
மு.வ.அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் மு.வ.விருது இந்த ஆண்டு கவிஞர் ம.நாராயணனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை மு.வ. அறக்கட்டளைத் தலைவரும், விஐடி பல்கலைக்கழக வேந்தருமான ஜி.விசுவநாதன் வழங்கினார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழகம், வேலூர் தமிழ்ச் சங்கம் ஆகியன இணைந்து மு.வ.அறக்கட்டளையை செயல்படுத்தி வருகின்றன. இந்த அறக்கட்டளையின் 3-ஆம் ஆண்டு மு.வ.நினைவுச் சொற்பொழிவு, மு.வ.விருது வழங்கும் விழா விஐடி ராஜாஜி அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேலூர் தமிழ்ச் சங்க செயலாளர் மு.சுகுமார் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்து, கவிஞர் ம.நாராயணனுக்கு மு.வ.விருதையும், ரூ. 25 ஆயிரம் வெகுமதியையும் வழங்கி ஜி.விசுவநாதன் பேசியதாவது:
மு.வ.தமிழுக்கு பெருமை சேர்த்தவர். அதன்மூலம் வேலூர் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்தார். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகவும், மதுரை பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் பணியாற்றியவர். வாழ்நாள் முழுவதும் எழுதிக் கொண்டே இருந்தார். 62 வயதில் 91 நூல்கள் எழுதினார். தற்போது விருது பெற்ற கவிஞர் ம.நாராயணன் மு.வ.வின் மாணவராக விளங்கியவர். புத்தகம் எழுதுபவர்கள் சமுதாயத்தில் பிரபலமானவர்களைக் கொண்டு மதிப்புரை எழுதக்கூறுவர். ஆனால் மு.வ. தான் எழுதிய 3, 4 புத்தகங்களுக்கு தனது மாணவர்களை மதிப்புரை எழுதச் சொன்னார்.
தூய தமிழில் பேசுபவர்களை இங்கு காண முடியவில்லை. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் உள்ள தமிழர்கள் தூய தமிழில் பேசுபவர்களாக உள்ளனர். நல்ல தமிழை கேட்க நாம் அந்த நாடுகளுக்குச் செல்ல வேண்டும். ஆப்பிரிக்கா நாடான டர்பனில் சுமார் 7 லட்சம் தமிழர்கள் உள்ளனர். அவர்களில் பாட்டனார் போன்றவர்களால் மட்டுமே தமிழில் பேச முடிகிறது. மற்ற வயதில் உள்ளவர்களால் தமிழில் பேசமுடியவில்லை.
உலகில் 90 நாடுகளில் தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களில் 30 நாடுகளில் தமிழ் பேசுகின்றனர். தமிழ் கற்றுத்தர அங்கு ஆட்களில்லை. இலங்கையில் கோயில்களில் தமிழ் கற்றுத் தருகின்றனர். தமிழ் ஆசிரியர்கள் தமிழறிஞர்கள் தமிழ் கற்றுத் தரும் பணியில் ஈடுபடவேண்டும். உலகில் இன்றும் பழைமையான மொழிகளாக விளங்கி வருவது தமிழ் மொழியும், சீன மொழியும்தான். தமிழிலிருந்துதான் தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளுவம் போன்ற மொழிகள் தோன்றியுள்ளன. தமிழ் நூல்களில் பல்வேறு வரலாறுகள் படைக்கப்பட்டுள்ளன. அத்தகைய சிறப்புமிக்க தமிழ்மொழியை நாம் காத்திட வேண்டும். இங்குள்ள தமிழ் அமைப்புகளை ஒன்றாக இணைப்பதற்கானஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறோம். அதோடு பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளையும் ஒன்றாக இணைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துவருகிறோம் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், சென்னைப் பல்கலைக்கழகத்தின்மொழித் துறைத் தலைவர் ய.மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று முத்தமிழ் முன்னேர் மு.வ. என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
மு.வ.விருது பெற்ற கவிஞர் ம.நாராயணன் ஏற்புரை வழங்கினார்.
இதில், விஐடி துணைத் தலைவர்ஜி.வி.செல்வம், வேலூர் தமிழ்ச் சங்கப் பொருளாளர் வே.பதுமனார், சன்பீம் பள்ளித் தலைவர் அரிகோபாலன், குமரன் மருத்துவமனைத் தலைவர் குமரகுரு, முன்னாள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சிவசுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விஐடி தமிழ்ப் பேராசிரியர் மரியசெபாஸ்டின் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.