உடல் உறுப்பு தானத்தில் 4-ஆவது முறையாக தமிழகம் முதலிடம்: தில்லி விழாவில் விருது

உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே தொடர்ந்து நான்காவது முறையாக முதலிடம் பெற்றமைக்காக தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழக அரசுக்கு
உடல் உறுப்பு தானத்தில்  தமிழகம் முதலிடம் பெற்றமைக்காக அமைச்சர் சி. விஜயபாஸ்கரிடம் விருதை வழங்கும் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர்கள் அஸ்வினி குமார் செளபே,
உடல் உறுப்பு தானத்தில்  தமிழகம் முதலிடம் பெற்றமைக்காக அமைச்சர் சி. விஜயபாஸ்கரிடம் விருதை வழங்கும் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர்கள் அஸ்வினி குமார் செளபே,

உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே தொடர்ந்து நான்காவது முறையாக முதலிடம் பெற்றமைக்காக தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கரிடம் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர்கள் அஸ்வின் குமார் சௌபே, அனுப் பிரியா பட்டேல் ஆகியோர் வழங்கினர்.
தில்லியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் சார்பில் 9-ஆவது உடல் உறுப்பு தானம் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் விருதை பெற்றுக் கொண்டு சி. விஜயபாஸ்கர் பேசியதாவது: உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கியதற்காக தமிழகத்திற்கு தொடர்ந்து நான்காவது முறையாக இந்த விருது கிடைக்கப் பெற்றுள்ளது பெருமைக்குரியது. நாட்டிலேயே முதல் முறையாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தலைவராகக் கொண்டு கடந்த 2014-இல் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையம் (டிராஸ்ன்டான்) எனும் அமைப்பு, நிர்வாக ரீதியாக மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 1,198 கொடையாளர்களிடமிருந்து 6,886 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையின் மூலம் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் நாட்டிலேயே பிற மாநிலங்களைவிட முன்னிலையில் உள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏழை, எளிய மக்களுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது. இதற்காக தமிழகத்தில் மட்டும்தான் அதிகபட்சமாக ரூ.35 லட்சம் வரை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. பிரதமரின் மனதின் குரல் (மன் கி பாத்) வானொலி உரையில் கூட, தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் முன்னோடி மாநிலமாகவும், மற்ற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வகையிலும் செயல்படுகிறது என்று குறிப்பிட்டிருந்ததை நினைவுகூர விரும்புகிறேன். 
உறுப்புதான ஒதுக்கீட்டில் நிலையான நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும், உடல் உறுப்புதான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைச் செயலர் பிரீத்தி சுதன், சுகாதாரப் பணிகள் இயக்கத்தின் தலைமை இயக்குநர் ஜி.வெங்கடேஷ், டிரான்ஸ்டான் இயக்குநர் காந்திமதி, நோட்டோ அமைப்பின் இயக்குநர் வசந்தி ரமேஷ், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக் கூடுதல் செயலர் எஸ்.நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் : அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நம்பிக்கை
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை விரைவில் அளிக்கும் என்று தமிழக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்தார்.
இது தொடர்பாக, அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகளை தொடங்குவது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர்கள் அஸ்வினி குமார் சௌபே, அனுப்பிரியா படேல் ஆகியோரிடம் பேசினேன். அப்போது, டிசம்பர் முதல் வாரத்தில் மத்திய அமைச்சரவையிடம் இது தொடர்பாக குறிப்பு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், மருத்துவமனைக்கான நிதி ஒப்புதல் உள்பட அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும், வெகுவிரைவில் அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் என்று அமைச்சர்களும், அதிகாரிகளும் உறுதியளித்துள்ளனர்.
உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலையில் உள்ளது. உடல் உறுப்பு தானம் கேட்டு காத்திருப்போர் பட்டியலில் சிறுநீரகத்திற்காக 4, 674 பேர், ஈரல் மாற்றுச் சிகிச்சைக்காக 416 பேர், இதய மாற்றுச் சிகிச்சைக்காக 40 பேர், கண்களுக்காக 33 பேர் உள்ளனர். இப்பட்டியலில் உள்ளோரின் எண்ணிக்கையைக் குறைப்பதுதான் அரசின் இலக்காகும் என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர். 

அதிகம் பேர் உடல் உறுப்பு தானம் செய்தால் சுகாதாரத் துறையில் பெரிய மாற்றம் ஏற்படும்: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே
தனிப்பட்ட நபர்கள் அதிகமானோர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தால், நாட்டின் சுகாதாரத் துறையில் பெரிய மாற்றம் ஏற்படும். மேலும், பல உயிர்களையும் காக்க முடியும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே தெரிவித்தார்.
தில்லியில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவைச் சிகிச்சை அமைப்பு (நோட்டோ) சார்பில் செவ்வாய்க்கிழமை 9-ஆவது இந்திய உடல் உறுப்பு தான தினம் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே பங்கேற்றுப் பேசியதாவது: உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் நிலையில், உயிரைக் காப்பாற்றக் கூடிய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக முன்னணி மருத்துவமனைகளில் லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால், உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேவையும் உள்ளது. குறிப்பிட்ட தனி நபர்கள் அவர்களது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தால் கூட இது பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றார் அவர்.
அண்மையில் உடல் உறுப்பு தானம் செய்வதற்காக இணையதளத்தில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் உறுதி எடுத்துக் கொண்டது இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனையாகும். அதாவது, அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட உறுதிமொழி எண்ணிக்கையைவிட இது அதிகமாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com