தமிழ் குறித்த தகவல்களை அள்ளித்தரும் இணைய கல்விக் கழகம்: கூடுதல் வசதிகள் அறிமுகம்

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் (tamil virtual academy) தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள், மாணவர்களுக்கு பயனுள்ள பக்கங்கள்

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் (tamil virtual academy) தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள், மாணவர்களுக்கு பயனுள்ள பக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் இருக்கக் கூடிய தமிழர்கள், தமிழ் ஆர்வலர்களுக்குத் தமிழ் மொழியை இணைய மொழியாகக் கொண்டு சேர்ப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் தமிழ் இணையக் கல்விக் கழகம் சென்னையில் கடந்த 2000-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2001-இல் www.tamilvu.org என்ற வலைதளம் தொடங்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் சென்னை கிண்டி கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் அருகே செயல்பட்டு வருகிறது.
இந்த வலைதளத்தில் கல்வித் திட்டங்கள், நூலகம், கணினித்தமிழ், ஆய்வு-உருவாக்கம், தகவலாற்றுப்படை என பல்வேறு துறை சார்ந்த பயனுள்ள பக்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உலக அளவில் 75 நாடுகளில் உள்ள தமிழர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த வலைதளத்தில் தற்போது தமிழ் மென்பொருள்கள், மின்னுருவாக்கம் செய்யப்பட்ட தமிழ் நூல்கள் என தமிழ் ஆர்வலர்களுக்குப் பயனுள்ள புதிய பக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 
இது குறித்து தமிழ் இணையக் கல்விக் கழக அதிகாரிகள் கூறியது: 
தமிழ் இணையக் கல்வித் திட்டத்தில் மழலைக்கல்வி, சான்றிதழ், மேற்சான்றிதழ், பட்டயம், பட்டம் (பி.ஏ.), மேற்பட்டம் என ஆறு வகையான படிப்புகள் உள்ளன. ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் கட்டணமாக ரூ.400 அல்லது 15 டாலர் மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் இதுவரை 17,781 மாணவர்கள் இணைய வழியாக பதிவு செய்து படித்து வருகின்றனர். இதற்காக சர்வதேச அளவில் 87 தொடர்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அமெரிக்கா, இலங்கை, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள், பிறமொழிகளைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் பயனடைந்துள்ளனர். இது குறித்து தமிழக இளைஞர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். 
என்னென்ன வசதிகள்? 
இந்த வலைதளத்தில் மின்னூலகம், தகவலாற்றுப்படை என்ற இரு வசதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. பாறைகளிலும், பனையோலைகளிலும், காகிதங்களிலும் காலங்காலமாக எழுதப்பட்டுவந்த தமிழை மின்னூடகத்திற்கு மாற்றியுள்ளோம். மின்னூலகம் எனப்படும் இந்தப் பக்கத்தில் அச்சுநூல்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள், அரிய காகிதச்சுவடிகள், கல்வெட்டுக்கள், நிழற்படங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், செப்பேடுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் மின்னுருவாக்கம் செய்யப்பட்ட இலக்கண, இலக்கிய நூல்கள் தமிழ் ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். 
தகவலாற்றுப்படை பக்கத்தில் தமிழர் வரலாறு, பாரம்பரிய விளையாட்டுகள், சுற்றுலா தலங்கள், வரலாற்றுச் சின்னங்கள், அகழாய்வுகள் ஆகியவை படங்களுடன் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. 
இந்த இரு பக்கங்கள் மூலம் தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, இலக்கியத்தை அறிந்து கொள்ள முடியும். இது தவிர தமிழ் மென்பொருள்கள், தமிழ்க் கணினிக் கருவிகள், உச்சரிப்புடன் கூடிய மின்னகராதி போன்ற பல விஷயங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும். இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஸ்ன்.ர்ழ்ஞ் வலைதளத்தைப் பயன்படுத்தி உள்ளனர். 
தமிழகத்தில் 100 கல்லூரிகளில் கணினித் தமிழ்ப் பேரவையை நிறுவி இணையத்தில் தமிழின் பங்களிப்பை வளப்படுத்துதல், வலுப்படுத்துதல் கணித் தமிழ் மற்றும் தமிழ் பயன்பாட்டு மென்பொருள்களை உருவாக்கம் செய்ய ஊக்குவித்தல், மாணவர்களுக்கு அகநிலை பயிற்சி அளித்தல், குறுஞ்செயலி உருவாக்கம் போன்ற செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழ் மொழி தொடர்பான ஏராளமான தகவல்களை இணைய வழியில் இலவசமாக அளிக்கும் இந்த வலைதளம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com