இன்று முழு அடைப்பு: லாரிகள், ஆட்டோக்கள் ஓடாது: தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதைக் கண்டித்து காங்கிரஸ் தலைமையில் நாடு முழுவதும் எதிர்க் கட்சிகள் இணைந்து திங்கள்கிழமை நடத்தவுள்ள பொது வேலைநிறுத்தம்,
இன்று முழு அடைப்பு: லாரிகள், ஆட்டோக்கள் ஓடாது: தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்
Published on
Updated on
2 min read

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதைக் கண்டித்து காங்கிரஸ் தலைமையில் நாடு முழுவதும் எதிர்க் கட்சிகள் இணைந்து திங்கள்கிழமை நடத்தவுள்ள பொது வேலைநிறுத்தம், முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 அதே நேரத்தில் முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி தமிழகத்தில் சுமார் 4 லட்சம் லாரிகளும், 3 லட்சம் ஆட்டோக்களும், 72 ஆயிரம் கால் டாக்சிகளும் இயங்காது என அந்தந்த தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
 கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி செலவின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வைச் சந்தித்து வருவதால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகியுள்ளது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திங்கள்கிழமை (செப்.10) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் முழு அடைப்புப் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைமையில் எதிர்க்கட்சிகள் நடத்த முடிவு செய்தன.
 தமிழகத்தில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக, மதிமுக, தமாகா, விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல் பல்வேறு தொழிற்சங்கங்களும் இப்போராட்டத்துக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளன.
 கடைகள் அடைப்பு: வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து கடைகள் அனைத்தும் மூடப்படும் என த.வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தெரிவித்துள்ளது. இப்போராட்டத்தையொட்டி மாநிலம் முழுவதும் 65 லட்சம் கடைகள் அடைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 பேருந்துகள் இயங்கும்: இதனால், தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் எனப் போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் தனியார் பேருந்துகளின் இயக்கத்திலும் எவ்வித பாதிப்பும் இருக்காது என அவற்றின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 லாரி, ஆட்டோ, டாக்சிகள் ஓடாது: விலை உயர்வைக் கண்டித்து லாரிகள், ஆட்டோக்கள் இயக்கப்பட மாட்டாது என அவற்றின் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
 "வரலாறு காணாத அளவுக்கு டீசல் விலையை நாளுக்கு நாள் உயர்த்துவது வர்த்தகத்துக்கு ஆரோக்கிய சூழலை உருவாக்காது. இதனால் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து லாரிகளை இயக்கப்போவதில்லை என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சுகுமார் தெரிவித்தார்.
 ஆட்டோக்களை இயக்கப்போவதில்லை என்று அனைத்து ஆட்டோ சங்கக் கூட்டமைப்பு நிர்வாகி ஜானகிராமன் தெரிவித்தார்.
 போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் 72 ஆயிரம் கால்டாக்சிகள் ஓடாது என்று தமிழ்நாடு கால் டாக்சி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பி.அன்பழகன் தெரிவித்தார்.
 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இயங்கும்: பொது வேலை நிறுத்தம் நடந்தாலும், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம்போல் இயங்கும் என்று பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்தார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com