சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டம்: விரைவில் நிறைவேறுமா?

பெரம்பலூர் அருகே பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள  சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை தமிழக அரசு விரைவாக செயலாக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 
சின்னமுட்லு நீர்த்தேக்கம் அமையவுள்ள வழியே வழிந்தோடும் மழைநீர். 
சின்னமுட்லு நீர்த்தேக்கம் அமையவுள்ள வழியே வழிந்தோடும் மழைநீர். 
Updated on
2 min read

பெரம்பலூர் அருகே பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை தமிழக அரசு விரைவாக செயலாக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் அருகேயுள்ள மலையாளப்பட்டி பகுதியில் உள்ளது சின்னமுட்லு. இயற்கை எழில் சூழ்ந்த பச்சைமலை அடிவாரத்தின் மூன்று பக்கமும் மலையால் சூழ்ந்துள்ளது. இப்பகுதியில், ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரைச் சேமித்து வைத்தால், கோடை காலங்களில் விவசாயப் பணிக்கும், அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கும் பயன்படும் என்பது அரும்பாவூர் பகுதி பொதுமக்கள், விவசாயிகளின் கருத்தாகும்.

மேலும், சின்னமுட்லு பகுதியில் உள்ள பச்சைமலை உச்சியில் இருந்து கொட்டும் அருவியானது எட்டெருமை பாலி என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. வடகிழக்குப் பருவமழை காலமான அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான நான்கு மாதங்களும் மிகுதியாக பொழியும் மழை நீர், எட்டெருமை பாலி அருவி வழியாக வழிந்தோடி, கல்லாற்றில் வெள்ள நீராகப் பெருக்கெடுத்து, அரும்பாலூர் பகுதியில் உள்ள முக்கிய ஏரிகள் நிரம்பியது போக, எஞ்சிய நீர் அனைத்தும் கல்லாற்றின் வழியே, கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலில் கலக்கிறது.

பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்தப் பயனுமின்றி கடலில் கலக்கும் இந்த மழை நீரை சேமிக்க, சின்னமுட்லு பகுதியில் நீர்த் தேக்கம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் விடுத்த கோரிக்கை, தமிழக அரசால் கடந்த 55 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால்  கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், கடந்த சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் சின்னமுட்லு நீர்த் தேக்கத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக பொதுப் பணித் துறை மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, ரூ. 9 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு வரையறை தயாரித்து, தமிழக அரசின் ஒப்புதலுடன், மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

பின்னர், கடந்த 2005-2006இல் மீண்டும் தமிழக அரசு இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான திட்ட மதிப்பீட்டை ரூ. 11 கோடியாக உயர்த்தி, மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி, நிதி கோரப்பட்டது.

தொடர்ந்து, நீர் ஆதாரம், மண்ணின் தன்மை, பொதுமக்களின் கருத்துக் கேட்பு உள்ளிட்ட ஆய்வுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு, திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், எந்தக் காரணமும், விளக்கமும் அளிக்காமல் சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டம் கைவிடப்பட்டதாக கடந்த 2012}ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. 

அரசின் இந்த அறிவிப்பால் விவசாயிகளும், பொதுமக்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர். கைவிடப்பட்ட திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 

பெரம்பலூர் மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் வாக்குறுதி சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்றுவதே ஆகும். கட்சிகள் மாறி, மாறி ஆட்சிக்கு வந்தபோதிலும் திட்டம் இதுவரை நிறைவேறவில்லை.

இதனிடையே, மலையாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒருசில விவசாயிகள் இத்திட்டத்தை கொண்டு வந்தால் தங்களது விளை நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் எனக் கருதி, அங்குள்ள மலைவாழ் மக்களிடம் தவறான தகவல்களை கூறி, நீர் தேக்கத் திட்டத்துக்கு எதிராக கையெழுத்து பெற்று மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பியதன் பேரில் நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு சுணக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

90 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், 10 சதவீத நில உரிமையாளர்களின் எதிர்ப்பால் சுமார் 55 ஆண்டுகளாக திட்டம் நிறைவேறாமல் உள்ளதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. 

இந்நிலையில், கிடப்பில் போடப்பட்ட திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், ஆய்வுப் பணி செய்ய தமிழக அரசு அண்மையில் ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கியது. ஆனாலும், அது தொடர்பான பணிகள் எதுவும் தொடங்கவில்லை என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர் பிரகாஷ் கூறியது:

அரசாணையில் தடுப்பணை என்பதை மாற்றியமைக்க வேண்டும் என அறிவுறுத்தியதன் பேரில், "நீர்த்தேக்கப் பணிகள்' என அரசிதழில் அண்மையில் வெளியானது. அதோடு, மண் ஆய்வு, தரப் பரிசோதனை உள்ளிட்ட ஆய்வுப் பணிகளுக்காக ரூ. 10 லட்சம் ஒதுக்கப்பட்டு, திருச்சியில் உள்ள திட்டம் மற்றும் வடிவமைப்பு கோட்டம் சார்பில் பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டது. கடந்த 19}ஆம் தேதி ஒப்பந்தம் விட அறிவிப்பு வெளியான நிலையில், யாரும் ஒப்பந்தப் புள்ளி கோரவில்லை. எனவே, மறு ஒப்பந்தம் கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com