கெண்டை மீனில் மருந்து எதிர்ப்பு பாக்டீரியா: மருந்து உடலில் வேலை செய்யாத நிலையை உருவாக்கும்; மீன் உணவால் ஆபத்தா?

கெண்டை மீன்களில் தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய பாக்டீரியா, மனிதர்களின் உடலில் மருந்து எதிர்ப்புத் திறனை உருவாக்கும் தன்மை கொண்டுள்ளது
கெண்டை மீனில் மருந்து எதிர்ப்பு பாக்டீரியா: மருந்து உடலில் வேலை செய்யாத நிலையை உருவாக்கும்; மீன் உணவால் ஆபத்தா?

கெண்டை மீன்களில் தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய பாக்டீரியா, மனிதர்களின் உடலில் மருந்து எதிர்ப்புத் திறனை உருவாக்கும் தன்மை கொண்டுள்ளது. இதனால், ஏதாவது நோய்க்கு எடுத்துக் கொள்ளப்படும் மருந்து, மனிதர்களில் உடலில் வேலை செய்யாது. தமிழகத்தில் கெண்டை மீன்களின் பயன்பாடு கணிசமாக உள்ளதால், இந்த பாக்டீரியா காரணமாக பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.
ஆய்வு முடிவு: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கவுன்சிலின் அங்கமான தேசிய உயிரியில் மனஅழுத்த மேலாண்மை நிறுவனம் அண்மையில் ஓர் ஆய்வு முடிவை வெளியிட்டது. அதன்படி, மருத்துவக் கழிவுகளில் இருந்து ஏற்படும் தொற்றின் மூலம் கெண்டை மீன்களில் மருந்து எதிர்ப்புத் திறனை உருவாக்கும் பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மீன்களைப் பரிசோதித்ததில் இது கண்டறியப்பட்டுள்ளது. கெண்டை மீன்களின் இரைப்பை - குடல் பாதையில் இந்த பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அதிகப் பயன்பாடு: நன்னீர் மீனான கெண்டையானது ஆறு, குளம், ஏரி போன்வற்றில் அதிகம் காணப்படும். மீன் வளர்ப்பில் ஈடுபடுவோரும் இதனை அதிக அளவில் வளர்த்து வருகின்றனர். தமிழகத்தில் தற்போது மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால், கெண்டை உள்பட நன்னீர் மீன்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கெண்டை மீன்களை சாதாரணமாகப் பார்த்தால் பாக்டீரியா தாக்கியிருப்பதைக் கண்டறிய முடியாது. இதனைச் சாப்பிட்டால்தான் அதன் பாதிப்பு தெரிய வரும். இந்த பாக்டீரியாக்கள் மனிதர்களின் உணவுச் சங்கிலியில் நுழைந்துவிட்டால் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மருந்து எதிர்ப்புத் திறன்: மருத்துவக் கழிவுகளின் தாக்கத்தால் உருவாகும் இந்த பாக்டீரியாவானது மனிதர்களில் பாதிப்பை ஏற்படுத்தி மருந்து எதிர்ப்புத் திறனை உருவாக்குகிறது. மருந்து எதிர்ப்புத் திறன் உருவானால் நோய்க்கு வழக்கமாக அளிக்கப்படும் மருந்துகள் குறிப்பிட்ட நோயாளியின் உடலில் வேலை செய்யாது. இதனால் கூடுதல் வீரியமுள்ள மருந்துகளை நோயாளிகளுக்கு அளிக்க வேண்டிய நிலை ஏற்படும். சில மருந்துகள் உடலில் மொத்தமாக வேலை செய்யாத நிலை ஏற்படும். இதனால், நோயின் தீவிரம் அதிகரிக்கும்.
தமிழகத்தைப் பாதிக்குமா?: தமிழகத்தில் காணப்படும் கெண்டை மீன்களிலும் பாக்டீரியா காணப்படும் வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனினும் முறையாகச் சமைத்துச் சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பொன்னேரி மீன்வளத் துறைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நீர்வாழ் உயிரினங்களின் நோய் மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் ஏ.கோபால கண்ணன் கூறியது: 
மீன்களை பச்சையாக உண்ணும் பழக்கம் தமிழகத்தில் கிடையாது. மீனைப் பச்சையாக உட்கொள்பவர்களுக்கே பெரும்பாலும் இந்த பாக்டீரியா பாதிக்க வாய்ப்புள்ளது. மீனை முறையாகச் சமைத்து உண்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. பொதுவாக தமிழகத்தில் மீன்களை 15 முதல் 30 நிமிஷங்கள் சமைத்துச் சாப்பிடுகின்றனர். அதுவே போதுமானது என்றார் அவர். 
கெண்டை மீன்
இந்தியாவில் அதிக அளவில் வளர்க்கப்படும் மூன்று வகை மீன்களில் கெண்டை மீனும் ஒன்றும். நாடு முழுவதும் உள்ள மக்கள் கெண்டை மீனை அதிக அளவில் வாங்கி உட்கொள்கின்றனர். இந்தியாவில் வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவின் ஆற்றுப்படுகைகளை இயற்கை வாழ்விடமாகக் கொண்டு கெண்டை மீன்கள் வாழ்கின்றன. இந்த வகை மீன்கள் அந்தமான் உள்பட நாட்டின் அனைத்து நன்னீர் வாழ்விடங்களிலும் வளர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அந்தமான் தீவுகளில் இந்த மீன்கள் அதிக அளவில் உள்ளன.
ஊடுருவும் பாக்டீரியா 
நீர்வாழ் சூழலில் ரெüல்டெலா ஆர்னிதினோலிடிகா எனும் மருந்து எதிர்ப்பு திறனை உருவாக்கும் பாக்டீரியா காணப்படும். இந்த பாக்டீரியா தற்போது கெண்டை மீனில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆபத்து!
டைபாய்டு, வயிற்றுப்போக்கு, சிறுநீர்ப் பாதை தொற்று, நிணநீர் பாதை தொற்று, நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா காய்ச்சல், கண் நோய், தோலில் தொற்று, 
மூளைக்காய்ச்சல், மூளைக்கட்டி உள்ளிட்டவற்றை இந்த பாக்டீரியா ஏற்படுத்தும்.
பாக்டீரியாவின் வரலாறு
ரெளல்டெலா ஆர்னிதினோலிடிகா பாக்டீரியா மனிதர்களைப் பாதித்துள்ள வரலாறு உலகம் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நுண்ணுயிரியானது ரத்தத்தில் கலந்து நச்சேற்றம் ஏற்படுத்தும், திசுக்களையும் பாதிக்கும்.
சிகிச்சை
இந்த பாக்டீரியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட 21 ஆன்டிபயாடிக் மருந்துகளில் செஃபிûஸம் என்ற மருந்து மட்டும் இதனைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. இந்த மருந்தானது பல்வேறு பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி உருவாகிறது?
மருத்துவமனைகளில் இருந்து கழிவுநீர் பாதையில் திறந்துவிடப்படும் கழிவுகள் முறையற்ற வழிகளில் ஆற்றில் கலக்கின்றன. அதன் மூலம் ஆற்று நீரில் நச்சுத்தன்மை ஏற்படுகிறது. நச்சுத்தன்மையால் நீரில் ஏற்படும் அழுத்தம் மீன்களில் பாக்டீரியாவை உருவாக்குகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com