பள்ளிக் கூடத்துக்காக சொந்தப் பணத்தை  செலவிடும் தலைமையாசிரியர்

பள்ளிக் கூட வளர்ச்சிக்காக சொந்தப் பணத்தை செலவு செய்து வரும் தலைமையாசிரியரின் செயல் பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது. 
பள்ளிக் கூடத்துக்காக சொந்தப் பணத்தை  செலவிடும் தலைமையாசிரியர்

பள்ளிக் கூட வளர்ச்சிக்காக சொந்தப் பணத்தை செலவு செய்து வரும் தலைமையாசிரியரின் செயல் பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது. 

தரங்கம்பாடி அட்மிரல் தெருவில் தமிழறிஞர் சீகன் பால்கு வாழ்ந்த வீடு அருகில் 1714-இல் பிஷப் ஜான்சன் மேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளி, இந்தியாவில் பெண்களுக்கென தொடங்கப்பட்ட முதல் பள்ளி என்ற பெருமையை பெற்றுள்ளது.  தமிழ், ஆங்கிலம், ஜெர்மனி ஆகிய மூன்று மொழிகளில் கல்வி போதித்த இப்பள்ளியில் விதவைகளை ஆசிரியர்களாக நியமித்து நடத்தப்பட்ட பள்ளி, மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்த பள்ளி ஆகிய கூடுதல் பெருமைகளையும் கொண்டுள்ளது. 1952-இல் உயர்நிலைப்பள்ளியாக, பின்னர் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபையால் நடத்தப்படும் இப்பள்ளி அதன் முன்னாள் பிஷப் ஜான்சன் என்பவரின் பெயரில்  இன்றும் செயல்படுகிறது.

பழைமையான இப்பள்ளியை நிர்வாகத்தினர் கண்டுக்கொள்ளாமல் புறக்கணித்ததால் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வரை பாழடைந்து கேட்பாரற்று கிடந்தது. சென்னையில் ஆசிரியர் பணியாற்றியவரும், இதே ஊரைச் சேர்ந்தவருமான ஜான் சைமன் பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்று பள்ளியை வழிநடத்தி வருகிறார். 

பள்ளி உரிய பராமரிப்பின்றி செயல்படும் நிலையை உணர்ந்து, தனது சொந்தப் பணத்தில் பள்ளியைப் பராமரிக்க முடிவெடுத்து, மாணவர்கள் பயன்படுத்திய சுகாதாரமற்ற நிலையில் இருந்த கழிப்பறையை தனது சொந்த பணம் ரூ. 60,000 வரை செலவு செய்து டைல்ஸ் கற்கள் பதித்து தண்ணீர் வசதி செய்து கொடுத்திருப்பதுடன், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு என தனியாக ஒரு கழிப்பறை வசதியும் செய்து கொடுத்துள்ளார். 

பள்ளி வளாகத்தை பசுமையாக்கும் வகையில், பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு பூங்காக்களை அமைத்து வருகிறார். மதிய உணவு சாப்பிடும் 120 மாணவர்களுக்கு தட்டுகள் வாங்கிக் கொடுத்துள்ளார். மதிய உணவு தற்போது தலைமையாசிரியரின் நேரடி பார்வையில் தயார் செய்யப்பட்டு, உணவின் தரம் சோதிக்கப்பட்டு பிறகு மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டதால் 40 மாணவர்கள் சாப்பிட்டு வந்த நிலையில், தற்போது அதிக மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டு வருகின்றனர். பள்ளி வளர்ச்சியில் அக்கறை கொண்டு சேவை செய்து வரும் பள்ளித் தலைமையாசிரியர் ஜான் சைமனை பலரும் பாராட்டி வருகின்றனர். 

தலைமையாசிரியரின் இச்செயலுக்கு வலுசேர்க்கும் வகையில் பள்ளியில் பணியாற்றும் மற்ற ஆசிரியர்களும் தங்களது செலவில் வகுப்புகளை சீரமைத்து இந்திய வரைபடம், சூரிய குடும்பம் போன்ற கல்வியறிவை வளர்க்கும் பலவற்றை வண்ணம் கொண்டு ஓவியங்களாக வரைந்துள்ளனர்.

"இப்பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் அளித்து வரும் ஒத்துழைப்பால் பள்ளியை சிறந்த முறையில் சீரமைக்க முடிகிறது, எனது பணிக்கு இதே பள்ளியில் பணியாற்றும் எனது மனைவி முழு ஒத்துழைப்பு அளித்து வருவது தொடர்ந்து சிறப்பாக பணி செய்ய ஊக்கமளிக்கிறது. 

வரலாற்றுச் சிறப்புள்ள இப்பள்ளியில் பணியாற்றுவதும் பெருமையாக உள்ளது. பள்ளி போதிய பராமரிப்பின்றி செயல்பட்டு வந்ததால் இதுவரை ரூ. 2 லட்சம் செலவு செய்து கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நல்ல திறமையான ஆசிரியர்கள், மாணவர்கள் இருந்தும் அவர்களை முறையாக பயன்படுத்தவில்லை, மாணவர்களின் தனித் திறமையை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் 2 விழாக்கள் நடத்துவதோடு பாரம்பரிய கலைகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது, மேலும் மாணவர்களிடம் பல்வேறு திறமைகள் கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து பள்ளிக்கு மேலும் பெருமை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்கிறார் ஜான் சைமன்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com