

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நர்சிங் கல்லூரி கொண்டுவர முயற்சி செய்யப்படும் என, சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை விரிவாக்கத்துக்கு 2.32 ஏக்கர் நிலம் பெற்றுத் தந்த பேரவை துணைத் தலைவருக்கும், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் பாராட்டு விழா திங்கள்கிழமை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இதற்கு பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்தார். சார்-ஆட்சியர் காயத்திரி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் கிருஷ்ணகுமார், துணைத் தலைவர் விஜயகுமார்,கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.ஏ.சக்திவேல், மருத்துவமனை கண்காணிப்பாளர் கண்ணன், மருத்துவர் ராஜா, வட்டாட்சியர் செல்வபாண்டி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவைத் தலைவர் வெள்ளைநடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த 1934ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1975ஆம்ஆண்டு கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டன.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.
இங்கு, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை உள்பட பல இடங்களில் இருந்து ஆண்டுக்கு 8 லட்சம் பேர் வெளிநோயாளிகளாக் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆண்டுக்கு 90 ஆயிரம் பேர் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். அதிக நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுவதால் போதிய இடவசதி, கட்டட வசதியின்றி மருத்துவமனை நிர்வாகம் தவித்து வந்தது.
இந்நிலையில், மருத்துவமனை அருகில் உள்ள இடம், அதன் அருகில் பாலகோபாலபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி செயல் பட்டு வந்த இடம் ஆகிய இடங்களை தங்கள் மருத்துவமனை விரிவாக்கம் செய்ய வழங்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில், நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறைக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, 2.32 ஏக்கர் நிலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்பட்டது. இதற்காக பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மற்றும் வருவாய்த் துறையினருக்கு பாராட்டு விழா பொதுமக்கள், மருத்துவமனை நிர்வாகம், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் இளைஞர் பேரவை, தன்னார்வ அமைப்புகள் சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியது
பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக தற்போது மருத்துவமனை விரிவாக்கத்திற்கு 2.32 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இடம் ஒதுக்குவதற்காக ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.
அண்மையில் கோவையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டுவிழாவில் இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். பல ஆண்டுகாலம் முயற்சி செய்து தற்போது இடம் வழங்கப்பட்டுள்ளது. சார்-ஆட்சியர் காயத்ரி மற்றும் வருவாய்த் துறையினர், முன்னாள் நகர்மன்றத் தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் இதற்காக அதிகம் முயற்சி செய்தனர்.
முதலில் 5 மாடி கட்டடம் கட்ட ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு மீண்டும் 3 மாடிகள் கட்ட மீண்டும் ரூ.3 கோடியும் வழங்கப்பட உள்ளது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நர்சிங் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரி கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அதற்கான முயற்சிகளும் செய்யப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.