எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவு

சாகித்ய அகாதெமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் (73), உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை (டிச. 21) புதுச்சேரியில் காலமானார்.
எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவு

சாகித்ய அகாதெமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் (73), உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை (டிச. 21) புதுச்சேரியில் காலமானார்.
புதுச்சேரியில் பிறந்த பிரபஞ்சனின் இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். நீண்ட காலம் சென்னையில் வசித்து வந்த பிரபஞ்சன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊரான புதுச்சேரியில் உள்ள லாசுப்பேட்டைக்கு குடிபெயர்ந்தார்.
பிரபஞ்சனின் இலக்கிய சேவையை கெளரவிக்கும் வகையில், கடந்த மே மாதம் புதுவை அரசு சார்பில், அவருக்கு விழா எடுக்கப்பட்டு, ரூ. 10 லட்சம் பொற்கிழி வழங்கப்பட்டது.
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த 6 மாதங்களாக புதுவை மாநிலம், மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 
சில நாள்களுக்கு முன்பு வீடு திரும்பிய அவர் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அவர் காலமானார்.
தமிழில் இலக்கியப் பத்திரிகைகள் தவிர, தினமணி கதிர், ஆனந்த விகடன், குமுதம் உள்ளிட்ட வெகுஜன பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்த பிரபஞ்சன், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என 46 நூல்களை எழுதியுள்ளார்.
தினமணி கதிரில் இவர் எழுதிய வரலாற்றுப் புதினமான வானம் வசப்படும் நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. இந்தப் புதினம் புதுவை வரலாற்று ஆய்வாளர் ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டு எழுதப்பட்டது.
பிரபஞ்சனின் படைப்புகள் இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இவரது நாடகமான முட்டை தில்லி பல்கலைக்கழகப் பாடத் திட்டத்திலும், சிறுகதைத் தொகுப்பான நேற்று மனிதர்கள் பல கல்லூரிகளில் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளன.
இவரது மனைவி பிரமிளா ராணி, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே காலமாகிவிட்டார். இவருக்கு கெளதம், கெளரிசங்கர், சதீஷ்குமார் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.
எளிய மனிதர்களையும், யதார்த்தமான சம்பவங்களையும் தனக்கே உரிய பாணியில் எழுதி மானுடம் பேசும் உயர்ந்த படைப்புகளை பிரபஞ்சன் தமிழுக்கு அளித்தார். இவற்றில் வானம் வசப்படும், மகாநதி, மானுடம் வெல்லும் போன்ற நாவல்களும், ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள், நேற்று மனிதர்கள் ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் புகழ் பெற்றவையாகும். 
இவரது உடல் புதுச்சேரி ரயில் நிலையம் அருகே பிரபஞ்சன் பிறந்து வளர்ந்த பாரதி வீதி-வ.உ.சி. வீதி சந்திப்பில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை (டிச.23) காலை 6 மணிக்கு வைக்கப்படுகிறது. அங்கிருந்து உடல் மாலை 4 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சன்னியாசிதோப்பில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. தொடர்புக்கு-பி.என்.எஸ்.பாண்டியன்: 98946 60669.

தமிழ் இலக்கிய உலகில் தனித்தடம் பதித்தவர்
பிரெஞ்சு - தமிழ் கலாசாரங்கள் பின்னிப் பிணைந்த மாநிலம் புதுவை. இந்த இரு கலாசார தாக்கம் மிகுந்த பகுதியான புதுச்சேரியில் பிறந்து, தமிழ் இலக்கிய உலகில் தனக்கென தனித் தடத்தைப் பதித்தவர் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன். 
இவர் 27.4.1945-இல் புதுச்சேரியில் சாரங்கபாணி - அம்புஜம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.பிரபஞ்சனின் இயற்பெயர் வைத்தியலிங்கம். 
தென்னை மரங்களை வளர்த்து, அதிலிருந்து கள் வடித்து விற்று வாழ்ந்தவர்கள் சோலை விவசாயிகள் என அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டனர். அந்த வகையில், பிரபஞ்சனின் மூதாதையர்களும் சோலை விவசாயிகள் ஆவர்.
பிரபஞ்சனின் மூதாதையர்கள் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள கிராமங்களான துக்காச்சி, கடலங்குடியை பூர்வீகமாகக் கொண்டவர்கள். முதலில், தனிப்பட்ட முறையில் ஒரு பேராசிரியர் நடத்திய பிரெஞ்சு பள்ளியில்தான் பிரபஞ்சன் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். பின்னர், 11-ஆம் வகுப்பு வரை புதுச்சேரி பெத்தி செமினார் பள்ளியில் படித்தார்.

