மதம் மாறிய தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவருக்கு பணி நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு உரிய ஆவணங்களுடன் மாறிய தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவருக்கு வழங்கப்பட்ட ஆசிரியர் பணி நியமனத்தை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதம் மாறிய தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவருக்கு பணி நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு உரிய ஆவணங்களுடன் மாறிய தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவருக்கு வழங்கப்பட்ட ஆசிரியர் பணி நியமனத்தை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 திருச்சி மாவட்டம், சி.பாளையத்தைச் சேர்ந்தவர் டெய்சி புளோரா. கிறிஸ்தவ தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவர், இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை மணமுடித்து, இந்து மதத்துக்கு மாறினார். அதற்கான சடங்குகளைச் செய்து சான்றிதழ் பெற்றதுடன், டெய்சி புளோரா என்ற தனது பெயரை மேகலை என மாற்றிக் கொண்டார்.
 இதனைத் தொடர்ந்து அவருக்கு இந்து தாழ்த்தப்பட்ட பிரிவுக்கான (எஸ்.சி.) சாதி சான்றிதழை வருவாய்த் துறை அவருக்கு வழங்கியது.
 கடந்த 2004 -ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இளநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் மேகலை வெற்றி பெற்றார். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட அவரது பெயர் தேர்வானவர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. தேர்வில் அவரைவிட குறைந்த மதிப்பெண் பெற்றவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.
 கிறிஸ்தவ தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்து இந்து மதத்துக்கு மேகலை மாறியதால் அவருக்கு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான சலுகை வழங்க முடியாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேகலை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அவருக்கு பணி நியமனம் வழங்க இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
 இந்த நிலையில், பிரதான வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் நர்மதா சம்பத், "இந்து மதத்தைச் சேர்ந்தவரை மனுதாரர் (மேகலை) திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக அவரை இந்துவாக அறிவிக்க முடியாது; அதற்கான பண்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்' என்றார்.
 மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் முத்துக்கண்ணு, மேகலை முறைப்படி இந்துவாக மாறி இருப்பதாக கூறினார்.
 இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
 மனுதாரர் கிறிஸ்தவராக இருந்தாலும் திருமணத்துக்குப் பின் இந்து மதத்துக்கு மாறியிருக்கிறார். அவர் மதம் மாறியதை அவரது கிராமத்தினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்து மதத்துக்கு மனுதாரர் (மேகலை) மாறுவதற்கான சுத்தி சடங்கை செய்த அமைப்பு, மத மாற்றம் செய்ததற்கான சான்றிதழையும் வழங்கியுள்ளது.
 மேலும், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மனுதாரரின் கிராமத்தில் நேரில் விசாரணை நடத்தி, அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என சான்றிதழ் அளித்துள்ளனர்.
 அத்துடன் இந்து, பெüத்த, சீக்கிய மதங்களுக்கு பிற மதங்களிலிருந்து மாறுபவர்களை எந்த இனத்தவராக வகைப்படுத்த வேண்டும் என்ற விவகாரத்தில் உள்ள குழப்பங்களைத் தீர்ப்பது குறித்து, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலத் துறை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி பிறப்பால் கிறிஸ்தவராக இருப்பவர்கள் இந்து மதத்துக்கு மாறுவதை சம்பந்தப்பட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் அதனை ஏற்றுக் கொண்டால், அவர்களை தாழ்த்தப்பட்டவர்களாகவே கருத வேண்டும் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
 எனவே, மனுதாரர் இந்துவாக மதம் மாறியதற்கான உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதால், அவர் இந்து தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான சலுகைகளைப் பெற முடியும். அவருக்கு தாழ்த்தப்பட்ட பிரிவின்கீழ் வழங்கப்பட்ட பணி நியமனம் உறுதி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com