அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதி: காலை 8 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதி: காலை 8 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்


மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, காலை 8 முதல் மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறும். 
பொங்கல் பண்டிகையைமுன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16ஆம் தேதி பாலமேட்டிலும், 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இதையொட்டி மேற்படி கிராமங்களின் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினருடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ச.நடராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் கே.மாணிக்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன், மாநகரக் காவல் துணை ஆணையர் சசிமோகன், மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன், கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநர் ராஜசேகர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு, காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு நடைபெறும்போது விழாக் குழுவினர் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள், உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகள் குறித்து விளக்கம் தரப்பட்டது. காளைகள் பரிசோதனை, போட்டி நடைபெறும் மைதானம், காளைகள் ஓடும் பகுதி, காளைகளை சேகரிக்கும் பகுதி, பார்வையாளர்கள் மாடம் அமைக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது. 
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் வருவாய், காவல், பொதுப்பணி, உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரம், கால்நடைப் பராமரிப்பு, தீயணைப்புத் துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.
பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு மதுரை கோட்டாட்சியர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் சமயநல்லூர் டிஎஸ்பி, பேரூராட்சிகள் உதவி இயக்குநர், சுகாதாரத் துறை துணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்பு இணை இயக்குநர், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர், கோட்ட தீயணைப்பு அலுவலர், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு மேலூர் கோட்டாட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், மாநகரக் காவல் உதவி ஆணையர், மாநகராட்சி உதவி ஆணையர், சுகாதாரத் துறை துணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்பு இணை இயக்குநர், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர், கோட்ட தீயணைப்பு அலுவலர், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு காளைகள் அதிகளவில் பதிவு செய்யப்படுவதால், மாலை 3 மணிக்குள் அனைத்துக் காளைகளையும் அவிழ்த்துவிட முடியவில்லை. இதனால், காளை உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். ஆகவே, ஜல்லிக்கட்டுக்கான அனுமதி நேரத்தை கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என விழாக்குழுவினர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதையடுத்து கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதிக்கும் வகையில், மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.
அதேபோல, மாடுபிடி வீரர்கள் குழுவுக்கு தலா 75 பேர் என்பதற்குப் பதிலாக தலா 100 பேர் என அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மாடுபிடி வீரர்கள் எண்ணிக்கை அதிகமானால், தேவையற்ற தள்ளுமுள்ளு ஏற்படும். ஆகவே, முந்தைய ஆண்டுகளைப் போலவே மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்படுவர் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள் மற்றும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் கடைபிடிக்க வேண்டிய 16 நிபந்தனைகளைக் கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. தவறுபவர்களுக்கு மேற்படி சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com