புதுச்சேரி கலை பண்பாட்டுத் துறை சார்பில், கடந்த மே மாதம் நடைபெற்ற பாராட்டு விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு நினைவுப் பரிசை வழங்கி கௌரவிக்கிறார் முதல்வர் வே.நாராயணசாமி.
புதுச்சேரி கலை பண்பாட்டுத் துறை சார்பில், கடந்த மே மாதம் நடைபெற்ற பாராட்டு விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு நினைவுப் பரிசை வழங்கி கௌரவிக்கிறார் முதல்வர் வே.நாராயணசாமி.


அதன்பின்னர், தஞ்சாவூர் அருகே உள்ள கரந்தை தமிழவேள் உமா மகேஸ்வரனார் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் (பி.லிட்) பெற்றார்.
படித்துக் கொண்டிருந்த போதே சேத்தூர்கூத்தன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு சென்னையில் இருந்து வெளிவந்த பரணி என்ற இதழில் என்ன உலகமடா? என்ற தலைப்பில் 1961-ஆம் ஆண்டு ஒரு கதையும், ஒரு கவிதையும் எழுதினார். இதே ஆண்டில் பன்மொழிப் புலவர் ப.சுந்தரவேலனார் நடத்திய கலைச்செல்வி இதழில் பிரபஞ்சனின் முதல் கட்டுரை வெளியானது.
கல்லூரிப் படிப்பை முடித்திருந்த நிலையில், பிரபஞ்சனுக்கு திருமணம் முடித்துவைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அவர்களது தூரத்து உறவுக்காரப் பெண்ணான பிரமிளா ராணியை 5.7.1970-இல் திருமணம் செய்து கொண்டார் பிரபஞ்சன்.
இலக்கியப் பயணம்: பழம் பெருமையைப் பேசாமல் புதிய மாறுதல்கள் தேவை என்று எண்ணிய இளம் கவிஞர்களும், சிந்தனையாளர்களும் ஒன்று சேர்ந்து 1971-இல் வானம்பாடி என்ற கவிதை இதழை கோவை நகரத்தில் இருந்து வெளியிட்டனர். ஏற்கெனவே தாமரை போன்ற இலக்கிய இதழ்களை வாசித்து வந்த பிரபஞ்சனுக்கு வானம்பாடி இதழின் மேல் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு, அதில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
அந்த இதழில் பிரபஞ்ச கவி என்ற பெயரில் கவிதைகள் எழுதினார். சாதி, மதம் தெரியாத பெயர்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில் வானம்பாடி கவிஞர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தங்களது பெயர்களை மாற்றிக் கொண்டனர். அந்த வரிசையில், வைத்தியலிங்கம் என்ற தனது இயற்பெயரை பிரபஞ்சன் என மாற்றிக் கொண்டு எழுதத் தொடங்கினார்.
புதுச்சேரியில் மாலைமுரசு நாளிதழில் பத்திரிகையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அவரின் வாழ்க்கையின் நெருக்கடிகளால் சென்னைக்கு இடம் பெயர நேர்ந்தது. 1980-ஆம் ஆண்டு முதல் 1982 -ஆம் ஆண்டு வரை குங்குமம் வார இதழிலும், 1985 முதல் 1987 வரை குமுதம் வார இதழிலும், 1989 முதல் 1990 வரை ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார்.
