சுதந்திரத் தமிழீழம் மட்டுமே உண்மையான நட்பு நாடாக அமையும்: பழ. நெடுமாறன் பேச்சு

சுதந்திரத் தமிழீழம் மட்டுமே இந்தியாவுக்கு உண்மையான நட்பு நாடாக அமையும் என்றார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன்.
மாவீரர் நாளையொட்டி, தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செவ்வாய்க்கிழமை மாலை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய தமிழ் ஆர்வலர்கள்.
மாவீரர் நாளையொட்டி, தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செவ்வாய்க்கிழமை மாலை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய தமிழ் ஆர்வலர்கள்.


சுதந்திரத் தமிழீழம் மட்டுமே இந்தியாவுக்கு உண்மையான நட்பு நாடாக அமையும் என்றார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன்.
தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்ச்சி மற்றும் முற்றத்தின் ஆறாம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த அவர் பேசியது:
சுதந்திரத் தமிழீழம்தான் இந்தியாவுக்கு உண்மையான நட்பு நாடாக அமையும் என பிரபாகரன் கூறினார். அது இப்போது உண்மையாகிக் கொண்டிருக்கிறது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இருந்து இப்போதைய மோடி காலம் வரை இலங்கைச் சிங்களவர்களுக்கு ஆதரவான போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர். இதனால், ஈழத் தமிழர்கள் பலிகடா ஆக்கப்பட்டனர்.
இந்திய அரசின் தவறான கொள்கையால் நம் நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தெற்காசியாவுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதை தில்லி அரசு உணராத காரணத்தால் ஒட்டுமொத்த தெற்காசியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. 
இதை தில்லியில் இருப்பவர்கள் எவ்வளவு விரைவாக உணருகின்றனரோ, அதைப் பொருத்து அவர்களுக்கும், நமக்கும், தெற்காசியாவுக்கும், ஈழ மக்களுக்கும் நல்லது. இதை இந்த மாவீரர் நாளில் உணர்த்துவோம் என்றார் நெடுமாறன்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
இலங்கையில் யார் ஆட்சி செய்தாலும் சிங்கள இனவாதம்தான் ஆட்சி செய்யும். ராஜபட்ச, சிறீசேனா, ரணில் விக்கிரமசிங்கே என யாராக இருந்தாலும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள்தான். மேலும், இந்தியாவுக்கும் இவர்கள் எதிரானவர்களே. 
இலங்கையில் சீனா காலூன்றத் தொடங்கிவிட்டது. எனவே, ஈழத்தமிழர்களுக்கு ஆபத்து என்பதைவிட, இந்தியாவுக்கும் பேரபாயம் என்பதை மத்திய ஆட்சியாளர்கள் உணர வேண்டும். இந்தியாவைச் சுற்றியுள்ள எந்தவொரு நாடும் நமக்கு நட்பு நாடாக இல்லை. தமிழீழம் மலர்ந்தால் மட்டுமே நமக்கு உண்மையான நட்பு நாடாக அமையும். ராஜபட்சவை இந்தியா அரசால் எதுவும் செய்ய முடியாது என்றார் நெடுமாறன். 
முன்னதாக, முற்றத்தில் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி வீர முழக்கங்கள் எழுப்பி அஞ்சலி செலுத்தினர். இதில், எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com