒற்றுமையின் சின்னம் என்று சிலைக்கு பெயரிடப்பட்டுள்ளது.

சர்தார் வல்லபபாய் படேலின் சிலையில் 5 உள்பகுதிகள் உள்ளன. அதில் தரையில் இருந்து முழங்கால் வரையிலும் முதல் பகுதி ஆகும். 2ஆவது பகுதி, சிலையின் தொடை பகுதியாகும். 3ஆவது பகுதி, பார்வையாளர்கள் பகுதியாகும். 4ஆவது பகுதி, பராமரிப்பு இடமாகும். 5ஆவது பகுதி, சிலையின் தலை மற்றும் தோள் பகுதியாகும்.

பார்வையாளர்கள் இடத்தில், ஒரே நேரத்தில் 200 பேர் வரை இருக்கலாம். அங்கிருந்து சாத்புரா, விந்திய மலைப்பகுதிகளை கண்டு ரசிக்க முடியும். சர்தார் சரோவர் நீர்த்தேக்கம், கருடாஸ்வேர் நீர்த்தேக்கம் ஆகியவற்றையும் பார்வையிடலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com