சென்னையில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய 1980 முதல் 1990 வரையான காலகட்டத்தில் 4 சிறுகதைத் தொகுதிகளை அவர் வெளியிட்டார். 1982-இல் ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள், 1985-இல் நேற்று மனிதர்கள், 1986-இல் பிரபஞ்சன் கதைகள், 1987-இல் விட்டு விடுதலையாகி ஆகிய சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டார். 1986-இல் ஆண்களும், பெண்களும் என்ற குறுநாவலையும், 1986-இல் சுகபோகத் தீவுகள், 1989-இல் மகாநதி, 1990-இல் மானுடம் வெல்லும் ஆகிய மூன்று புதினங்களையும் எழுதினார்.
இந்த அனுபவம் அவரை முழுநேர எழுத்தாளராக மாற்றியது. 1990-ஆம் ஆண்டு முதல் முழுநேர எழுத்தாளராக மாறினார். தனது மனதுக்குச் சரியெனப்பட்டதைத் துணிந்து வெளிப்படுத்துவதே ஓர் எழுத்தாளனின் சமூகக் கடமையாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்.
இந்த பூமிப் பந்தில் நல்லவர்கள் மட்டுமே இருக்கின்றனர். கெட்டவர்கள் என்று ஒருவரும் இல்லை. மானுட வாழ்வு சுவாரஸ்யங்கள் நிறைந்தது. எல்லோரும், எல்லாமும் கொண்டாடப்பட வேண்டியவை என்பதை தனது படைப்புகளின் மையக் கருத்தாகக் கொண்டார் பிரபஞ்சன்.
இவரது வரலாற்றுப் புதினமான வானம் வசப்படும் நாவல், 1995-ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றது. இந்த நாவல் தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது. வரலாற்று நாவல்களின் மூலம் புதுச்சேரி வரலாற்றை உலக அரங்குக்கு எடுத்துச் சென்றவர் பிரபஞ்சன்.
அரசியல், பண்பாடு, மதம் என இதுவரை இவர் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை 86.
பிரெஞ்சு - இந்திய கலாசாரத்தை உயிருக்கு உயிராய் நேசித்த பிரபஞ்சனை காலச் சக்கரம் நீண்ட காலமாக சென்னையிலேயே புரட்டிப் போட்டது. தனது இறுதிக் காலத்திலாவது தான் நேசித்த புதுச்சேரியில் தங்கியிருக்க வேண்டும் என்று விரும்பியதால்தான், புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசுக் குடியிருப்பில் பிரபஞ்சன் கடந்த 2 ஆண்டுகளாக வசித்து வந்தார்.
புதுவை அரசு கடந்த மே மாதம் பிரபஞ்சனுக்கு விழா எடுத்து கெளரவித்தது. விழாவில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரபஞ்சன் வீட்டுக்கே நேரில் சென்று அழைத்து, அவரிடம் அழைப்பிதழை அளித்தார் மாநில முதல்வர் நாராயணசாமி.
இலக்கிய உலகில் உச்சம் தொட்ட உள்ளூர் படைப்பாளியைக் கெளரவிக்க வேண்டும் என்பதற்காக வீட்டுக்கே சென்று அழைப்பிதழைக் கொடுத்ததாக விழா மேடையில் கூறினார் நாராயணசாமி. 

சாகித்ய அகாதெமி விருதை பெறுகிறார் எழுத்தாளர் பிரபஞ்சன். (1995)
சாகித்ய அகாதெமி விருதை பெறுகிறார் எழுத்தாளர் பிரபஞ்சன். (1995)


