திருச்சியில் உலக நாத்திகர் மாநாடு நிறைவு

திருச்சியில் கடந்த 3 நாள்களாக நடைபெற்ற உலக நாத்திகர் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

திருச்சியில் கடந்த 3 நாள்களாக நடைபெற்ற உலக நாத்திகர் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

திராவிடர் கழகம், விஜயவாடா நாத்திகர் மையம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் ஆகியவை இணைந்து நடத்திய உலக நாத்திகர் மாநாடு திருச்சியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடக்க விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலர் சுப. வீரபாண்டியன், பன்னாட்டு நன்னெறி ஒன்றியத்தின் செயல் இயக்குநர் கேரி மெக்லேலண்ட், ஆலோசனை இயக்குநர் எலிசபெத் ஓகேசி, மகாராஷ்டிர அந்தஸ்ரத்தா நிர்மூலன் சமிதி செயல் தலைவர் அவினாஷ் பாட்டீல் உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து அறிவியல் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

இரண்டாம் நாள் காலை நிகழ்வுகள் தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப வளாகத்தில் நடைபெற்றது. மாலையில், திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், விஜயவாடா நாத்திக மையத்தின் செயல் இயக்குநர்  சி.விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்டம்,  சிறுகனூரில் உள்ள பெரியார் உலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதையடுத்து கருத்தரங்க அமர்வு கே.கே.நகர் பெரியார் மணியம்மை மருந்தியியல் கல்லூரி வளாகத்தில் ஒடிஸா பகுத்தறிவாளர் அறக்கட்டளை பேராசிரியர் தானேசுவர் சாஹோ தலைமையில் நடைபெற்றது. 

நிறைவு விழாவில்,  தமிழ்நாடு திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் எம். நாகநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.  மூத்த வழக்குரைஞர் ரவிராம்குமார், பன்னாட்டு நன்னெறி ஒன்றியத்தின் ஆலோசனை இயக்குநர் எலிசபெத் ஓகேசி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் நிறைவுரையாற்றினர்.

தொடர்ந்து, அமெரிக்கா, பிரிட்டன், மலேசியா, சிங்கப்பூர், குவைத் போன்ற பல்வேறு நாடுகள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த பார்வையாளர்கள் பங்கேற்ற பொங்கல் விழா நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரியம், பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் நடத்தப்பட்ட இவ்விழாவில், பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. பகுத்தறிவாளர் கழகத்தின் செயல் தலைவர் ஜெ. தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com