'தினமணி' முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் மறைவு

தினமணி முன்னாள் ஆசிரியரும் தொல்லியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவன் (88) சென்னை, ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை (நவ. 26) காலமானார். 
'தினமணி' முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் மறைவு

தினமணி முன்னாள் ஆசிரியரும் தொல்லியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவன் (88) சென்னை, ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை (நவ. 26) காலமானார். 

அவரது மறைவுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்களும்,  தமிழ் ஆர்வலர்களும்  இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்திய ஆட்சிப் பணி, தினமணி நாளிதழின் ஆசிரியர், கல்வெட்டியல் அறிஞர், வரலாற்று ஆய்வாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஐராவதம் மகாதேவன். பத்மஸ்ரீ விருது, தமிழக அரசின் தொல்காப்பியர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூரில் 1930-ஆம் ஆண்டு பிறந்த ஐராவதம் மகாதேவன், திருச்சி தூய வளனார் கல்லூரியில்  பட்டப்படிப்பையும், சென்னையில் சட்டப்படிப்பையும் முடித்தார். 

1954-இல் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்தார்.  தமது பணிக்காலத்தில் கடின உழைப்பையும் நேர்மையையும் குறிக்கோளாகக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டார்.  கல்வெட்டியல் ஆராய்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த அவர்  முழு நேர தமிழ்ப் பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். பணியிலிருந்து  1980-இல் விருப்ப ஓய்வு பெற்றார்.  

அதன் பிறகு,  "இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் செயல் இயக்குநராக 1980-களில் பணியாற்றினார். தொடர்ந்து 1987-ஆம் ஆண்டு முதல் 1991-ஆம் ஆண்டு வரை "தினமணி'யின் ஆசிரியராகப் பணியாற்றினார்.  தினமணி நாளிதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றவுடன் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தினார். தமிழின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தினமணியில் "தமிழ் மணி' பகுதியை அறிமுகப்படுத்தினார். 

சிந்து சமவெளியின் சித்திர எழுத்துக்கள், தொன்மையான தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் போன்றவற்றில் உலக அளவில் மிக முக்கியமான ஆய்வாளர்களில் ஒருவராக விளங்கியவர் ஐராவதம் மகாதேவன். சிந்து சமவெளி எழுத்துகளுக்கும் திராவிட மொழிக் குடும்பத்துக்கும் உள்ள உறவை எடுத்துச் சொன்னவர். 

முதல் உலகத் தமிழ் மாநாட்டில்... 1966-ஆம் ஆண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற  முதல் உலகத் தமிழ் மாநாட்டில் ஐராவதம் மகாதேவன் பங்கேற்றார். அதே ஆண்டு தமிழ் பிராமி எழுத்துகளுக்கான திரட்டு ஒன்றை வெளியிட்டார். சிந்து சமவெளி எழுத்துகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக 1970-இல் ஐராவதம் மகாதேவனுக்கு "ஜவாஹர்லால் நேரு 
ஃபெலோஷிப்' கிடைத்தது.

பத்மஸ்ரீ விருது: கடந்த 2009-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ, 2009-10-ஆம் ஆண்டுக்கான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில்  அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இவருக்கு தொல்காப்பியர் விருதை வழங்கி கௌரவித்தார்.

சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராக தொடர்ந்து 10 ஆண்டுகள் (1980 முதல் 1990 வரை) இருந்தார். 2004-ஆம் ஆண்டு மதுரை கல்லூரியில் கௌரவ கல்வி ஆலோசகராகப் பணியாற்றினார். தொடர்ந்து சென்னை மேம்பாட்டு கல்வி நிறுவனத்தின் (எம்ஐடிஎஸ்) கௌரவ பேராசிரியராக (2004-05) பணியாற்றினார். ரோஜா முத்தையா நூலகத்தின் சிந்து சமவெளி ஆராய்ச்சிப் பிரிவின் கௌரவ ஆலோசகராக 2007-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு வரை இருந்தார். திருவனந்தபுரம் சர்வதேச திராவிட மொழியியல் ஆராய்ச்சிப் பள்ளி நிர்வாகக்  குழுவின் தலைவராக 2010-ஆம் ஆண்டில்  பணியாற்றினார். 

கோயமுத்தூரில் நடைபெற்ற உலக செம்மொழித் தமிழ் மாநாட்டில், "பண்டைய தமிழ் இலக்கியங்களில் இருந்து சிந்து சமவெளி நாகரிகத்தை அறிந்து கொள்ள முடிகிறது' என்ற ஆய்வுக் கட்டுரையை ஐராவதம் மகாதேவன் சமர்ப்பித்து அப்போதைய  முதல்வர் கருணாநிதியிடம் பாராட்டு பெற்றார்.

திருக்கோவலூர் கலாசார அகாதெமியின் கபிலவாணர் விருது, திருவாவடுதுறை மற்றும் தருமபுரம் ஆதீனங்களின் சார்பில் செம்மொழிச் செல்வர் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

ஸ்ரீ வித்யாசாகர் கல்வி அறக்கட்டளை... மத்திய தொல்லியல் துறை ஆலோசனைப் பிரிவின் உறுப்பினர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்விக் குழுவின் உறுப்பினர், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் பேரவைக் குழு ("செனட்') உறுப்பினர், சென்னை பல்கலைக்கழக தமிழ் வளர்ச்சி கழகத்தின் உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். ஸ்ரீ வித்யாசாகர் கல்வி அறக்கட்டளையை நிறுவி, தக்கர்பாபா வித்யாலயா சமிதி போன்ற அமைப்புகளுக்கு நன்கொடைகள் அளித்து வந்தார்.

கண்கள் தானம்:  மறைந்த தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவனின் கண்கள், சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன. 

சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் உயிரி தொழில்நுட்பம் மற்றும் அடிப்படை  அறிவியல் ஆராய்ச்சி படிப்புக்கான மையம் தொடங்குவதற்கு  ஸ்ரீ வித்யாசாகர் கல்வி அ றக்கட்டளை சார்பாக  2006-ஆம் ஆண்டு இவர் ஒரு பெரும்தொகையை அளித்தது குறிப்பிடத்தக்கது.

இறுதிச் சடங்கு... மறைந்த  ஐராவதம் மகாதேவனுக்கு மகன் ஸ்ரீதர் மகாதேவன் உள்ளார். சென்னை, பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

"தினமணி' சார்பில் அஞ்சலி

"தினமணி' முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து "தினமணி'  சென்னை அலுவலகத்தில் திங்கள்கிழமை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்த அஞ்சலி கூட்டத்துக்கு "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகித்து, ஐராவதம் மகாதேவன்  இந்திய ஆட்சிப் பணி,  "தினமணி' ஆசிரியர், கல்வெட்டியல், வரலாற்று ஆய்வாளர் என தான் பணியாற்றிய அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்ததை நினைவுகூர்ந்து, புகழஞ்சலி செலுத்தி பேசினார். 

இந்நிகழ்ச்சியில், "தினமணி' ஆசிரியர் குழுவினர்,  செய்தியாளர்கள், பக்க வடிவமைப்பாளர்கள்,  அலுவலர்கள் கலந்து கொண்டு ஐராவதம் மகாதேவனின் மறைவுக்கு  மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதேபோன்று தினமணியின் மதுரை, கோவை, திருச்சி,  திருநெல்வேலி, தருமபுரி, புது தில்லி,  விழுப்புரம், நாகப்பட்டினம் பதிப்புகளிலும் ஐராவதம் மகாதேவனுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com