மேலும், விழா மேடையில் பிரபஞ்சனின் தலையில் மலர்க் கிரீடம் சூட்டிய முதல்வர் நாராயணசாமி, அவருடைய இலக்கியத் தொண்டுக்காக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். பத்மஸ்ரீ விருதுக்கு பிரபஞ்சனின் பெயர் பரிந்துரைக்கப்படும் என்று நாராயணசாமி அறிவித்தார்.
புதுவையின் வரலாறானது, ஆனந்தரங்கம் பிள்ளையின் டைரி குறிப்புகளில் மட்டுமே உள்ளது. தான் மிகவும் நேசித்த புதுவையின் வரலாற்றைத் துல்லியமாக எழுதி புத்தகமாக வெளியிட வேண்டும் என்பதுதான் பிரபஞ்சனின் கடைசி ஆசை. அதைப் பொருத்தமான வரலாற்று ஆய்வாளர்கள் உதவியுடன் புதுவை அரசு வெளியிடுவதுதான் அவருக்குச் செய்யும் உண்மையான கைமாறாக இருக்க முடியும்.

பெற்ற விருதுகள்
1982: தமிழக அரசு விருது (ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்)
1983: இலக்கியச் சிந்தனை விருது (பிரம்மம்-சிறந்த சிறுகதை விருது)
1986: தமிழக அரசு விருது (நேற்று மனிதர்கள்)
1987: புதுவை அரசு விருது (ஆண்களும், பெண்களும்)
1991: இலக்கிய சிந்தனை விருது (மானுடம் வெல்லும்)
1995: சாகித்ய அகாதெமி விருது (வானம் வசப்படும்)
1996: பாரதிய பாஷா பரிஷத் விருது (வானம் வசப்படும்)
1998: தினத்தந்தி ஆதித்தனார் விருது
1998: புதுவை அரசின் கலைமாமணி விருது
2006: புதுவை அரசின் தமிழ்மாமணி விருது
2007: சிறந்த எழுத்தாளர் விருது (தென்னிந்திய புத்தகப் 
பதிப்பாளர்கள் மற்றும் தமிழக அரசு)
2014: க.நா.சு. வாழ்நாள் சாதனையாளர் விருது
2016: வாழ்நாள் சாதனையாளர் விருது (தமிழ்நாடு
முற்போக்கு கலை இலக்கிய மேடை, தேனி)

1982-ஆம் ஆண்டில் தமிழக அரசின் விருதை அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடமிருந்து பெறுகிறார் எழுத்தாளர் பிரபஞ்சன்.
1982-ஆம் ஆண்டில் தமிழக அரசின் விருதை அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடமிருந்து பெறுகிறார் எழுத்தாளர் பிரபஞ்சன்.

