
சென்னை - சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்குச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கவில்லை என்றால் இந்தத் திட்டத்தைத் தொடர மாட்டோம் என மத்திய அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை- சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிராக பாதிக்கப்பட்ட நில உரிமையாளர் பி.வி.கிருஷ்ணமூர்த்தி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், உள்பட பலர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிலத்தின் உரிமையாளர்களை அவர்களது நிலங்களிலிருந்து வெளியேற்ற இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது திட்டப் பணிக்கு தடை விதிக்க நேரிடும் என கன்டணம் தெரிவித்திருந்த உயர் நீதிமன்றம், திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தியது தொடர்பான விவரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
மேலும், சட்ட விரோதமாக மரம் வெட்டிய விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆண்டி மற்றும் மணிவண்ணனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய அரூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் வரும் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
ஒரு மரத்துக்கு 10 மரங்கள்: மேலும், தமிழக அரசாணையின்படி ஒரு மரம் வெட்டப்பட்டதற்கு பத்து மரங்கள் நடப்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்களை மாவட்ட வன அதிகாரி அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், இந்தத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தனர்.
வழக்கு மீண்டும் விசாரணை: இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தத் திட்டம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த அட்டவணை மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அட்டவணையைப் பார்த்த நீதிபதிகள், திட்டத்துக்காக சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு முன்பாகவே நிலங்களை அளவீடு செய்யும் பணிகள் தொடங்கியது குறித்தும், பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டங்கள் நடத்தப்படுவது குறித்தும் கேள்வி எழுப்பினர்.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காவிட்டால்...: அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், திட்டத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகள் மட்டுமே தற்போது நடைபெற்று வருகின்றன. ஒருவேளை இந்தத் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காவிட்டால் திட்டத்தை தொடர மாட்டோம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் தருமபுரி மாவட்டம் அரூரில் சட்ட விரோதமாக மரம் வெட்டியவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்துள்ளது. வெட்டப்பட்ட மரங்களுக்காக 1,200 மரங்களை நட உள்ளோம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை வரும் செப்டம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.