தலைவர்கள் இரங்கல்
 எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, புதுவை முதல்வர் வே.நாராயணசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பழனிசாமி: பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். பிரபஞ்சன் பல்வேறு சிறுகதை தொகுப்புகளை எழுதியுள்ளார். அவர் எழுதிய வானம் வசப்படும் என்ற புதினத்துக்காக சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றார். தமிழகம், புதுச்சேரி அரசுகளின் சிறந்த எழுத்தாளருக்கான விருதுகளைப் பெற்றுள்ளார். 
புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி: இலக்கிய உலகில் உச்சம் தொட்ட அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
புதுவை முதல்வர் வே.நாராயணசாமி: புதுச்சேரி மண்ணின் மைந்தரான எழுத்தாளர் பிரபஞ்சன் இலக்கிய உலகில் பிதாமகனாக விளங்கினார். புகழ்பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் இழப்பு ஒட்டுமொத்த தமிழ் இலக்கிய உலகுக்கு பெரிய இழப்பாக இருந்தாலும், புதுவை மாநிலம், மிகப் பெரிய ஓர் இலக்கியச் சொத்தை இழந்து நிற்பதாக உணர்கிறோம்.
மு.க.ஸ்டாலின்: சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு. திராவிட இயக்கத்தை நட்பு முரணுடன் அணுகிய அவர் அரசியல்ரீதியாக சில விமர்சனங்களை முன்வைத்தபோதும், கருணாநிதியிடம் தனிப்பட்ட அன்பு கொண்டவர். அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
வைகோ (மதிமுக): பாரதி, பாரதிதாசன் வழியில் புதுமைகளை எழுதி புதுவைக்குப் பெருமை சேர்த்தவர் எழுத்தாளர் பிரபஞ்சன். தமிழ்ச் சிறுகதைகளை அனைத்திந்திய தரத்துக்கு உயர்த்தியவர். அவர் மறைவு இலக்கிய உலகுக்குப் பேரிழப்பு. 
ராமதாஸ் (பாமக): போர்க்குணம் மிக்க எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. வாழ்க்கையில் சமரசம் செய்துகொள்ளாதவர். எனது 30 ஆண்டு கால நண்பர். அவரது மறைவு தனிப்பட்ட முறையில் வருத்தமளிக்கிறது.
கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்) : 40 ஆண்டுக்கும் மேலாக இலக்கிய உலகில் கோலோச்சியவர் பிரபஞ்சன். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரை என அனைத்திலும் தடம் பதித்தவர். அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
கமல்ஹாசன் (மநீம): வானம் வசப்பட்ட பிரபஞ்சனுக்கு பூமி வசதிப்படாததால் காலமானார். அவர் எழுத்துகள் எப்போதும் நம்முடன். நன்றி சொல்வோம்.
ஜி.கே.வாசன் (தமாகா): தமிழ் இலக்கியத்தில் சாதனை புரிந்த பிரபஞ்சன் மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது. அவர் எழுத்துகள் வாசகர்களுக்கும் மக்களுக்கும் என்றும் பயன் உள்ளதாக இருக்கும்.
கி.வீரமணி (திராவிடர் கழகம்): பிரபஞ்சனின் எழுத்தில் சமூகத் தார்மிக உயிர்க்காற்று வீசும். பெரியார் கொள்கை மீது ஈர்ப்பு உடையவர். உடல் நலப் பாதிப்பில் இருந்து மீண்டு வருவார் என்று எதிர்பார்த்த நேரத்தில் பிரியா விடை பெற்றுவிட்டார்.
டிடிவி தினகரன் (அமமுக): சாகித்ய அகாதெமி விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்று எழுத்துப் பணியைத் திறம்படச் செய்த பிரபஞ்சனின் மறைவு தமிழ் எழுத்துலகுக்குப் பேரிழப்பு.
எழுத்தாளர் ஜெயமோகன்: யதார்த்தவாத முற்போக்கு பாணியின் முக்கியமான சிறுகதையாசிரியர்களில் ஒருவர் பிரபஞ்சன். ஆனால், இன்று ஆசிரியராக அவரை நிலைநிறுத்தும் முக்கியமான இலக்கியப் பங்களிப்பு புதுச்சேரி வரலாற்றை மறுஆக்கம் செய்து அவர் எழுதிய மானுடம் வெல்லும் வானம் வசப்படும் என்னும் இரு நாவல்கள்தான்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்: எனது மூத்த சகோதரனை இழந்தது போல வேதனையில் கண்ணீர் விடுகிறேன். தமிழ் இலக்கியத்தில் சிறுதைகள், நாவல், கட்டுரைகள் என்று தனித்துவமிக்க படைப்பாளியாக ஒளிர்ந்தவர் பிரபஞ்சன்.
கவிஞர் வைரமுத்து: நா.பார்த்தசாரதிக்குப் பிறகு பண்டித மரபு தாண்டிப் படைப்பிலக்கியத்திற்கு வந்தவர் பிரபஞ்சன். கள்ளுக்கடை வைத்திருந்த தந்தைக்குப் பிறந்தவர் கவிதைக்கடை வைத்ததுதான் இலக்கிய ஆச்சரியம். அவரது வானம் வசப்படும் என்ற நாவலும், நேற்று மனிதர்கள் என்ற சிறுகதைத் தொகுப்பும், முட்டை என்ற நாடகமும் நீண்ட காலங்கள் நினைவிலிருக்கும். எழுத்தாளர் பிரபஞ்சன் சமரசம் இல்லாத படைப்பாளி. தனது எழுத்துகள் மூலம் இறந்த பிறகும் வாழப் போகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com